தலைப்பைப் பார்த்தாலே படத்தின் கதை புரிந்து போகும். ஆனால் ரெண்டு தலைக்கும் என்ன பிரச்சனை என்பது படத்தைப் பார்த்தால் மட்டுமே தெரியும்.
உலக சினிமா வழக்கப்படியே ஒரு தல கோடீஸ்வரர். இன்னொருவர் ஏழை. ஆனால், தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. தலைவலி வந்தால் அவர் ஏழை. ஒரு கால் இல்லாமல் செயற்கைக் காலோடு வந்தால் அவர் கோடீஸ்வரர்.
இரண்டு தலைகளும் அருண் விஜய்தான் என்று சொல்லத் தேவையில்லை. பணம் இல்லாதவர் சித்தி இத்னானியை சிறுவயது முதலே நட்பாகி, பின்னர் காதலாகிக் கசிந்து உருக, பணம் படைத்தவரோ “பெண்களை நம்பாதே ..” என்று அட்வைஸ் பண்ணுகிறார்.
அட்வைஸ் செய்த அவர் வாய்க்கு சர்க்கரை போடும் விதமாக அவர் பணத்தை அடைய அவரையே போட்டுத் தள்ள சித்தி தான் காதலனுக்கு அட்வைஸ் கொடுக்க, அதன் முடிவு என்ன ஆனது என்பதுதான் கதை.
எப்போதும் ஸ்மார்ட்டாக இருக்கும் அருண்விஜய் இதிலும் அப்படியே. மனிதர் சார்ஜ் ஏற்றிய EV காராக எனர்ஜி குறையாமல் பொளந்து கட்டுகிறார். ஆனால், இருவருக்கும் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்க வேண்டாமோ..?
ஹேர் ஸ்டைல் மட்டுமே வித்தியாசமாக இருக்க, அதுவும் அடுத்த காட்சியில் ஒன்று போலவே ஆகிறது. ஆனாலும், திரைக்கதை தரும் மாற்றம் எந்தக் குழப்பமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது.
நாயகி சித்தி இத்னானி, பணத்தாசை பிடித்து அலைகிறார். கடைசி வரையில் திருந்தாத கேரக்டரில் இப்படி நடிக்க எப்படி ஒத்துக் கொண்டாரோ? நல்ல பேமெண்ட்டோ..?
மெயின் வில்லன் ஹரிஷ் பெராடியின் அறிமுகம் டெர்ராக இருந்தாலும் அவர் ஒன்றுமே செய்யவில்லை.
ஆனால், ஆள் மாறாட்ட arun விஜய்யை அரும்பாடு பட்டு கண்டுபிடிக்கும் ஜான் விஜய்க்கும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
யாராலும் அடக்க முடியாத அருண் விஜய்யை முடித்து விட முயலும் தன்யா ரவிச்சந்திரன், கார் டிக்கியில் இருந்து கைத்துப்பாக்கியை எடுத்து தன் பின்னால் செருகிக் கொண்டு கிளம்புகிறார்.
துப்பாக்கியை காரில் வைத்த இடம் சரியில்லை. தனக்குள் செருகிக் கொண்ட இடமும் சரியில்லை. அதன் ‘ பின் விளைவை’ நினைத்து நமக்கே பயமாக இருக்கிறது.
டிஜோ டாமியின் ஓளிப்பதிவு படத்தை ஆங்கிலப் படம் போல் உணர வைக்கிறது.
சாம்.சி.எஸ் இசை வழக்கம்போல் நம்மை பயக்குறுத்தாமல் கதைக்கேற்ற பயணித்திருக்கிறது. “கண்ணம்மா..” பாடல் இதமாக இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் கிரிஷ் திருக்குமரன், நிறைய லாஜிக் மீறல்கள் நிகழ்த்தி இருக்கிறார். எதுவும் நம்பகமாக இல்லாதது திரைக்கதையின் பலவீனம்.
ஏஐ காட்சிகளுக்கு படத்தில் நிறைய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
தொழில் நுட்ப ரீதியாக தரமான படமாக இருப்பது படத்தின் பலம். லாஜிக் பார்க்காமல் வரும் ஆக்ஷன் விரும்பிகள் ரசித்துப் பார்க்கலாம்.
ரெட்ட தல – குவாலிட்டி ட்ரீட்..!
– வேணுஜி