January 22, 2025
  • January 22, 2025
Breaking News
January 22, 2025

பாட்டல் ராதா திரைப்பட விமர்சனம்

By 0 31 Views

‘குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்…’ என்பது மனப்பாடமாக மனதில் பதிந்து விட்டாலும் குடிகாரர்கள் குடியை விட்ட பாடு இல்லை. அவர்களைக் கொஞ்சமாவது யோசிக்க வைக்கும் முகமாக காலத்துக்கு காலம் “குடிக்காதீர்கள்..!” என்கிற அறிவுரையுடன் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதில் அறிவுரையோடு நிறுத்தாமல் குடி எல்லை மீறிப் போய் குடிப்பழக்கம் குடி நோயாகவே மாறிவிட்டவர்கள் என்ன செய்யலாம் – எப்படித் திருந்தி வாழலாம் என்பதை நேர்மறை சிந்தனையோடு முதல் முதலாக சொல்லி இருக்கும் படம் இது.

அப்படி இதில் குடி நோயாளியாக மாறிப்போனவர் குரு சோமசுந்தரம். கட்டிடக்கலையில் டைல்ஸ் பதிப்பதில் விற்பன்னரான அவர், ‘ டைல்ஸ் ராதாமணி ‘ என்று அழைத்த காலம் போய் ‘பாட்டல் ராதா’ என்று ஊரார் கேலி பேசும் அளவுக்குக் குடி நோயாளியாகிப் போகிறார். 

காதலி சஞ்சனா நடராஜனைக் கைப்பிடித்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை ஆகியும் குடிப்பழக்கத்தை விட முடியாமல் போன அவரது தொந்தரவுகள் எல்லை மீறிப் போகவே வேறு வழியில்லாமல் அவரைக் குடி நோயாளிகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுகிறார் சஞ்சனா. 

அங்கே அவர் எதிர்பாராத துன்பங்கள் எல்லை மீறிப் போக, அங்கிருந்து தப்பித்ததும் விளைவு என்ன ஆனது, அதன் பிறகான வாழ்க்கை எப்படிப் போனது என்பதை முழுதும் அழுகாச்சியாக சொல்லாமல் மனதில் தைக்கும் அளவுக்கு உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் தினகரன் சிவலிங்கம்.

ஏற்கும் பாத்திரங்களுக்கு எள்ளளவும் குறையில்லாமல் நியாயம் செய்துவிடும் ‘ பட்டறை ‘ தீட்டப்பட்ட நடிகர் குரு சோமசுந்தரத்துக்கு இந்த பாட்டல் ராதா வேடம் பாட்டலுக்கேற்ற மதுவாய் பொன் நிறம் மாறாமல் இருக்கிறது.

ஒரு குடி நோயாளி வாழ்வில் என்னவெல்லாம் அவமானங்கள் பட நேருமோ அத்தனையையும் அற்புதமாக தன் நடிப்பின் மூலமாக வெளிக்காட்டி இருக்கிறார் சோமு. “நான் குடிக்கக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன் ஆனா திடீர்னு என்னமோ ஆயிடுது..!” என்று சஞ்சனாவிடம் அவர் மருகும் போது நமக்கே பாவமாக இருக்கிறது. 

அவரது அத்தனை தொல்லைகளையும் பொறுத்துக் கொண்டு வாழவும் முடியாமல் சாகவும் துணிவில்லாமல் பாத்திரமாகவே வாழும் சஞ்சனாவின் நடிப்பும் அபாரம். 

“நான் வாழ வைக்கிறேன் வான்னு ஒவ்வொருத்தனும் கையைப் பிடிச்சு இழுக்கிறான்… சேலைக்குள் கை விடுறான்… அம்மணமாக நிற்கிறான்… என்றெல்லாம் அவர் சொல்லும்போது நமக்கு பகீர் என்கிறது. 

அதன் காரணமாகவே ஒரு கட்டத்தில் அவர் இன்னொரு இளைஞன் மீது நேசம் கொள்வதாக வருவதை நாம் தவறாக நினைக்க முடியவில்லை. அங்கே நிற்கிறார் இயக்குனர்.

கடைசி காட்சியில் அவர் பேசுகிற இரண்டு நிமிட வசனம் நம் கண்களில் கண்ணீரைத் துளிர்க்க வைத்து விடுகிறது.

இருவரின் குழந்தைகளாக வரும் சிறுவன், சிறுமியும் மனதில் பதிகிறார்கள்.

வழக்கமாக தாதா, ரவுடி போலீஸ் என்றெல்லாம் வந்த ஜான் விஜய்யை குடிநோயாளிகள் மறுவாழ்வு மையத்தின் பொறுப்பாளராக பார்த்தது மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. தன் வாழ்வில் குடியால் நேர்ந்த கொடுமையைக் கூட அவரது அசால்டான பாணியிலேயே சொல்லிவிட்டு, சோமுவை அவர் வழியிலேயே போய் திருத்துவது நன்று.

யார் வசனம் எழுதினாலும் அதைத் தன் பாணியில் பேசத் தெரிந்த நகைச்சுவை நடிகர்கள் எப்போதும் வென்று விடுவார்கள். அந்த வரிசையில் நமக்கு கிடைத்திருக்கிறார் மாறன். அவர் வரும் காட்சிகள் எல்லாம் மாறாத கலகலப்பானவை.

ஹீரோவாக எல்லாம் நடித்து விட்ட ஆண்டனி இதில் நண்பனாக ஒரு சிறு வேடம் ஏற்று இருப்பது பாராட்டத்தக்கது.

இவர்களுடன் ‘ஜமா’ பாரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா உள்ளிட்டவர்கள் தாங்கள் ஏற்ற பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்..

இசை ஞானியை பின்பற்றி இசை அமைப்பவர்களில் குறிப்பிடத்தகுந்த திறமைசாலி ஷான் ரோல்டன். இந்தப் படத்தின் உணர்வு கலையாமல் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மயக்கி இருக்கிறார் ஷான்.

ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவு ஒரு வாழ்வைக் கண்முன் காட்டி இருக்கிறது.

குடியிலிருந்து விலகி மறுவாழ்வு வாழ விரும்புவோருக்கு அந்த மையங்கள் இப்படித்தான் இருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

முன்பாதியின் கலகலப்பு பின் பாதியில் மிஸ்ஸிங். ஆனால் இந்தக் கதையை இப்படித்தான் சொல்ல முடியும்.

ஆனால், இதுபோன்ற விழிப்புணர்வு படங்கள் எவ்வளவுதான் வந்தாலும் ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது…’ என்பது போல் ‘குடிகாரர்களாக நினைத்துத் திருந்தாவிட்டால் குடியையும் ஒழிக்க முடியாது…’ என்பதுதான் சுடும் நிஜம்.

பாட்டல் ராதா – சரக்குள்ள படம்..!

– வேணுஜி