இந்தியாவை முகலாயர்கள் பெரும்பான்மையாக ஆண்ட 14-ம் நூற்றாண்டு பகுதியில் நடக்கும் கதை.
அப்போது திருவண்ணாமலை பகுதியில் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த வல்லாள மகாராஜா பற்றியும் அவரது அதிகாரத்தின் கீழ் ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்களான காடவராயர்கள் பற்றியும் அவர்கள் மேற்கொண்ட முகலாய எதிர்ப்பு பற்றியும் இந்த படத்தில் மோகன்.ஜி பேசியிருக்கிறார்.
கடந்த திரௌபதி முதல் பாகத்தில் தமிழகத்தில் நிலவும் சாதிய விஷயங்களை அலசி இருந்த அவர், இந்தப் படத்தில் மத ரீதியாக முகலாயர்கள் காலத்தில் இந்துக்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்கள் என்று சொல்ல முயற்சித்து இருக்கிறார்.
முகலாயர்கள் ஆட்சி கலத்தில் குறிப்பாக முகமது பின் துக்ளக்கின் அதிகாரத்தின் கீழ் நடந்து வந்த ஆட்சியில் கடுமையான வரி விதிக்கப்பட்டு அந்த வரியை செலுத்தாதவர்கள் இஸ்லாத்துக்கு மாற வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்து, அதையும் மீறுபவர்கள் கொல்லப்பட்டதில் அதிர்ந்த வல்லாள மகராஜா அதை ஒரு முடிவுக்கு கொண்டு வர தன் கருட பொறுப்படையில் இருந்த காடவராயர் பாசம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறார்.
அதன் விளைவுகளும், முடிவும் என்ன என்பதுதான் கதை.
வீரசிம்ம காடவராயர் பாத்திரத்தில் நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி, இந்த பாத்திரத்துக்காக கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. மயிர் நீத்தால் உயிர் நீக்கும் கவரிமான் போல தொட்டதற்கெல்லாம் அவர் உயிரை விட துணிவதும், மனைவியே தன்னை சந்தேகப்பட்ட போது மருகுவதும் அவரது பாத்திரப்படைப்பை மேன்மைப்படுத்துகின்றன.
நாயகியாக திரெளபதி தேவி கதாபாத்திரத்தில் வரும் ரக்ஷனா இந்துசூடன்தான் படத்தின் ஹைலைட். அந்த விடுக்கான அழகு எடுப்பாக இருக்கிறது.
கணவனை ஆனாலும் கடமை தவறினால் அதற்கான தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்கிற பிடிவாதத்தில் மன்னர் குல மாணிக்கமாக தெரிகிறார் ரக்ஷனா.
வல்லாள மகராஜாவாக நடித்திருக்கும் நட்டியின் வசன உச்சரிப்பில் தமிழ் சுத்தமாக இருக்கிறது. ஆனால் அவருக்கு ஒப்பனை செய்தவர்கள் இன்னும் கவனமாக அதை செய்திருக்கலாம்.
முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிராக் ஜானியின் தோற்றமே அவரது இலக்கணத்தை சொல்லி விடுகிறது. ஆகாதவர்களைக் கொன்று அவர்களை சமைத்து அதைக் கொடுத்து உறவினர்களை உண்ண வைப்பது கொடூரம்.
தம்கானியாக நடித்திருக்கும் தினேஷ் லம்பாவும் அப்படியே.
ஆனால் சொல்லி வைத்தார் போல் முகலாய அரசர்கள் அனைவருமே பெண் பித்தர்களாக இருப்பதும், துக்ளக்கை திருவண்ணாமலை வைத்து தீர்த்து கட்டுவதும் வரலாற்று நெருடல்.
துக்ளக்கின் மனைவியாக வரும் தேவயானி சர்மா, சம்புவராயர் வேடமேற்றிருக்கும் வேல ராமூர்த்தி, மதம் மாறிய பரணி, திவி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இந்த நியாயமான பட்ஜெட்டுக்குள்ளேயே ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் சுந்தர், பிரம்மாண்ட படத்தின் நேர்த்தியை கொடுத்திருக்கிறார்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி செயலும் மிரட்டி இருக்கிறார்.
பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன்.ஜி எழுதி இருக்கும் கதை வசனங்கள் வழக்கமான வரலாற்று படங்கள் போல் தமிழோடு பெரிதாக விளையாடவில்லை. என்ன வேண்டுமோ அதை மட்டும் பேசியிருக்கிறார்கள்.
கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
நடந்த வரலாற்றை கையில் எடுத்துக்கொண்டு அதில் கற்பனையையும் சேர்த்து படமாக கொடுத்திருக்கும் மோகன் ஜி அந்த கற்பனைக்கு இன்னும் நம்பகத்தன்மை கொடுத்திருக்க முடியும்.
கூகுளில் தேடினாலே எல்லா செய்திகளும் கிடைத்துவிடும் காலம் இது என்ற அளவில் இன்னும் சரித்திர ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் காட்சிகளை அமைத்திருந்தால் முக்கியமான வரலாற்று படமாக இது இருந்திருக்கும்.
ஆனாலும் இந்த அரிய முயற்சியை நிகழ்த்தி காட்டி இருப்பதில் வென்று இருக்கிறார் அவர். அந்த முயற்சிக்கு பாராட்டுகள்.
‘திரெளபதி 2’ – மறந்த சரித்திரம்..!
– வேணுஜி