ஆந்திரப் படவுலகமும், ஆந்திர திரைப்பட ரசிகர்களும் இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா போகும்வழியில் மண்ணெடுத்து பெண்கள் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள் என்கின்றன ஆந்திர மீடியாக்கள்.
அப்படிப்பட்ட அவரை நேருக்கு நேர் அருகாமையில் நேற்று சென்னையில் நடந்த ‘நோட்டா’ பத்திரிகையாளர் சந்திப்பில் காண முடிந்தது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் ‘நோட்டா.’ விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.
Nota Press Meet
படத்தின் அனைத்து முக்கிய கலைஞர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் நாயகன் விஜய் தேவரகொண்டா பேசியதிலிருந்து…
“இங்கே நடந்த என் முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், எண்ணித்துணிக கருமம் என்கிற திருக்குறளை திரும்பத்திரும்ப மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருந்தேன்.. ஆனால் இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன்…
இயக்குனர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப்படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி மரண வெயிட்டிங் என கமெண்ட் போடப்பட்டு இருந்தது.. அதேபோல நானும் இந்தப்படத்திற்காக மரண வெயிட்டிங்..
இந்தப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசை.” என்றவர் ‘சொன்னது போலவே திருக்குறள் ஒன்றை அழகாக உச்சரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
வாங்க விஜய்… வாங்க..!