May 18, 2024
  • May 18, 2024
Breaking News
March 21, 2024

ஹீரோ அமையாமல், தானே ஹீரோவான வெப்பம் குளிர் மழை தயாரிப்பாளர்

By 0 105 Views

ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ‘வெப்பம் குளிர் மழை’ படத்தைத் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் திரவ். இதில் நாயகியாக புதுமுகம் இஸ்மத் பானு நடிக்க. இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

படம் குறித்து பகிர்ந்து கொள்ள தயாரிப்பாளரும் ஹீரோவுமான திரவ், இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து, நாயகி இஸ்மத் பானு, இசையமைப்பாளர் சங்கர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

“வெப்பம் குளிர் மழை’ என்பது இயற்கையில் நடக்கக்கூடிய ஒரு விளைவு. எப்படி வெப்பத்தால் நீர் ஆவி ஆகி பின் அது குளிர்ந்து மழையாக வருகிறதோ அது போலவேதான் திருமண வாழ்வில் குழந்தை பிறப்பும் இயல்பாக நிகழும் விளைவு.

இன்றைய சூழலில் குழந்தையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. அது நடப்பது நம் கையில் இல்லை என்ற போதிலும் அதை மிகப்பெரிய பிரச்சனையாக இந்த சமூகம் பார்க்கிறது, அந்தத் தனி மனிதனின் பிரச்சனை எப்படி சமூகப் பிரச்சனையாகி மாறி அவர்களுக்கான அழுத்தத்தைத் தருகிறது என்பதை இந்தப் படம் சொல்கிறது..!” என்றார் படத்தின் இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து.

அவர் மேலும் தொடர்கையில், “இப்போது உங்களுக்கு திரையிடப்பட்ட டிரைலரில் இடம் பெறும் கணவன் மனைவி இடையிலான பிரச்சனை எப்படி உங்களுக்குள் பல கேள்விகளை எழுப்புகிறதோ, அதுபோல் திரைப்படமும் பல கேள்விகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தும்.

நானும் தயாரிப்பாளர் திரவ்வும் ஒன்றாக ஒரு படத்தில் டைரக்ஷன் பிரிவில் வேலை பார்த்தோம். அப்போதிலிருந்தே நாங்கள் நண்பர்கள்தான். இந்நிலையில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை அவரிடம் படிக்கக் கொடுத்திருந்தேன். படித்துப் பார்த்துவிட்டு இதைப் படமாக தயாரிக்கிறேன் என்றார்.

நாயகனாக நடிப்பதற்கு பல ஹீரோக்களை பார்த்தோம். ஒருவரும் செட் ஆகாத நிலையில் நானே இந்த படத்தில் நடிக்கிறேன் என்று அவரே இறங்கி நடித்து விட்டார்..!” என்றார்.

படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான திரவ்விடம், “நடிக்கும் ஆசையினால் தான் நீங்கள் படத்தைத் தயாரிக்க ஒத்துக் கொண்டீர்களா..?” என்று கேட்டபோது, “நிச்சயமாக இல்லை. இயக்குனர் சொன்னது போல் பல ஹீரோக்களிடம் பேசினோம். அது ஒத்து வராத நிலையில்தான் நான் நடிப்பது முடிவானது. அந்த அளவுக்கு அந்த ஸ்கிரிப்ட் என் மனதுக்குள்ளே புதைந்து போனது.

நான் ஏற்கனவே கிஷோரை வைத்து ‘மெல்லிசை’ என்ற படத்தை இயக்கியிருக்கிறேன். அந்த படத்தின் வெளியீட்டுக்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான், இந்தக் கதை என்னிடம் வந்தது. கதை நன்றாக இருந்ததோடு, நான் பார்த்த மனிதர்களின் வாழ்க்கையை நினைவுபடுத்தியது.

குறிப்பாக என் உறவினர்களில் சிலர் இதுபோன்ற பிரச்சனையை எதிர்கொண்டார்கள். அதனால் இந்த படத்திற்கு உதவி செய்ய முன்வந்தேன்.

ஹீரோக்களை தேடிக்கொண்டிருந்த போது அமையவில்லை. அப்போதுதான் இயக்குநரிடம் நானே நடிக்கட்டுமா? என்று கேட்டேன். ஆனால், அவர் தயங்கினார். உடனே படம் தொடர்பான இரண்டு காட்சிகளை நடித்து குறும்படமாக எடுத்து அவருக்கு அனுப்பினேன். அதை பார்த்து அவர் சம்மதம் தெரிவித்தார்.

படத்தின் கதை தற்போதைய சூழலில் சொல்லப்பட வேண்டிய ஒன்று என்பதால்தான் தயாரிக்க முன் வந்தேன்..!” என்றார்.

நாயகி இஸ்மத் பானு படம் பற்றிக் கூறுகையில், “கதாநாயகியாக நடிப்பது என் நோக்கம் அல்ல. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் எந்தக் கேரக்டர் ரோலிலும் நடிப்பதாக இருந்தேன். நான் மீடியாவில்தான் பணிபுரிந்தேன். பிறகு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினேன்.

இந்தப் படத்தில் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னை ஒப்பந்தம் செய்யும் போதே, கணவன் – மனைவி இடையே இருக்கும் நெருக்கமான காட்சிகள் இருக்கும். சம்மதமா? என்று கேட்டார்கள்.

நெருக்கம் என்பது, தம்பதிக்குள் இருக்கும் அந்நியோன்யம் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் முதலிலேயே அதை சொல்லிவிட்டார்கள். அதன்படி, நானும் மனைவி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறேன்..!” என்றார்.

இசையமைப்பாளர் சங்கர், “நான் குற்றம் கடிதல் படத்துக்கு இசை அமைத்திருந்தேன். இந்தப் பட இயக்குனர் வேதமுத்து அந்தப் படத்தில் பணி புரிந்ததால் ஏற்பட்ட பழக்கத்தில் இந்தப் படத்திற்கும் எனக்கு வாய்ப்பைத் தந்தார். படத்தின் கதாபாத்திரமாக இதில் என் இசை பயணிக்கும்..!” என்று தெரிவித்தார்.

இப்படத்தின் நட்சத்திரங்களோடு சேர்ந்து கிராமத்து மக்கள் பலரும் நடித்திருக்கிறார்களாம். குறிப்பாக இயக்குநரின் அம்மா, சகோதரி என்று அவரது உறவினர்கள் சிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்களாம். 

 

 

வரும் மார்ச் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது ‘வெப்பம் குளிர் மழை’

கோடை வெப்பத்தைக் குளிர்விக்குமா இந்த மழை என்று பார்ப்போம்.