May 18, 2024
  • May 18, 2024
Breaking News
February 24, 2023

வெள்ளிமலை திரைப்பட விமர்சனம்

By 0 297 Views

வழக்கமான எந்த சினிமா இலக்கணங்களுக்குள்ளும் இல்லாமல் ஒரு சினிமா எடுத்துக்காட்டி விட வேண்டும் என்கிற ஆவலில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ‘ஓம் விஜய்’ என்பது புரிகிறது.

எந்தப் பெரிய நட்சத்திரத்தின் பின்னாலும் போகவில்லை அவர். மாறாக படங்களில் சிறிய குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சூப்பர் குட் சுப்பிரமணியை இந்தப் படத்தைத் தாங்கிச் செல்லும் பிரதான பாத்திரமாகவே படைத்திருக்கிறார்.

கதாநாயகன் என்று ஒரு பாத்திரம் இல்லாமல் கதையே நாயகனாகி படத்தைத் தாங்கி செல்கிறது. முழுதும் சூப்பர்ஹிட் சுப்பிரமணியின் முதுகிலேயே அந்த பாரம் வைக்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன் இந்தத் தமிழ் மண்ணின் – இந்தத் தமிழ் மருத்துவத்தின் பெருமைகளை கிடைத்த இந்த ஒரு வாய்ப்புகள் சொல்லிவிட வேண்டும் என்கிற வேகமும் இயக்குனர் ஓம் விஜய்யிடம் இருக்கிறது.

உலகின் அத்தனை வியாதிகளையும் தீர்க்கக்கூடிய பச்சிலைகள் அடங்கிய வெள்ளி மலையின் விஸ்வரூபம் முதல் காட்சியிலேயே நமக்கு காட்டப்படுகிறது. அதன் அடிவாரத்தில் இருக்கும் கீழ் வெள்ளி மலை கிராமத்தில் பரம்பரை வைத்தியராக இருப்பவர் ஒரு பூஜைக்கு சென்று விட அந்த நேரம் பார்த்து உடல்நலம் குன்றிய ஒருவரை அவர் வீட்டுக்கு அழைத்து வருகின்றனர்.

வீட்டில் இருக்கும் வைத்தியரின் 10 வயது மகன் ஏதோ ஒரு மருந்து கொடுக்க முயல அதற்குள் அந்த நபர் இறந்து விடுகிறார். இந்த விஷயம் காட்டுத் தீயாக, அந்தச் சிறுவன் கொடுத்த தவறான மருந்தால்தான் நோயாளி மரணம் அடைந்தார் என்று அவதூறு பரப்பப்பட்டு அந்த வைத்தியரின் குடும்பத்தை ஊரே ஒதுக்கி வைக்கிறது.

அந்தச் சிறுவன் வளர்ந்து, அவருக்கும் ஒரு பெண் பிறந்து அவளும் வயதுக்கு வந்த நிலையில் கதை தொடர்கிறது. அந்த பாத்திரத்தில் சூப்பர்குட் சுப்பிரமணியும் அவரது மகளாக அஞ்சு கிருஷ்ணாவும் நடித்திருக்கின்றனர்.

இழந்த தங்கள் மருத்துவப் பெருமையை மீண்டும் பெற வேண்டுமென்று சூப்பர்குட் சுப்பிரமணி ஆசைப்பட அது நடந்ததா என்பதுதான் கிளைமேக்ஸ். அந்த கிளைமாக்ஸுக்குள் நாம் எதிர்பாராத ஒரு டுவிஸ்டும் கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறார் இயக்குனர்.

சுப்பிரமணியைத் தவிர ஏனைய பாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்களே. 

அதை உணர்ந்து சுப்பிரமணியும் தன்னால் ஆனவரை தன் பாத்திரத்திற்கு நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார். இழந்த தங்கள் பெருமையை மீண்டும் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருப்பதாகட்டும், தான் கொடுக்கும் மருந்து வேலை செய்யவில்லை என்று அறிந்து துடிப்பதாகட்டும், கண் முன்னால் வினோத வியாதியால் மக்கள் இறந்து கொண்டிருக்க, அதை தடுக்க முடியவில்லை என்ற சோகத்தில் உயிரை விடுவதாகட்டும் சூப்பராகவே நடித்து ‘குட்’ என்று பாராட்டுப் பெறுகிறார் சுப்பிரமணி.

அவரது மகளாக நடித்திருக்கும் அஞ்சு கிருஷ்ணாவும் கூட நடிப்பு என்று தெரியாத நடிப்பில் ஆச்சரியப் படுத்துகிறார். நடிகைக்குரிய எந்த புற அழகோ ஓப்பனையோ இல்லாமல் மலை கிராமத்துப் பெண் எப்படி இருப்பாளோ அப்படியே இருக்கிறார் அவர்.

அவர் காதலிக்கும் பாத்திரத்தில் வரும் சுபாஷ் வீராவை வேண்டுமானால் கதாநாயகன் என்று சொல்லிக் கொள்ளலாம். காரணம் இருவரும் காதலிக்கும் சில காட்சிகள் வருகின்றன.

‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோய் எப்படி சென்னையில் இருந்து பரவியதோ, அப்படியே இதில் ஒரு அரிப்பு நோயையும் சென்னையிலிருந்து பரவியதாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். சென்னை மீது அப்படி என்ன அவருக்கு கோவமோ தெரியவில்லை.

சுப்பிரமணி வீட்டுக்கு அருகில் இருக்கும் பயில்வான் என்ற பாத்திரமும் அவரது மகன் பாத்திரமும் மனதில் பதிகின்றன. அதுவும் அரிப்பு நோய் தாளாமல் பயில்வானின் மகன் உயிரை விடும் காட்சி நெகிழ வைக்கிறது.

காடு, மலை, வனாந்தரம் என்று சுற்றிச் சுழன்று கேமராவை தோளில் தூக்கிப் படமாக்கி இருக்கும் ஒளிப்பதிவாளர் மணி பெருமாளுக்கு மொத்த பாராட்டுகள் போய் சேர வேண்டும். அப்படி ஒரு அர்ப்பணிப்பான உழைப்பு.

ரகு நந்தனின் பின்னணி இசையும் இசையில் அமைந்த பாடல்களும் படத்துக்கு பொருத்தமாக ஒலிக்கிறது. 

தமிழ் மருத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் நல்ல களத்தைக் கையில் எடுத்தும் அது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாமல் மேம்போக்காக மட்டுமே சொன்னதில் மேற்படி நல்ல விஷயங்கள் எல்லாம் அடி பட்டுப் போய் விடுகின்றன.

நோயின் பெயர் குறித்தோ, அதைப் போக்கும் மூலிகை குறித்த மருத்தவக் குறிப்போ எதுவுமே இல்லை. ஒரே ஒரு இடத்தில் லெமன் கிராஸ் பற்றி நாம் எல்லாம் அறிந்த விஷயத்தை மட்டுமே மேற்கொள் காட்டுகிறார் இயக்குனர்.

வெள்ளிமலை – நுனி மூலிகை முயற்சி..!