மார்பில் ஐந்து குண்டுகள் துளைத்திருக்க, மலர்ந்து கிடந்த பாலகன் பாலச்சந்திரன் பிரபாகரனை அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியுமா..? மரணத்திலும் மறக்க முடியாத அந்தக் காட்சி உலகம் முழுக்க ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானது.
அந்த நிகழ்வை வைத்து ஒரு புனைவான படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் அன்புமணி.
பல்வேறு அரசியல் நெருக்கடிகள் மற்றும் நிலைப்பாடுகள் காரணமாக கதை ஒரு தீவில் நடக்கிறது என்று மட்டும் பொதுவாகச் சொல்லப்படுகிறது. இலங்கை என்று சொல்லப்படவில்லை.
அதேபோல் அந்தத் தீவுக்கு விவசாயம் செய்ய வந்த இனத்தினர் தங்கள் உரிமைப் போரை இயக்கமாக ஆரம்பித்து, அதற்குத் தலைமை தாங்கி வந்த அன்பழகனைப் போரில் சுட்டுக்கொன்று விட்டதாக அந்த நாட்டு ராணுவம் அறிவிக்கிறது.
அந்த இயக்கத்துக்கு ஆதரவு தந்த அத்தனை பேரையும் சிறைப் பிடித்து வந்து விசாரணை என்ற பெயரில் கொட்டடியில் அடைத்திருக்கின்றனர். அங்கிருக்கும் பெண்களை அந்நாட்டு ராணுவம் இரவு தோறும் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள அதன் விளைவாக ஒரு பெண் கர்ப்பமுற்று குழந்தையும் பெற்றெடுக்கிறாள்.
அவளும் சித்திரவதைப் பட்டு இறக்க, அந்தக் குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூட வழியில்லாமல் போகிறது. இந்தக் கண்ணீர் நிகழ்வுகளுக்கு அடுத்தபடியாக, ஒரு சிறுவனைக் கொண்டு வந்து கொட்டடியில் அடைக்கிறார்கள்.
கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் இனத்தலைவர் அன்பழகனின் மகன் கண்ணன்தான் அந்தச் சிறுவன் என்கின்றனர். அவனையும் விசாரணை செய்து கொல்வதுதான் அவர்களது நோக்கமாக இருக்கிறது…
அந்த நாட்டு ராணுவ வீரர் சரவணன் அவனைக் காவல் காக்க அனுமதிக்கப்படுகிறார். எதிரியின் குழந்தையும் எதிரிதான் என்கிற ரீதியில் அவனை நடத்துகிறார். ஆனால், அதே வயதில், அதே பெயரில் இருக்கும் தன்மகனை போரின் காரணமாக பிறந்ததிலிருந்து காணாமல் இருக்கும் அவர், அந்தக் காரணத்தாலேயே இயக்கத் தலைவர் மகன் கண்ணனின் மீது மெல்ல மெல்ல அன்பு செலுத்த ஆரம்பிக்கிறார்.
தன் எதிரியாக கருதுபவரின் மகனுக்கும் அவனை கொல்லத் துடிக்கும் படையின் வீரருக்கும் அந்த சில நாட்களில் என்ன விதமான ரசவாதம் ஏற்பட்டது என்பதுதான் இந்தப் படத்தின் அடி நாதம்.
பிஜு ரவீந்திரன் கதை திரைக்கதையை இயக்கியிருக்கும் அன்புமணியே இந்தப் படத்தில் ராணுவ வீரர் சரவணன் பாத்திரத்தையும் ஏற்றிருக்கிறார்.
ஆரம்பத்தில் அவரைப் பார்த்தால் நமக்கு கோபமாக வருகிறது. அதிலும் கொட்டடியில் இருந்து தூக்கிக்கொண்டு வரப்பட்ட ஒரு தமிழ்ப் பெண்ணை அவர் பலாத்காரம் செய்யப் போகும் நேரம் அவர் மகன் கண்ணனிடம் இருந்து அழைப்பு வர, பலாத்காரத்தை தவிர்க்கும் போது அவர் மீது சின்ன நம்பிக்கை ஏற்படுகிறது.
அது போகப் போக பலப்பட்டு கடைசியில் அவர் மீதும் நாம் நேசம் கொள்கிறோம். தீவின் ஆதிக்க இனத்தவராக ராணுவத்தில் இருந்தாலும், அந்நாட்டு ராணுவத்துக்கு விசுவாசமானவராக இருந்தாலும், இயக்கத் தலைவர் சுட்ட குண்டு காலில் பாய்ந்திருந்தாலும் கூட மனசாட்சியுடன் அவர் நடந்து கொள்வது சிறப்பு.
அந்தக் காரணத்தாலேயே அவர் விசாரணைக்கு உள்ளாவதும் கூட நெகிழ்ச்சி.
இயக்கத் தலைவர் அன்பழகனின் மகன் கண்ணனாக வரும் மாஸ்டர் அத்வைத் அசத்தியிருக்கிறான். குழந்தைத் தனம் மாறாத பார்வையும் தெளிந்த பேச்சும் கொள்ளை கொள்கின்றன.
விசாரணை செய்யும் அதிகாரிகளிடம் தெள்ளத் தெளிவாகப் பேசும் அவன் தரும் விளக்கமே அவர்களுக்கு பயத்தை உருவாக்கி அவனைக் கொன்று விடத் திட்டமிட வைக்கிறது.
“போர் இல்லாம இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்..?” என்று அந்த பிஞ்சு நெஞ்சம் கேட்பது உலகெங்கும் எதிரொலிக்க வேண்டும்.
சரவணன் மகனாக வரும் மாஸ்டர் ஜோயலும் தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறான்.
பலாத்காரத்துக்கு உள்ளாக இருக்கும் ஒரு இளம் பெண் கேட்டுக்கொண்டதன் பேரில் அவளைக் கொன்றுவிடும் இளைஞனைத் தலைகீழாகக் கட்டி நையப் புடைத்த ராணுவத்தினர், “அவள் உன் காதலியா..?” என்று கேட்க, “இல்லை… அவள் என் சகோதரி…” என்று அவன் பதில் சொல்லும்போது நமக்கு இதயம் கனக்கிறது.
ஸ்ரீஜித் விஜயின் ஒளிப்பதிவு பதட்டமான படத்துக்கு மேலும் அச்சம் சேர்க்கிறது.
ரவி மேனனின் இசையில் பாடல்களும், ஆனந்த் ஜார்ஜின் பின்னணி இசையும் பொருத்தமாக இருக்கின்றன.
பட்ஜெட்டுக்குள் அமைந்த படத்தில் ‘அடிக்கிற மாதிரியும் இருக்கணும் ஆனா வலிக்கணும்..!” என்ற கைக்கட்டுக்குள் முடிந்தவரை இந்தப் படத்தை உணர்வு பூர்வமாக முடித்திருக்கிறார் அன்புமணி.
வீரத்தின் மகன் – அஞ்சு குண்டுகள் ஏந்திய அஞ்சா நெஞ்சன்..!
– வேணுஜி