November 22, 2024
  • November 22, 2024
Breaking News
September 29, 2023

வாழ்வு தொடங்குமிடம் நீதானே திரைப்பட விமர்சனம்

By 0 437 Views

ஆணும் பெண்ணும் காதலித்து போரடித்து விட்டதாலோ என்னவோ இந்தப் பட இயக்குனர் ஜெயராஜ் பழனியும் தயாரிப்பாளர் – நடிகை நீலிமா மற்றும் அவரது கணவர் இசையும் பெண்ணும் பெண்ணும் காதலிக்கும் இந்த படத்தை உருவாக்கி விட்டார்கள்.

ஷார்ட் பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இந்தப் படம் தயாராகி ஒளிபரப்பாகிறது.

தரங்கம்பாடியில் கடற்கரையோரத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி. அங்கே நாயகி நிரஞ்சனா நீதியாருக்கான திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நிரஞ்சனாவுக்கு அந்தத் திருமணத்தில் விருப்பமில்லாமல் ஏதோ ஒரு தவிப்பு இருப்பது சொல்லப்படுகிறது.

அது என்ன பிரச்சனை என்பது ஃப்ளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது. 

திருச்சியில் இருந்து தரங்கம்பாடிக்கு ஒரு டாக்குமென்டரி படம் எடுக்க வருகிறார் ஸ்ருதி பெரியசாமி. அவரை தங்கள் வீட்டில் தங்க வைக்கிறார் ஊர் பெரியவரான நிரஞ்சனாவின் அப்பா.

சுருதியை தன்னுடன் தங்க வைத்துக் கொள்ளும் போது தான் நிரஞ்சனாவுக்கு இனம் புரியாத ஈடுபாடு அவர் மேல் ஏற்படுகிறது அதே ஈர்ப்புதான் நிரஞ்சனா மீதம் சுருதிக்கு ஏற்படுகிறது.

இஸ்லாமிய வழக்கப்படி வாழ்ந்ததால் வெளியுலகை அறியாத நிரஞ்சனாவுக்கு ஸ்ருதி அவளது ஆசைகளை தீர்த்து வைக்க இருவரும் தன் பாலின ஈர்ப்பு ஏற்பட்டு ஃபயர் பற்றிக் கொள்கிறது. இருவரும் ஒரு இரவில் தங்கள் காதலைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

ஆனால் கட்டுப்பாடுகள் நிறைந்த நிரஞ்சனாவின் குடும்பம் அதற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே..? இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிரஞ்சனாவின் அப்பாவிடம் ஸ்ருதி பேச  என்னென்ன விளைவுகள் நடந்தன என்பதுதான் கதை.

இதுபோன்ற தன் பாலினச் சேர்க்கைக் கதைகளில் என்னதான் பெண்ணும் பெண்ணும் காதலித்தாலும் அந்தப் பெண்களில் ஒருவர் சற்றே ஆண் தன்மையுடன் இருப்பதை கவனிக்கலாம். அந்த வேடத்துக்கு ஸ்ருதி பெரியசாமி பக்காவாக பொருந்துகிறார்.

ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்து எப்படி காதலிப்பானோ அதே பாணியில்தான் ஸ்ருதியின் பார்வையும் நிரஞ்சனா மீது விழுகிறது. நிரஞ்சனாவும் ஒரு காதலனை எப்படி பார்ப்பாரோ அப்படியே நடந்து கொள்ள, இருவரும் உதட்டோடு உதடு வைத்து முத்தங்கள் பரிமாறும் வரை போய்விடுகிறார்கள்.

நிரஞ்சனாவின் கண்களும் உதடுகளும் மிக அழகாக இருக்கின்றன. நடிப்பும் நேர்த்தியாகவே இருக்கிறது.

தன்பாலின சேர்க்கையாளர்களின் உணர்வைச் சொல்ல வந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் முயற்சி பாராட்டத்தக்கது தான்.

ஆனால் திருமணம் செய்து கொள்ள சட்டத்தில் இடமில்லை என்பதுடன் அவர்கள் ஒன்றாக வாழ எந்த தடையும் இல்லை. இந்நிலையில் எங்கோ நடக்கும் இது போன்ற விஷயங்களை இந்தப் படம் பொதுமைப் படுத்த முயல்வது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

இது ஒரு சமூகப் பிரச்சனை என்றாலும் காலம் காலமாக பூரிப்போன கலாச்சாரத்தில் இருப்பவர்கள் உடனடியாக அதை விட்டு வெளியே வருவது இயலாத காரியமே.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இப்படி தன் பாலினச் சேர்க்கையாளர்கள் ஒருவித அதிர்ச்சியை தான் தருவார்கள் என்ற நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை மட்டும் குறி வைத்து சொல்லி இருப்பதில் எந்த நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.

அதேபோல் இஸ்லாமியர்கள் எப்போதும் ஒரு பிரச்சனைக்கு தயாராக இருப்பார்கள் என்பது போலவே நிரஞ்சனாவின் அப்பா பீரோவின் மேல் ஒரு கத்தியைத் தயாராக வைத்திருப்பதும், அதை எடுத்து சுருதியை வெட்ட வருவதும் தவறான சித்தரிப்பு.

சதீஷ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு கடல்புறத்தை கலை அழகுடன் பதிவு செய்து இருக்கிறது. தர்ஷன் ரவிக்குமார் இசை, இதம்.

சின்ன பட்ஜெட் படம் என்றாலும் அதை சுருட்டாமல் நியாயமான படமாக தந்திருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ் பழனி.

ஆனால் இது யாருக்கான படம் என்பது புரியவில்லை.

வாழ்வு தொடங்குமிடம் நீதானே – ஸ்ருதி பேதம்..!