March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நான் ஒரு கோடி சம்பளம் வாங்க கூடாதா – அப்புக்குட்டி
September 28, 2019

நான் ஒரு கோடி சம்பளம் வாங்க கூடாதா – அப்புக்குட்டி

By 0 734 Views

கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன்.

அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’ கதிரேசன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ‘வாழ்க விவசாயி’ படத்தின் டீஸரை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் இயக்குநர் பொன்னி மோகன் பேசுகையில்,

“வாழ்க விவசாயி என்று ஏன் படமெடுக்கவேண்டும் என்று தோன்றியது என்றால்,நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்.என்னுடைய தந்தையார் குள்ளமான உருவம் தான். ஆனால் பன்னிரண்டு அடிக்கு மேல் இருக்கும் ஏர் கலப்பையை தூக்கிக் கொண்டு கம்பீரமாக நடப்பார். எங்கம்மா காளைமாட்டை பிடித்துக் கொண்டு அதிகாலை மூன்று மணியளவில் வீட்டிலிருந்து வயலுக்கு நடந்து செல்வார்கள்.

நான் அந்த கலப்பையைத் தூக்க முயன்றிருக்கிறேன். என்னால் முடியாது. அதை அசைக்கக்கூட முடியவில்லை. அதே போல்காளை மாட்டின் அருகே செல்லக்கூட முடியாது. ஆனால் என்னுடைய அம்மா அதனை வசப்படுத்தி வைத்திருந்தார். அதனால் விவசாயிகளின் பெருமையை எடுத்துரைக்க வேண்டும் என்று எண்ணினேன்.

அத்தியாவசியமான உணவைத் தயாரிக்கும் விவசாயிகளைப் பற்றி இந்தப் படைப்பை உருவாக்கியிருக்கிறேன். அதற்கேற்றாற் போல் அப்புக்குட்டியும், வசுந்தராவும் அமைந்திருக்கிறார்கள். நான் சிறிய வயதில் நேரில் கண்டதை அப்படியே கண்முன் கொண்டு வந்தார்கள்…”என்றார்.

வசுந்தரா பேசுகையில்,“ இந்தப் படத்தின் இயக்குநர், நாயகன், தயாரிப்பாளர் ஆகியோர் விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்டவர்கள். அவர்கள் விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும், நேர்மையாகவும் ஒரு படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் படைப்பிற்கு என்னால் முடிந்த வரை ஒத்துழைப்பு அளித்திருக்கிறேன். இந்தப் படம் விருது பெறுவதைக் கடந்து அனைவருக்கும் பிடித்த கமர்சியல் அம்சம் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது..!”என்றார்.

நடிகர் அப்புக்குட்டி பேசுகையில்,“ நான் நடித்த படமொன்று மேடையிலேயே பிசினஸ் ஆகியிருக்கிறது. இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவேன்.நம்பிக்கையிருக்கிறது. பயப்படாதீர்கள். ஏன் நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடாதா?

என் பெற்றோர் விவசாய கூலித் தொழிலாளர்கள் தான். நான் ஏன் சென்னைக்கு வந்தேன் என்றால் விவசாயம் செய்வதற்கு நிலமில்லை. நிலமிருந்தால் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன். எனக்கு ஒரு வேளை சோறு போடக்கூட அம்மாவால் முடியவில்லை. என்னுடைய தேவைகளுக்காக நான் சென்னைக்கு வந்தேன்.

என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை நான் மனதார பாராட்டுகிறேன். இனிமேல் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன். அழகர்சாமியின் குதிரை படம் எப்படி எனக்குப் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்ததோ.. அதே போல் இந்த வாழ்க விவசாயி படமும் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்..!” என்றார்.