September 20, 2024
  • September 20, 2024
Breaking News
August 10, 2023

வான் மூன்று திரைப்பட விமர்சனம்

By 0 470 Views

எப்படிப்பட்ட காதலுக்கு ஆழம் அதிகம் என்று கேட்டால் இந்த பூமியில் அதற்கு பதிலே கிடைக்காது. அப்படி தோல்வியுற்ற காதல், ஜெயித்த காதல், முதுமையிலும் நிலைக்கும் காதல் என்று மூன்று பருவங்களில் மூன்று விதமான காதல்களைத் தொட்டுக்காட்டி இருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.முருகேஷ்.

பட ஆரம்பத்திலேயே தன் காதல் தோற்றுப் போனதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று நினைவற்ற நிலையில் அனுமதிக்கப்படுகிறார் ஆதித்யா பாஸ்கர். அதே மருத்துவமனையில் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டு அம்மு அபிராமியும் தற்கொலை முயற்சிக்காக அனுமதிக்கப்படும்போது இவர்கள் இருவரும் காதலித்ததாகத்தான் நம்மால் யூகிக்க முடிகிறது.

ஆனால் அவர்கள் இருவருக்கும் வேறு வேறு காதலர்கள் இருக்க இவர்கள் இருவரும் இழந்த காதலை தோல்வியின் வழியே மீட்டெடுத்தார்களா என்று ஒரு கதையை ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, இன்னொரு பக்கம் காதலில் வென்ற வினோத் கிஷன் – அபிராமி வெங்கடாசலம் காதலையும் சொல்கிறார் இயக்குனர். ஆனால் அதில் என்ன பிரச்சனை..?

இருக்கிறது. அபிராமி வெங்கடாசலத்திற்கு கர்ப்பம் தரித்து இருக்கிறதா என்று பரிசோதனை செய்யும்போது இன்னொரு அதிர்ச்சியான விஷயம் தாக்குகிறது. அவர் எந்நேரமும் மிகப்பெரிய ஸ்ட்ரோக் தாக்கும் அபாயத்தில் இருக்கிறார். அதற்கு உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். தன்னை வளர்த்த அப்பாவை காதலுக்காக உதறிவிட்டு வந்திருக்கும் அபி இப்போது அப்பாவை நினைத்து ஏங்க, இந்த எபிசோடு என்ன ஆகிறது என்பது இன்னொரு பக்கம்.

மூன்றாவது வானாக விரிகிறது வயது கடந்த டெல்லி கணேஷ் – லீலா சாம்சனின் காதல். மணவாழ்க்கை பல வருடங்கள் கழிந்த நிலையில் மகனுக்கும் திருமணம் எல்லாம் முடித்துவிட்டு இனிமேல்தான் வாழ்க்கையை ருசிக்க வேண்டும் என்று நினைக்கும் அவர்களைத் தாக்கும் பேரிடி, லீலா சாம்சனின் இதயத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது – அதற்கும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது.

இந்த மூன்று கதைகளையும் அடுத்தடுத்து சொல்லாமல் ஒன்றுக்குள் ஒன்றாகப் பிணைத்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனர் முருகேஷின் திறமை ரசிக்க வைக்கிறது.

மூன்று ஜோடிகளுமே இயல்பாகவும் ரசிக்கத் தக்க வகையிலும் நடித்திருக்கிறார்கள். தான் இழந்த காதலில் உண்மையில்லை என்று அம்மாவின் மூலம் அறிந்து கொள்ளும் ஆதித்யா பாஸ்கர், அதே நிலையில் இருக்கும் அம்மு அபிராமியிடம் தேங்காய் உடைத்தாற் போல தன் காதலை சொல்லும் இடமும் அதற்கு அம்மு அபிராமி சொல்லும் பதிலும் நன்று.

மரணத்திலிருந்து மீண்டாலும் மீண்டும் தற்கொலை செய்து கொள்ள இருக்கும் அம்மு அபிராமியின் பாத்திரம் திடுக்கிட வைக்கிறது. அவரை வழிக்குக் கொண்டுவர அவரது அம்மா சொல்லும் பிளாஷ் பேக்கும் உருக வைக்கிறது.

பலதரப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடிக்கும் வினோத் கிஷன் ஒரு வித்தியாசமான வேடத்தில் வந்து அசத்துகிறார். காதலி அபிராமியின் அப்பா முகத்தில் விழிக்கவே விருப்பம் இல்லாதவருக்கு அவரைப் போய் அழைத்து வர வேண்டிய நெருக்கடி ஏற்படும் நிலையில், மகளை இகழ்ந்து பேசும் அந்த அப்பாவை வினோத், கெட்ட வார்த்தை பேசி அழைத்து வருவது ஆர்ப்பாட்டம்.

அதேபோல் ஒரு பேச்சுக்கு மகளை தலைமுழுகி விட்டேன் என்று சொன்னாலும் அந்த அப்பாவுக்குள்ளும் இருக்கும் ஈரம் அடுத்தடுத்த காட்சிகளில் வெளிப்படுகிறது.

அபிராமி வெங்கடாசலத்தை பார்க்கும் போது அவர் உண்மையிலேயே ஒரு நோயால் பாதிக்கப்பட்டவரை போல் நம்மை உணர வைத்திருப்பதும் அபி தன் பாத்திரத்தை புரிந்து கொண்ட நடிப்பினால்தான்.

அது என்னவோ, லீலா சாம்சன் வந்தாலே அவருக்கு ஏதாவது ஒரு வியாதியும் கூடவே வந்து விடுகிறது. தான் மரணித்து விடும் சாத்தியம் இருந்தாலும் கூட அதை எளிதாக எடுத்துக்கொண்டு கணவர் டெல்லி கணேஷிடம் “என்றாவது ஒருநாள் சாகத்தானே போகிறோம்..?” என்று அவரது மன பாரத்தை போக்க நினைப்பது நெகிழ்வு.

அதேபோல் டெல்லி கணேஷின் நடிப்பு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பார்க்கும் பார்வையிலும் உட்காரும் உடல் மொழியிலும் கூட மனிதர் அந்தப் பாத்திரமாகவே மாறி இருக்கிறார். 

தொடர்ந்து மூன்று கதைகளிலுமே பிரதான களமாக இருப்பது மருத்துவமனைதான் என்பது கொஞ்சம் சுவாரசியத்தை குறைக்கிறது. அதேபோல் இன்னும் கூட அற்புதமாக கையாளத்தக்க லைனைப் பிடித்திருக்கும் இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை இந்தப் படத்தின் மூலம் நமக்குத் தந்திருக்க முடியும்.

பெற்ற மகனே அம்மாவின் அறுவை சிகிச்சைக்குப் பணம் தர முடியாது என்று சொல்லிவிட்ட நிலையில் ஒரே ஒரு முறை பார்த்த வினோத் கிஷன், அத்தனை பெரிய உதவியை செய்துவிட்டு போக, அதற்கான டெல்லி கணேஷின் நன்றி அறிவிப்பு என்ன என்பது தெரிவிக்கப்படவே இல்லை.

அதேபோல் வினோத் கிஷனின் மனைவி  அபிராமி அறுவை சிகிச்சைக்கு போகும் நிலையில்தான் அவருக்கு வயிற்றில் குழந்தை உண்டாகி இருப்பது தெரிகிறது. சில வருடங்கள் கழித்து என்பதாக ஒரு கார்டு போட்டாலும் எந்தக் கட்டத்தில் அவர் இறந்தார் என்பதே நமக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவருக்குக் குழந்தை மட்டும் பிறந்திருக்கிறது. இந்தக் குழப்பத்தையும் தீர்த்திருக்கலாம் இயக்குனர்.

அதேபோல் மிக மிக மெதுவே நகரும் படத்துக்கு பின்னணி இசை மட்டும் கை கொடுக்காமல் போயிருந்தால் ரொம்பவே நம்மை சோதித்து இருக்கும். அந்த வகையில் ஆர் 2 பிரதர்சுக்கு இயக்குனர் நன்றி சொல்லியாக வேண்டும்.

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஹா ஓட்டிட்டு தளத்திற்காக வினோத்குமார் சென்னியப்பன் இந்த படத்தை தயாரித்துள்ளார். 

சார்லஸ் தாமஸின் ஒளிப்பதிவு படத்தின் பட்ஜெட்டின் தோள் மீது கை போட்டுக்  கூட்டிச் செல்கிறது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் ஏமாற்றம் தராத படம்..!