May 1, 2024
  • May 1, 2024
Breaking News
January 6, 2023

V3 திரைப்பட விமர்சனம்

By 0 356 Views

பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்களை வைத்து நிறைய படங்கள் வந்து விட்டன. பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவர்களுக்கும் ரகம் ரகமான தண்டனைகள் கொடுத்தாயிற்று.

அந்த வரிசையில் இந்தப் படமும் சேரும் என்றாலும் இதில் ஒரு வித்தியாசமான முயற்சியாக பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருக்க என்ன செய்யலாம் என்கிற தீர்வையும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் அமுதவாணன்.

அது சரியா இல்லையா என்று இன்னொரு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது படம்.

இரண்டு பெண்களின் தந்தையாக இருக்கிறார் ஆடுகளம் நரேன். அவர்களில் மூத்த பெண்ணான பாவனா ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போய்விட்டு வரும் வழியில் காணாமல் போக, போலீசில் புகார் செய்கிறார் நரேன்.

அதைத் தொடர்ந்து எரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றும் போலீஸ், நரேனை அழைத்துக் காட்ட கிடைத்த உடமைகளை வைத்து அது பாவனாதான் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக வழக்கு பதிவாக, இந்த கொடூர சம்பவம் மீடியாக்களில் பரபரப்பாகி முதல்வர் வரை போகிறது. முதல்வரும்  அன்றைய இரவுக்குள் குற்றவாளிகளை பிடித்து தண்டனை கொடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளிக்கிறார்.

இன்னொரு பக்கம் தங்கள் பிள்ளைகளை போலீஸ் பிடித்துக் கொண்டு போய்விட்டதாக விளிம்பு நிலை பெற்றோர் கதறிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி போலீஸ் பிடித்துக் கொண்டு போன ஐந்து இளைஞர்கள்தான் மேற்படி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று எரித்ததாக போலீஸ் என்கவுண்டர் செய்கிறது.

இந்த வழக்கின் உண்மை நிலையை கண்டறிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவராகவும், முன்னாள் கலெக்டராகவும் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியான வரலட்சுமி சரத்குமார் நியமிக்கப்படுகிறார். அவர் கண்டறிந்தது என்ன என்பதுதான் கதையே.

வரலட்சுமி சரத்குமாருக்கு மிடுக்கான வேடம். அந்த மிடுக்கு குறையாமல் அவர் நடித்திருக்கிறார். 

ஆனால் படத்தில் நம்மை மிகவும் நெகிழச் செய்வது பாவனா ஏற்றிருக்கும் பாத்திரம்தான். உதவி செய்வது போல் நடித்த காமுகர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் போது நமக்கு பதை பதைக்கிறது. அவர்களிடமிருந்து அரைகுறை ஆடையுடன் தப்பி ஓடும்போது மீண்டும் அவர்களிடம் பாவனா சிக்கி விடக்கூடாது என்று மனம் பதறுகிறது.

அவரது அப்பாவாக வரும் ஆடுகளம் நரேனும் தங்கை எஸ்தர் அனிலும் கூட அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பெண்களைப் பெற்ற ஒரு அப்பாவின் பரிதவிப்பை நரேனை  விடவும் அற்புதமாக யாராலும் நடித்து விட முடியாது என்று தோன்றுகிறது.

என்கவுண்டர் செய்யும் ‘டிசி’யாக நடித்திருப்பவரும் பாத்திரம் உணர்ந்து கச்சிதமாக செய்திருக்கிறார்.

சிவா பிரபுவின் ஒளிப்பதிவில் இரவு காட்சிகள் பதறவைக்கும்படி படமாக்கப்பட்டு இருக்கின்றன. ஆலன் செபாஸ்டின் இசை படத்தின் தளத்துக்கு தக்கவாறு பயணித்திருக்கிறது.

நிஜ சம்பவங்களை கதையாக கொடுத்திருப்பது எல்லாம் சரிதான். ஆனால் இயக்குனருக்கு இரண்டு கேள்விகள்.

1. எரிக்கப்பட்ட சடலத்தை போஸ்ட்மார்ட்டம் செய்யாமலேயே எப்படி அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸ் வழக்கு பதிவு செய்ய முடியும்..? – அதுவும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக யாரும் புகார் செய்யவில்லை. அதை வைத்து முதல்வரும் பாலியல் பலாத்காரம் செய்தவர்களை தண்டிப்பேன் என்று எப்படிக் கூற முடியும்..?

2. பாலியல் குற்றங்களை நடக்காமல் தடுக்க வேண்டுமானால் விபச்சாரத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறுவது எப்படி நியாயம்? சில குடும்பத்துப் பெண்கள் கௌரவமாக வாழ்வதற்காக பல குடும்பத்து பெண்கள் விபச்சாரத்தில் இறங்க வேண்டுமா..? விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் பாலியல் குற்றங்கள் நடப்பதில்லையா..?

அதேபோல் குற்றவாளிகள் கடைசியில் யாரிடமும் சிக்காமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கதை முடிவதில் எந்தவிதமான நீதியும் இல்லை.

V3 – குற்றமும் தவறான தண்டனையும்..!