கன்னடத் திரை உலகில் பல புதுமைகளைப் படைத்து வரும் உபேந்திரா நடித்து இயக்கி இருக்கும் படம்.
சினிமா ஆக்கத்தில் வணிகரீதியான படம், கலை ரீதியான படம் என்று வகைகள் உண்டு. ஆனால் இந்தப் படம் அவற்றில் இருந்தும் மாறுபட்டு அப்ஸ்ட்ராக்ட் என்று சொல்லப்படும் நவீன ஓவிய பாணியில் படைக்கப்பட்டிருக்கிறது.
நேரடியாக வெகு மக்களின் பார்வைக்கு ஒரு கதை தெரியும். அதை அறிவார்ந்து பார்க்கும் போது இன்னொரு கதை புரியும். அந்த வகையில் இரண்டு கோணங்களில் இந்தப் படம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் படத்திலும் உபேந்திரா இயக்குனராகவே வருகிறார். அவர் இயக்கி வெளியான புதுப் படம் ஒன்று ஏகப்பட்ட விளைவுகளை சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது. அதைப் பார்த்த பலர் தங்கள் வாழ்க்கையில் தெளிவு (Focus) பிறந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைகிறார்கள் ; வேறு சிலரோ இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கிளர்ச்சி செய்கிறார்கள்.
ஆனால் இந்தியாவிலேயே புகழ்பெற்ற ஒரு விமர்சகருக்கு இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் விமர்சனம் எழுதவே தோன்றவில்லை. எனவே உபேந்திராவைத் தேடி நேரே அவர் வீட்டுக்கு போகும் அவர், உபேந்திரா எழுதிய ஸ்கிரிப்ட் வாங்கி வாசிக்க… அந்த ஸ்கிரிப்டில் உள்ள கதைதான் நமக்குப் படமாகக் காண்பிக்கப்படுகிறது.
இதில் அண்ணன், தம்பி என்று இரண்டு வேடமிட்டு இருக்கிறார் உபேந்திரா. முதலில் பிறந்த அண்ணன் சத்யா என்ற பெயரில் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக ஆகிறார். அதற்கடுத்து சில நிமிடங்களில் பிறந்த தம்பி தன்னை கல்கி அவதாரமாக அறிவித்துக் கொண்டு சமுதாயத்தில் பல மாற்றங்களைப் புரிகிறார்.
ஆரம்பத்தில் படத்தின் பாத்திரங்களுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் கூட சூப்பர் ஸ்டார் உபேந்திராதான் திடீரென்று கல்கி அவதாரம் எடுத்து விட்டதாகத் தோன்றும். ஆனால் போகப் போகத்தான் புதிர் முடிச்சை அவிழ்த்து இவர் வேறு, அவர் வேறு என்பது தெரிவிக்கப்படுகிறது.
தன் அம்மாவுக்கு துரோகம் செய்த சமுதாயத்தைப் பழிவாங்க இப்படி எல்லாம், தான் நடந்து கொள்வதாக கல்கி அவதார உபேந்திரா தெரிவிக்கிறார்.
அதன்பின் என்ன நடந்தது என்பது மீதிக் கதை.
இது நேரடியாக புரியும் கதை. ஆனால், இதில் இரண்டாவதாக இருக்கும் மறைபொருள் என்னவென்றால் அவர் தன்னுடைய தாயாகக் கூறுவது இந்த பூமியைத்தான்.
இந்த பூமியின் இயற்கை வளத்தின் மீது பல வகையிலும் தங்கள் சொந்த லாபத்துக்காக சுயநலக்காரர்கள், தொழிலதிபர்கள், பல்துறை மாபியாக்கள், அரசியல்வாதிகள், பயங்கரவாதிகள் நம் கண்ணுக்குத் தெரியாத போரை நிகழ்த்துவதால் கடைசியில் மனித சமூகம் என்ன நிலைக்குத் தள்ளப்படும் என்பதைத்தான் அவர் தன் தாய்க்கு நடந்த துரோகமாகச் சொல்வது.
மேலோட்டமாகப் பார்த்தால் அந்த கல்கி அவதாரத்தில் வரும் உபேந்திரா பயங்கர கொடுமைக்காரராகவும் மக்களை துன்புறுத்துபவராகவும் தோன்றும். ஆனால், இரண்டாவது பொருளில் பார்க்கும்போது அவரே இந்த பூமியைக் காக்க வந்தவராகவும் நல்லவர்கள் போல் தோற்றமளிப்பவர்கள் எல்லோரும் சுயநலக்காரர்களாகவும் வில்லன்களாகவும் இருப்பது நமக்குப் புரியும்.
அண்ணனான நல்லவனைக் கடத்தி வந்து ஒரு கொடுஞ்சிறையில் அடைத்து வைத்திருக்கும் கல்கி உபேந்திரா அங்கிருந்து அவன் தப்ப வேண்டுமென்றால் தன் அறிவை உபயோகிக்க வேண்டும் என்று மட்டும் ஒரு உபாயம் சொல்கிறார். அதன்படி தம்பி அங்கிருந்து தப்புகிறார்.
அவர் படைத்து வைத்திருக்கும் கொடுஞ்சிறை வேறு ஒன்றும் அல்ல. மனிதர்களான நாம் ஏற்படுத்திக் கொள்ளும் சிக்கல்கள்தான். அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் நாம் நம்முடைய அறிவைப் பயன்படுத்தி மட்டுமே மீள முடியும் என்கிற தத்துவம் தான்.
இந்த தத்துவம் வெகுஜன மக்களுக்கும் புரிந்தால் அவருடைய நோக்கம் நிறைவேறும்.
படம் எந்த வருடத்தில், எந்தக் களத்தில் நடக்கிறது என்பதை எல்லாம் கூட ஒரு நவீன ஓவிய பாணியிலேயே கடந்துவிட்டுப் போகிறார் உப்பி. அதில் வி எஃப் எக்ஸ் காட்சிகளின் பங்கு அதிகமாக இருக்கிறது.
உபேந்திராவின் நடிப்பு பற்றி சொல்லத் தேவையில்லை. இரண்டு வேடங்களிலும் அசத்தலாகத் தோற்றமளிக்கும் அவர் உணர்ச்சிகளை சரியாகக் கடத்தியிருக்கிறார்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் பார்த்தால் நடிகர் உபேந்திராவைத் தாண்டி இயக்குனர் உபேந்திராதான் ஆச்சரியம் அளிக்கிறார்.
நாயகியாக வரும் ரீஷ்மா நானய்யா, அசப்பில் எமி ஜாக்சனைப் போல் தோன்றுகிறார். நடிகர் சத்யாவாக வரும் உபேந்திரா மீது கண்மூடித்தனமான காதல் கொண்ட இவர் நமக்கு கொஞ்சம் கிளாமரை அள்ளித் தெளித்துப் பரவசப்படுத்துகிறார்.
திரை விமர்சகர் முரளி சர்மா, உபேந்திராவின் தந்தை அச்யுத் குமார், கோடீஸ்வர மந்திரியாக வந்து கல்கியால் தெருவுக்குப் போகும் ஓம் சாய் பிரகாஷ் உள்ளிட்ட பிற வேடங்களை ஏற்று அவற்றுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
படம் அசத்தலாக வந்திருப்பதற்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத் தான். பின்னணி இசையில் மிரட்டி பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் விஎஃப் எக்ஸ் – க்கு ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணுகோபாலின் கேமரா நன்றாகவே ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறது.
படம் ஆரம்பித்தவுடன் காட்டப்படும் ஸ்லைடில், “புத்திசாலிகள் இப்போதே தியேட்டரை விட்டு வெளியே போய் விடுங்கள்…” என்று வருகிறது.
நாம் சற்று அதிர்ச்சியடையும் நேரத்தில் திரையில் காட்டப்படுவது திரைக்குள் இருக்கும் இன்னொரு படத்தில் காட்டப்படும் காட்சியாக வருகிறது. அந்த அளவுக்கு இயக்குனர் உபேந்திரா புத்திசாலித்தனமாகவும், கெத்தாகவும் இருப்பது ரசிகர்கள் மீது அவர் வைத்திருக்கும் தன்னம்பிக்கை.
பான் இந்திய படமாக வந்திருக்கிறது இந்த யுஐ – அப்படி என்றால்… ‘யுனிவர்சல் இன்டெலிஜென்ஸ்’ என்று அர்த்தமாம்.
Ui – புரிந்தவர்களுக்கு ஃபோகஸ் புரியாதவர்களுக்கு அவுட் ஆப் ஃபோகஸ்..!
– வேணுஜி