அச்சுறுத்தும் உங்கள் எதிர்காலத்தை ஒரு கார்டு (Card) முடிவு செய்தால்?
இப்படி ஒரு, சில்லிட வைக்கும் திகிலைக் கொண்டிருக்கும் இப்படம், 1992 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஆடம் எழுதிய ‘ஹாரர்ஸ்கோப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கதை இதுதான்…
கல்லூரி நண்பர்கள் குழு ஒன்று, கேளிக்கைக்காகத் தங்கள் டேரோட் கார்டுகளைப் படிக்கத் தொடங்குகிறது. விளையாட்டு விபரீதமாகி, அவர்களுக்குக் கிடைக்கும் கார்டின் அதிர்ஷ்டம் பொறுத்து, அவர்களில் சிலர் இறக்க நேரிடுகிறது.
அச்சத்தில் உழலும் உயிர் தப்பியவர்கள், தாங்கள் உயிர் பிழைக்க வேண்டுமென்றால் குழுவாக இணைந்து ஒரு தப்பிக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உணருகின்றனர்.
நண்பர்கள் குழு, டேரோட் வாசிப்புகளின் புனித விதியைப் பொறுப்பற்ற முறையில் மீறும் போது, டேரோட் அவர்களை ஒரு திகில் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.
வேறொருவரின் டேரோட் கார்டை, ஒருபோதும் அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது என்பது ஆட்ட விதி. அப்படிச் செய்தால், அவர்கள் அறியாமலே சபிக்கப்பட்ட அட்டைகளுக்குள் சிக்கியிருக்கும் பயங்கரமான தீமையைக் கட்டவிழ்த்து விடுவார்கள்.
ஒவ்வொருவராகத் தங்கள் விதியினை எதிர்கொண்டு, முன்னறிவிக்கப்பட்ட ஆருடத்தில் இருந்து தப்பிக்க மரணத்திற்கு எதிரான ஓட்டத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.
அவர்களால் இதிலிருந்து தப்பிக்க முடிந்ததா என்பதுதான் மீதி படம்.
ஹேரியட் ஸ்லேட்டர் (Harriet Slater), அடைன் பிராட்லி (Adain Bradley), அவந்திகா (Avantika), உல்ஃப் கேங் நோவோ கிராட்ஸ் (Wolfgang Novogratz) உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு இசை ஜோசப் பிஷாரா (Joseph Bishara)
ஜோசப் பிஷாராவின் இசை, எலைட் ஸ்மோல் கின் (Elie Smolkin)னின் ஒளிப்பதிவு, டாம் எல்கின்சின் (Tom Elkins ) எடிட்டிங் துணையுடன் சினிமா இயக்கத்திற்கு புதியவர்களான
ஸ்பென்சர் கோகன் மற்றும் அன்னா ஹால் பெர்க் (Spenser Cohen and Anna Halberg) இயக்கி இருக்கிறார்கள்.
முதல் படத்திலேயே மிரட்டி இருக்கும் இவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டு இருக்கும் இந்தப் படத்தை திகிலை விரும்புபவர்கள் பயப்படாமல் போய் பார்க்கலாம்..!