January 28, 2022
  • January 28, 2022
Breaking News
September 8, 2019

சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்பட விமர்சனம்

By 0 666 Views

கடந்த ‘பிச்சைக்காரனி’ல் அம்மா சென்டிமென்டைப் போட்டுத்தாக்கி தமிழிலும், தெலுங்கிலும் ஹிட் அடித்த மகிழ்ச்சியில் இதில் ‘மாமன், மச்சான்’ என்று இதில் ஒரு சென்டிமென்ட்டைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சசி.

அக்கா, தம்பியான லிஜா மேனனும், ஜி.வி.பிரகாஷும் பெற்றோரின்றி வளர்வதால் ஒருவருக்கொருவரே அம்மா, அப்பாவுமாக வாழ்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் வளர்ந்து பைக் ரேஸ் ஓட்டிக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு ரேஸில் அவரைப் பிடிக்கும் டிராபிக் போலீஸ் அதிகாரியான சித்தார்த் வரம்பு மீறி அவரைத் தண்டித்துவிட, அவர் மீது ‘கொலை காண்டா’க இருக்கிறார் ஜி.வி.

இந்நிலையில் அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளையாக சித்தார்த்தே வந்துவிட இருவரும் ‘அக்னி நட்சத்திரமா’க மல்லுக்கட்டி கடைசியில் என்ன ஆகிறதென்பது உலகமே யூகிக்கும் கிளைமாக்ஸ்.

படத் தொடக்கத்தில் இயக்குநர் மகேந்திரன் படத்தைப் போட்டு அவருக்கு சசி நன்றி சொன்னது பாதிப்படத்தில் நினைவு வர, அப்போதே புரிந்தது இந்தக்கதை ‘முள்ளும் மலரும்’ படத்திலிருந்து உருவியது என்று. ஆனால், அதையாவது சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் சசி.

பாதிப்படம் வரை லாஜிக்குகள் சறுக்கினாலும் ‘முள்ளும் மலரும்’ பாணியில் விறுவிறுப்பாகக் கதை சொல்லிவிட்டு அதை இன்டர்வெல்லோடு நிறுத்திக் கொள்கிறார். அதுவரை படம் பார்த்துவிட்டு எழுந்து வந்தால் நல்ல படம் என்ற நினைப்பு மேலோங்கியிருக்கும். அதற்குப் பிறகு நொண்டியடிக்கிற திரைக்கதை கடைசி கடைசியென்று “விட்ருங்க சசி…” என்ற கெஞ்ச வைத்து விடுகிறது.

ஜி.வி.பிரகாஷ், பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பதைப் போலவே சித்தார்த்தும் சரியான தேர்வாக இருக்கிறார். இருவரும் மிகச் சரியான அளவிலும் நடித்திருப்பதும் ரசிக்க வைக்கிறது. ஆனால், கேரக்டரைசேஷனில் ஏகப்பட்ட ஓட்டைகள்.

அக்காவின் அன்பான வளர்ப்பில் ஜி.வி.பிரகாஷ் ஏன் அப்படி கிட்டத்தட்ட பொறுக்கி போல் வளர்ந்தார் என்பது தெரியவில்லை. அவர் என்ன செய்கிறார், அந்தக் குடும்பம் எப்படி வாழ்கிறது… பைக்குகளாக வாங்கி ரேஸ் ஓட்ட அவருக்கு ஏது பணம் என்பதெல்லாம் புரியவேயில்லை.

சரி… அவர்தான் சின்னப்பையன் பிடிவாதம் பிடிக்கிறார் என்றால் படித்த, வளர்ந்த… நல்ல குடும்பத்தைச் சேர்ந்த சித்தார்த்தும் அவருக்குப் போட்டியாக மல்லுக் கட்டிக்கொண்டே இருப்பது பொருத்தமாக இல்லை.

ஏதோ ஒரு கட்டத்தில் லிஜாவோ, சித்தார்த்தோ ஜி.வியை உட்கார வைத்துப் பேசியிருந்தால் தீரக் கூடிய எளிய பிரச்சினை அது. அட்லீஸ்ட் யாராவது அவரைக் கண்டித்துமிருக்க முடியும். படம் முடியும்வரை அதை நீட்டித்துக்கொண்டே போவது மகா எரிச்சல்.

படிப்பு, வேலை எதுவுமில்லாமல் போலீஸ் லாக்கப்புக்கெல்லாம் போய்வரும் அப்படி ஒரு அடங்காத இளைஞனை காஷ்மீரா உருகி உருகிக் காதலிப்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே… அதுவும் போன ஜெனரேஷன் சாத்தியம்..!

தன் மேலதிகாரிகளிடம் கழுத்து நரம்பு புடைக்க கடமை மீறாமல் வீர வசனம் பேசிவிட்டு வரும் சித்தார்த், கடைசியில் மச்சான் தோற்றுவிடக் கூடாதென்று பைக் ரேஸில் வெல்ல ‘மோடிவேட்’ செய்வதில் அந்தக் கேரக்டரும் குப்புற விழுகிறது. அதற்கே அவர் மீது துறை ரீதியாக ஆக்‌ஷன் எடுக்கலாம்.

இரண்டாவது பாதியில் வரும் ‘பாலகிருஷ்ணா’ படங்களை மிஞ்சிய வில்லன் மதுசூதனராவ் படத்தை இன்னும் பின்னுக்கு இழுக்கிறார். ‘சென்டிமென்டோ சென்டிமென்ட்’ என்று ஆந்திர சினிமாக்களே வெட்கப்படும் அத்தனை ‘க்ளிஷே’க்களும் படத்தின் பின்பாதியில் வரிசைக்கட்டி வருகின்றன.

பாத்திரத் தேர்வுகளில் மட்டும் எப்போதும் போல் சசி பளிச்சிட்டிருப்பது ஆறுதல். லிஜா மேனன், காஷ்மீரா இருவரும் அற்புதத் தேர்வு. அதிலும் ஜி.வியின் அத்தையாக வரும் ‘தனம்’, ‘பூ’ படத்தில் வந்த ‘ராம்’ போல் அசத்தலான நடிப்பில் அள்ளுகிறார்.

இந்த நடிகர்கள் தேர்வும், பிரசன்னா எஸ்.குமாரின் மிரட்டலான ஒளிப்பதிவும், தொய்வில்லாத திரைக்கதையும் முன்பாதிப்படத்தை நேர்த்தியான படமாக நம்ப வைக்கின்றன. அவற்றாலும் தாங்க முடியாத கோளாறுகள் பின்பாதியில்.

இசையில் அறிமுகமாகியிருக்கும் சித்துகுமார் அவர் விருப்பத்தில் இசைத்தாரா, இல்லை அதுவும் சசியின் விருப்பமா தெரியவில்லை. பின்னணி இசையில் கடந்து போன ஜெனரேஷன் பாதிப்புகள்.

சிவப்பு மஞ்சள் பச்சை – பாதி வரை வேகம்… மீதி சோகம்..!