May 8, 2024
  • May 8, 2024
Breaking News
April 3, 2022

செல்ஃபி திரைப்பட விமர்சனம்

By 0 544 Views

தன்பிள்ளை ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ ஆக வேண்டும்  என்பது இன்றைய பெற்றோர்களின் கண்மூடித்தனமான கனவு. அதற்காக எப்பாடுபட்டாவது சேர்த்த பணத்தை நம்பிக் கொடுத்து ஏமாறுவது ஒரு பக்கம்.

அந்த பலவீனத்தையே பயன்படுத்திக்கொண்டு தனியார் கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘மேனேஜ்மென்ட் சீட்’டுக்கு கணக்கில்லாத ரேட் வசூலித்துக் கொள்ளையடிப்பது இன்னொரு பக்கம்.
 
இதில் மூன்றாவது பக்கம் ஒன்றும் இருக்கிறது. மேற்படி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மருத்துவராகவோ பொறியாளராக வரவேண்டும் என்று தாங்களாகவே கனவுகண்டு அதைப் பிள்ளைகள் மேல் அவர்களின் விருப்பம் அறியாமல் திணிப்பதுதான் அது.
 
இந்த மூன்று இழைகளையும் சரிவரப் பின்னி அற்புதமான ஒரு படத்தை நெய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மதிமாறன். வெற்றிமாறனின் உதவியாளரான இவர் இப்படி ஒரு படம் எடுத்ததற்காகவே ‘இவர் தன் சிஷ்யன்…’ என்று சொல்லி வெற்றி மாறனும் நெஞ்சு நிமிர்த்திச் சொல்லலாம்.
 
இப்படி ஒரு படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதற்காக ஜிவி பிரகாஷ் உண்மையிலேயே கர்வம் கொள்ள முடியும். நிறைய அல்லு சில்லு பாத்திரங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர்கள் பாலா மற்றும் ராஜீவ் மேனனின் படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டதில் ஜிவி எப்படி பெருமை கொள்ள முடியுமோ அந்தப் பெருமை இந்தப் படத்தில் நடித்ததற்கும் உண்டு.
 
விருப்பமில்லாமல் அப்பாவின் ஆசைக்காக தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து அவதிக்குள்ளாகும் பாத்திரத்தை அப்படியே நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஜிவி. தன் கல்லூரியின் மீது அப்பாவுக்கும் கோபம் வர வேண்டும் என்பதற்காகவே அவரையும் பல அல்லல்களுக்கு உள்ளாக்கும் போதாகட்டும் அதெல்லாம் கைகொடுக்காமல் போக, கல்லூரியிலேயே ‘சீட்டு’க்கு ஆள் பிடித்துக் கொடுத்து காசு பார்க்க முடிவெடுக்கும்போது ஆகட்டும், ஜிவி பிரகாஷ் ஒரு அப்பாவி மாணவனாகவே வாழ்ந்திருக்கிறார்.
 
எல்லாமே ஒரு கட்டத்தில் சிக்கலாகிப் போக “இதற்காகவா உன்னை இத்தனைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தேன்…?” என்று கேட்கும் அப்பாவிடம் “என் விருப்பத்தை கேட்டா செய்தீர்கள்..?” என்று சீறும் இடம் ‘பலே பாண்டியா…’
 
அவர் அப்படி எகிறி அடிக்க, அமைதியாகவே நடித்து தன் பக்கத்து நியாயத்தை எடுத்து வைக்கும் அப்பா ‘வாகை சந்திரசேகரி’ன் நடிப்பு அனுபவ ஜொலிப்பு. மகன் எவ்வளவுதான் தப்பு செய்திருந்தாலும் தந்தையுள்ளத்துடன் அத்தனையையும் பொறுத்துக் கொண்டு மகனை மன்னித்து அவன் விருப்பப்படியே வாழ அனுமதி அளிக்கும் இடத்தில் நெகிழ வைத்து விடுகிறார் ‘வாகை’.
 
படத்தின் வில்லனான கதாபாத்திரத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். தனியார் கல்லூரி சேர்மனின் வலது கையாக மாணவர்களைப் பிடிக்கும் பாத்திரத்தில் அப்படியே வாழ்ந்து காட்டியிருக்கிறார். சமீபத்தில் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஆள் பிடிக்கும் ப்ரோக்கர் ஒருவரை நினைவுபடுத்துகிறார் மேனன். மொத்தத்தில் ‘அந்த’க் கல்லூரியின் தோலை உரிக்கும் படமோ என்று விஷயம் தெரிந்தவர்களை யோசிக்க வைக்கிறது.
 
கல்லூரியின் சேர்மனாக வரும் சங்கிலி முருகன் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நடித்து பிரமிக்க வைக்கிறார். யாரோ ஒரு புரோக்கர் லட்ச லட்சமாக சம்பாதிக்க, அந்தத் தகுதி தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அவரது மருமகனாக வரும் ‘சாம் பாலு’ம் தன் பங்குக்கு திறமையை காட்டப்போய் மூக்கு உடை படுவது அந்தோ பரிதாபம்.
 
ஜிவியின் ஜோடியாக வரும் வர்ஷா பொல்லம்மாவுக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. ஜிவி வர்ஷா காதலுக்குத் துணை போய் எள்ளலுக்கு உள்ளாகும் கல்லூரி ஊழியர் தங்கதுரை அங்கங்கு சிரிக்கவும் வைக்கிறார்.
 
ஜிவியின் நண்பனாக வரும் குணாநிதியும், அஸிஸ்டன்ட் கமிஷனர் பாத்திரமேற்றிருக்கும் நடிகரும் மனத்தில் நிலைக்கிறார்கள்.
 
படத்தின் பலம் விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு என்றால் அதற்கு ஈடாக ஒன்றுபடுகிறது ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும்.
 
ஒரு படம் பார்க்கிறோம் என்ற உணர்வே எழாமல் நிஜத்தை நம் கண்முன் அப்படியே காட்டியிருக்கும் இயக்குனர் மதிமாறனின் இயக்கத்தின் மேல் மிகுந்த நம்பிக்கை வைக்க தோன்றுகிறது. அடுத்தடுத்த படங்களில் வெற்றிமாறன் உயரத்தை அவரும் தொடக்கூடும்.
 
செல்ஃபி – நல்ல சினிமா பிரியர்களுக்கு கோடையில் கிடைத்த குல்ஃபி..!