September 20, 2024
  • September 20, 2024
Breaking News
May 1, 2023

2026-ல் மாஸான அறிவிப்பு ஒன்று வெளியாகும் – சரத்குமார் அறிவிப்பு

By 0 200 Views

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார்.

இந்திய சினிமாவின் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டுகளை குவித்துள்ளது.

மேலும் தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் என படு பிஸியாக நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன், ருத்ரன் திரைப்படங்களின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார் நடிகர் சரத்குமார்.

 

இந்நிகழ்வினில்
நடிகர் சரத்குமார் பகிர்ந்து கொண்டதாவது…

“நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள், மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ் தான் பேசி வருகிறேன். கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன், ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளேன். கலை தான் என் தொழில்.

பத்திரிகை நண்பர்கள் எப்போதும் என்னிடம் உரிமையுடன் எதையும் பரிமாறி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் பட புரமோசனில் நான் கலந்துகொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

என்னை அழைத்திருந்தார்கள். ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார், இப்போது படம் எல்லோரிடத்திலும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் வாய்ப்பு தந்ததற்கு மணிரத்னத்திற்கு லைகா புரடக்சன் சுபாஸ்கரன் இருவருக்கும் நன்றி.

இன்றைய தலைமுறைக்கு என்னை எடுத்து சென்ற வாரிசு படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி. ருத்ரன் வில்லன் பாத்திரம் என்றபோது தயங்கினேன் ஆனால் இப்போதைய ரசிகர்கள் வில்லனாக நடிப்பவர்களை அதே போன்று பார்ப்பதில்லை, அந்த கதாப்பாத்திரத்தை எப்படி செய்துள்ளனர் என்றே பார்க்கிறார்கள்.

அதனால் தைரியமாக நடித்தேன். அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன். நான் நாயகனாக நடித்த காலத்தை விட இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன்.

தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும். அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது, விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு இருந்துள்ளது. அந்த ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி.

தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சரத்குமார் பதிலளித்தார்.

அதில் ஒரு கேள்வி – “நீங்கள் பொன்னியின் செல்வனில் நடித்த பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் ரஜினி நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

படத்தின் விளம்பரங்களில் உங்கள் தலை சிறியதாக இடம்பெறுகிறது. ஒருவேளை அதில் ரஜினி நடித்திருந்தால் இதுபோன்று விளம்பரங்களில் சிறியதாக தான் அவர் இடம் பிடித்திருப்பாரா..?”

இதற்கு சரத்குமாரின் பதில் – “இல்லை ரஜினி நடித்திருந்தால் விளம்பரங்களை அவர் படம் தான் பிரதானமாக இருந்திருக்கும் அவருடன் ஐஸ்வர்யாராயின் படமும் பெரிதாக இடம்பெற்றிருக்கும் இப்போது இடம் பெற்றிருக்கும் விக்ரமின் படம் அப்போது சிறியதாகி இருக்கும்..!” என்றார்.

உண்மைகளை உள்ளபடியே பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் அது சரத்குமாரிடம் நிறையவே இருக்கிறது.