April 29, 2024
  • April 29, 2024
Breaking News
October 13, 2022

சஞ்சீவன் திரைப்பட விமர்சனம்

By 0 508 Views

புதுமுகங்கள் நடித்து புதிய இயக்குனர் இயக்கியிருக்கும் படம் என்றாலும் இந்தப் படத்தில் எதிர்பார்க்க வைத்திருக்கும் ஒரு விஷயம் – இயக்குனர் மணி சேகர் பாலுமகேந்திராவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர் என்பதுதான்.

ஐந்து இளைஞர்களின் வாழ்வில் ஒரு பருவத்தில் என்ன நடந்தது என்பதுதான் இந்தப் படத்தில் இயக்குனர் எடுத்துக் கொண்டிருக்கும் லைன். அதிலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஆனாலும் நட்பு, பாசம், காதல், சோகம் என்று அத்தனை உணர்ச்சிகளுக்கும் வடிகாலாக ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார் அவர்.

வினோத் லோகிதாஸ், யாசின், சத்யா, ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா ஆகிய ஐந்து இளைஞர்களும் நண்பர்களாக வந்தாலும் ஒவ்வொருவருக்குமான பாத்திர வடிவமைப்புகள், உடல் மொழிகள் எல்லாமே வித்தியாசப்பட்டு இருப்பது ரசிக்க வைக்கிறது.

அதிலும் ஸ்நூக்கர் சாம்பியனான வினோத் லோகிதாசும், காதலுக்காக உருகும் ஷிவ் நிஷாந்தும் மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்த இருவருக்கு மட்டுமே காதலிகள் இருப்பதும் கூட சுவாரஸ்யம்தான். நாயகி திவ்யா துரைசாமி காதலியாக வருவதால் வினோத்தை ஹீரோவாகக் கொள்ளலாம். அதிலும் சவால் விட்டு ஸ்நூக்கரில் ஜெயிப்பதும் அவர்தான். அவரை வைத்து ஆரம்பிக்கும் கதை அவரை வைத்தே முடிவதிலும் அவரை ஹீரோவாகக் கொள்ள முடியும்.

அதேபோல் ஷிவ் நிஷாந்தை இரண்டாவது நாயகனாகவும் கொள்ளலாம். ஊரறிந்த பாலியல் தொழிலாளியை அவர் உருகி உருகி காதலிப்பது எல்லாமே நகைச்சுவை காட்சிகள் தான். ஆனால் அந்தக் காதலி யார் என்பதைக் கடைசி வரை காட்டாமல் இருப்பது டைரக்டரின் புத்திசாலித்தனம்.

முரட்டு யாசின், முதலாளி மகன் விமல், சிரித்தே கெடுக்கும் சத்யா என்று மற்ற மூன்று பேரும் கூட அவரவர் பாத்திரங்களில் ஜொலிக்கவே செய்திருக்கிறார்கள். இவர்களது அலுவலகத்தில் பாஸாக வரும் ஸ்ரீதர் நாராயணன் கேரக்டரும் சிறியதாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.

ஐந்து நண்பர்களுக்குள்ளும் பணக்காரன் – ஏழை அல்லது ஜாதி மத பேதங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதை நிரம்பவே ரசிக்க முடிகிறது. 

யாசினும், ஷிவ் நிஷாந்த்தும் போதை மருந்து கடத்தும் காட்சிகள் சீரியசான… காமெடி.

நாயகி திவ்யா துரைசாமியின் உடல் மொழியும் பேசும் அழகும், காதலிக்கத் தோதானவை.

வினோத்துக்கும், திவ்யாவுக்கும் ஆன கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்திருக்கிறது. இருவருமே இளையராஜாவின் இசை பொதிந்த ஒரே ரிங்டோனை வைத்திருக்க வினோத் போன் ஒலிக்கும் போது, “இது என்னுடைய ரிங்டோன்…” என்று திவ்யா சொல்ல “இல்லை… இது இளையராஜாவின் ரிங்டோன்..!” என்று வினோத் சொல்வது ஒரு காதல் ஹைக்கூ.

அவருடன் தோழிகளாக வரும் இருவருக்கும் பெரிய வாய்ப்பில்லை.

கார்த்திக் சுவர்ண குமாரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமும் கவிதையாக ரசிக்க வைக்கிறது. தனுஜ் மேனனும் அதற்கு இசைவாக இசையமைத்திருக்கிறார்.

புதுமுகங்கள் நடிக்கும் படம் என்றே தெரியாமல் முதல் பாதி பரபரவென்று நகர்கிறது. இயல்பான வசனங்கள், எதார்த்தமான பாத்திரப்படைப்புகள் என்று நிஜ வாழ்க்கையை நேரில் பார்ப்பது போலவே நகரும் முன் பாதி படம் தரும் சுவாரஸ்யம் பின் பாதியில் சற்றே குறைவதைத் தவிர்த்திருக்க முடியும்.

அதிலும் பாடலுக்காகவும் நகைச்சுவைக்காகவும் சேர்க்கப்பட்டிருக்கும் இரண்டாம் பாதிக் காட்சிகளில், முகம் சுளிக்க வைக்கும் அருவருக்கத்தக்க விஷயங்களை சேர்த்து இருக்க வேண்டியது இல்லை. அதேபோல் எதிர்பாராமல் நிகழும் சோகமும் நம்மைப் பெரிதாக பாதிக்கவில்லை.

இப்படி திரைக்கதையில்தான் சற்றே தொய்வு தந்திருக்கிறாரே ஒழிய ஒரு இயக்குனராக மணி சேகர் ஜெயித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

வசனங்களிலும் துல்லியமாக எழுதியிருக்கிறார் மணி சேகர். “முன்பெல்லாம் ஒழுக்கமானவன்தான் ஹீரோ. இப்போதெல்லாம் குடித்தால்தான் ஹீரோ..!” என்று வினோத் பேசுவது ஒரு சோற்றுப் பதம்.

காட்சிக்கு காட்சி, தான் ஒரு பாலு மகேந்திராவின் மாணவர் என்பதை மெய்ப்பித்திருக்கும் அவர், தன் குருவுக்கான அஞ்சலியாக இந்தப் படத்தை சமர்ப்பித்தால் அதில் தப்பில்லை. படம் முழுவதும் நிரம்பி இருக்கும் நகைச்சுவை தொய்வில்லாமல் படத்தைக் கொண்டு செல்கிறது.

சஞ்சீவன் – யூத் எக்ஸ்பிரஸ்..!