March 24, 2025
  • March 24, 2025
Breaking News
March 1, 2025

சப்தம் திரைப்பட விமர்சனம்

By 0 99 Views

தலைப்பே படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறது. மொழிகள் தோன்றுவதற்கு முன்னால், பல வகையில் எழுப்பப்படும் ஒலிகள்தான் தகவல்களைக் கொண்டு சேர்த்தன. மொழியே கூட ஒலியின் அடிப்படையில் அமைந்ததுதான்.

ஆக தகவல் பரிமாற்றத்துக்கு சப்தம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது என்ற லைனைப் பிடித்து நம்மை ஒரு திகிலோடு கூடிய ரசிக அனுபவத்துக்குள் இட்டுச் செல்கிறார் இயக்குனர் அறிவழகன்.

அறிவழகன் படத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்துச் செல்கிறோமோ அவை எல்லாமே இருக்கின்றன – கூடவே இதுவரை நம் செவிகள் திரையரங்கிற்குள் கேட்காத ஒலியமைப்பும்.

அறிவழகனுடன் நடிகர் ஆதியும் இணைந்து விட்டால் நமக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்துவிடும் என்றிருக்க, அதில் இருவரும் நம்மை ஏமாற்றவில்லை. 

கல்லூரி ஒன்றின் மாணவ மாணவிகள் அகாலமாக தற்கொலை செய்து கொள்ள நேர, அது ஆவிகள் சம்பந்தப்பட்ட விஷயமாக வெளியில் செய்தியாவதில் கல்லூரி நிர்வாகம் கவலை கொள்கிறது. அந்த மர்மத்தை அறிவார்த்தமான முறையில் அணுக ‘கோஸ்ட் ரைடர்’ எனப்படும் அறிவியல் முறையில் ஆவிகளைக் கண்டுபிடிக்கும் ஆதி வரவழைக்கப்படுகிறார். 

கல்லூரி நிர்வாகம் எதிர்பார்ப்பது ‘ ஆவியெல்லாம் ஒன்றும் இல்லை…’ என்று அறிவியல் ரீதியாக ஆதி நிரூபிக்க வேண்டும் என்பதே. ஆனால் அதை மீறி அங்கே அமானுஷ்யம் இருப்பதை ஆதி கண்டுபிடிக்க… அடுத்தடுத்த நிகழ்வுகளும், அது எப்படி முடிவுக்கு வந்தது என்பதுவும்தான் கதை.

வழக்கமாக இதுபோன்ற அமானுஷ்ய கதைகளில் ஆவியுடன் தொடர்பு கொள்பவரும் அமானுஷ்யமாகவே நடந்து கொள்வதாக இருந்தது. 

இதில் சற்றே அறிவியல் பூர்வமாக ஆவியை அணுக முயற்சித்து இருப்பது வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. அப்படி ஆதி, தன் அறிவியல் உபகரணங்கள் மூலம் ஒரு குழந்தை ஆவியுடன் பேசி அதன் பெற்றோரை திருப்தி அடைய வைப்பதில் இருந்து நம் ஆவியை இருக்கைகளுடன் கட்டிப் போடுகிறார் இயக்குனர். 

கண்ணுக்குத் தெரியாத சக்தியுடன் தொடர்பு கொள்ளும் பணியில் இருக்கும் ஆதி, அதைத் தன் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலமே அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

அதிலும் குறிப்பாக கல்லூரியில் அமானுஷ்யம் நிறைந்திருப்பதைக் கண்டுபிடிக்கும் அவர் அது நாயகி லட்சுமிமேனனின் இருப்பிடத்திலேயே இருப்பதைக் கண்டுபிடிக்கும் காட்சியில் நம்மைப் புல்லரிக்க வைக்கிறார். 

அதேபோல் நூலகத்துக்குள் ஒரு சில ஆவிகள் இருக்கலாம் என்று அவர் எதிர்பார்க்க அங்கே 42 ஆவிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுறும் இடமும் நம் உடல் ரோமங்களை உயர்த்துகிறது. 

சில காலம் கழித்து நாயகி லட்சுமிமேனனை பார்ப்பது மகிழ்வளிக்கிறது. நடக்கும் எல்லா அசம்பாவிதங்களையும் தன் உணர்வு மூலம் அவரால் உணர முடிந்தாலும் அதைக் கண்டுபிடிக்க வரும் ஆதி தன்னுடன் வேறு விதமான தொடர்பு வைத்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையால் அவருக்கு எதிராகவே நடந்து கொண்டிருப்பது இனிய முரண். 

ஆவியை ஓட்ட வந்த இடத்தில், அது நடைபெறும் வரை ரெடின் கிங்ஸ்லியை ஆதி ‘ஓட்டிக் கொண்டிருப்பது’ படத்துக்கு கலகலப்பைச் சேர்க்கிறது.

படத்துக்குள் எதிர்பாராத அறிமுகமாக சிம்ரனும் லைலாவும் வருவதும், இதுவரை பார்த்திராத பாத்திரப்படைப்புகளில் அவர்களைக் காண நேர்வதும் கூட புதிய அனுபவம்தான்.

சினிமாவே ஒரு நவீனம் எனும் போது அதில் இன்னும் நவீனம் சேர்க்கும் விதமாக ஒளிப்பதிவு, ஒளிப்பதிவு, படப்பதிவு, படத்தொகுப்பு, அரங்க வடிவமைப்பு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, நிறைச்சேர்க்கை என்று தொழில்நுட்ப ரீதியாக ஒவ்வொரு அம்சத்திலும் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்ட நவீனமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. 

அதிலும் தலைப்பே சப்தம் என்று வந்து விட்டதால் ஒலிப்பதிவில் இதுவரை நாம் தமிழ்ப் படங்களில் கேட்டிராத அனுபவமாக, இசையும் ஒலியும் அமைந்திருப்பதும், படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை நம் இருக்கைகள் ஒலியின் அதிர்வினால் ஆடிக்கொண்டிருப்பதும் இதுவரை கண்டிராத அல்ல… அல்ல… கேட்டிராத அனுபவம்..!

இரண்டாம் பாதிக் கதையில் ஆவிகளின் உயிர் முடிச்சு அவிழ்க்கப்படுவதை இன்னும் கொஞ்சம் புரியும்படி சொல்லி இருந்தால் நலம். இயல்பான கதையோட்டத்தில் நகரும் படத்தில் அங்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவாக சொல்ல முடியாததில் படம் கொஞ்சம் தடுமாறுகிறது.

படத்தின் தன்மை உணர்ந்து இசையமைப்பாளர் தமனும் தன் இசையால் அதகளப்படுத்தி இருக்கிறார்.

அருணின் ஒளிப்பதிவு, இருளையும் ஒளியையும் வித்தியாசமான கலவையாக்கி நம்மை வியக்க வைத்திருக்கிறது – படத்துக்கான நிறமும் நேர்த்தி.

இந்தத் தொழில்நுட்ப அற்புதங்களுக்காக நிச்சயம் தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம் இது. 

சப்தம் – ச்சும்மா அதிருதில்ல..?!

– வேணுஜி