நம் சமுதாயத்தில் ஒரு பெண் தனித்து வாழ்வதில் என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன என்று எடுத்துக் கூறும் கதை. அத்துடன் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகவும் இருக்க நேர்ந்தால் தனித்த ஒரு தாயாக எதிர்கொள்ள வேண்டிய ஆபத்துகளையும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அனில் கட்ஸ்.
கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதால் அதற்குப் பொருத்தமாக வரலட்சுமி சரத்குமாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர். ஒரு பெண் குழந்தையின் தாயாக அவரும் அந்தப் பாத்திரத்தில் மிகப் பொருத்தமாக இருக்கிறார்.
கணவரைப் பிரிந்து மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்கு தனித்து வேலை தேடி வரும் பெண் எந்த விதமான பதட்டத்தில் இருப்பாரோ அந்த மனோபாவத்தை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார் வரலட்சுமி அத்துடன் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவில் முன்னாள் கணவனாலும், இந்நாள் வில்லனாலும் அவர் படம் துயரம் கொடுமை.
அவர் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதில் நமக்கே போதும் போதும் என்றாகி விடுகிறது அதற்குப் பிறகான அவரது சீற்றத்துக்கு அந்த கொடுமைகள் நியாயம் செய்கின்றன.
வரலட்சுமியின் முன்னாள் கணவராக கணேஷ் வெங்கடராமன் தன் பாத்திரத்தில் சரியாகப் பொருந்தி இருக்கிறார். வழக்கறிஞராக வரும் ஷசாங்கும் அப்படியே.
வரலட்சுமியின் குழந்தைக்கு தான்தான் தந்தை என்று சொல்லிக் கொண்டு உள்ளே நுழையும் சதிகாரன் பாத்திரத்தில் மைம் கோபியும் நச்சென பொருந்தி இருக்கிறார் ஆனால் அவர் ஆரம்பத்தில் காட்டும் டெரர் கடைசியில் நீர்த்துப்போவது பலவீனம்.
வரலட்சுமியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி நிவேக்ஷாவின் நடிப்பும் அழகும் அற்புதம்.
ஒளிப்பதிவாளர்கள் ராகுல் ஸ்ரீவட்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் ஒளிப்பதிவும் கோபி சுந்தரின் இசையில் பாடல்களும் கதையுடன் இணைந்து பயணித்திருக்கிறது.
வித்தியாசமான கதையாக இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் இயக்குனர். இயக்குனர் அனில் guts உடன் இதில் இறங்கி இருந்தாலும் இன்னும் cuts இல் கவனம் செலுத்தி இருந்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.
பெண்களுக்கான படம். ஆனால், ஆண்களும் பார்க்க முடியும்.