September 15, 2024
  • September 15, 2024
Breaking News
March 23, 2024

ரெபல் திரைப்பட விமர்சனம்

By 0 125 Views

மாவட்டமோ, மாநிலமோ, நாடோ அதன் எல்லைப் பகுதியில் வாழும் மக்களுக்கு எப்போதும் பிரச்சினைதான்

அப்படி இந்தியா, மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதற்குப்பின், தமிழ்நாட்டுக்கு கன்னியாகுமரியை விட்டுக் கொடுத்த கேரளா, மூணார் பகுதியை விட்டுக் கொடுக்க மறுத்ததால் அந்தப் பகுதியில் வாழும் தமிழர்கள் மலையாளிகளால் என்ன விதமான துயரங்களுக்கு ஆளானார்கள் என்று சொல்லும் கதை.

அதை எண்பதுகளில் நடப்பதாக ஒரு உண்மை சம்பவத்துடன் இணைத்து புனை கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நிகேஷ் ஆர் எஸ்.

மூணார் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் கூலித் தொழிலாளிகளாக வாழ்ந்து வரும் தமிழர்கள், தங்களுடைய வாரிசுகளை பட்டப்படிப்பு படிக்க வைத்து விட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள்.

அப்படி சுப்பிரமணிய சிவாவின் மகனாக வரும் ஜிவி பிரகாஷும் அவரது நண்பராக வரும் ஆதித்யா பாஸ்கரும் அரசினர் கல்லூரியில் இடம் கிடைத்து பட்டப்படிப்பு படிப்பதற்காக பாலக்காட்டுக்கு அருகில் உள்ள சித்தூர் வருகிறார்கள்.

மலையாளிகளே பெரும்பான்மையாக ஆக்கிரமித்து இருக்கும் அந்தக் கல்லூரியில் தமிழர்களுக்கான ஹாஸ்டல் வசதி உள்ளிட்ட அனைத்துமே தரக்குறைவாக இருப்பதுடன் மாணவர்களுக்கான எந்த உரிமையும் இல்லாமல் அவர்கள் ‘ராகிங்’ என்ற பெயரால் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

கேரளாவில் மாறி மாறி ஆளும் இரண்டு பெரிய கட்சிகளை சேர்ந்த மாணவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து கல்லூரியில் மாறி மாறி பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கிடையில் சிக்கி அல்லல் படும் தமிழ் மாணவர்கள் பலர் இனி பட்டுப் படிப்புக்கு வழியில்லை என்று ஓடிவிடும் நிலையில், ஜிவி பிரகாஷும் ஆதித்யா பாஸ்கரும் எப்படியாவது படித்துப் பட்டம் பெற நினைக்கின்றனர்.

ஆனால் மலையாள மாணவர்களின் அத்துமீறலில் ஆதித்யா பாஸ்கர் ஒரு கட்டத்தில் கொல்லப்பட இனி அடங்கிக் கிடந்தால் ஆகாது என்று வெகுண்டெழும் ஜிவி பிரகாஷ் தங்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகக் கிளம்புகிறார். அதன் முடிவு என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை.

மாணவர் வேடத்தில் ஜிவி பிரகாஷ் மிகவும் பொருத்தமாக இருப்பதுடன் ஒரு தொழிலாளியின் மகன் என்கிற அளவிலும் அச்ச அசலாகப் பொருந்துகிறார். 

முதல் முதலில் கல்லூரியை பார்த்து பிரமிப்பதாகட்டும், தன்னை ராகிங்கிலிருந்து காப்பாற்றிய நாயகி மமிதா பைஜூ மேல் ஈர்ப்பாகி அது காதலாகிக் கனியும் உணர்ச்சிகளில் ஆகட்டும், தமிழர்கள் எதற்கும் ஆகாதவர்கள் என்று பேராசிரியை சொல்ல… உடனே வெகுண்டு மேடையில் ஏறி இசைஞானி பாடலைப் பாடி கைத்தட்டல் பெறுவதில் ஆகட்டும்… நண்பன் கொல்லப்பட்டதில் ஆழ்ந்த அமைதியாகி பின் புயலாக புரட்சியுடன் வெடிப்பதிலாகட்டும்… ஜிவி பிரகாஷ் பல முகம் காட்டியிருக்கிறார்.

அவர் கேரியரிலேயே அதிகபட்ச ஆக்சன் கொண்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜூ உள்ளே வந்ததும் அவர் மேல் ஜிவி பிரகாஷ் காதல் கொள்வதுமாக இன்னொரு ‘ பிரேமலு ‘வை எதிர்பார்க்கிறோம் ஆனால் அரசியல் உள்ளே புகுந்ததும் அதெல்லாம் கானல் நீர் ஆகிப் போவது நமக்கு ஏமாற்றம்தான்.

மமிதா பைஜூவின் மின்னல் சிரிப்பே நம்மைக் கொள்ளை கொள்கிறது. ஆரம்பத்தில் காதலாகி பின்னர் கட்சிக்காக உழைக்க முடிவு எடுத்ததில் மமிதாவை அடுத்த படத்தில் தான் ரசிக்க வேண்டும் என்று ஆகிவிடுகிறது.

கல்லூரிப் பேராசிரியராக வரும் கருணாஸ், தமிழக மாணவர்களின் நலனுக்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பாராட்ட வைக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தையாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, மகன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அதிசயிக்க வைக்கிறது. 

ஜிவி பிரகாஷ் உடன் கைகோர்க்கும் தமிழ் மாணவர்களாக ‘கல்லூரி’ வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி ஆகியோர் பலமான பாத்திரங்களைப் பெற்றிருக்கிறார்கள்.

மலையாள மாணவர்களின் கட்சி அமைப்பின் தலைவர்களாக நடித்திருக்கும் வெங்கடேஷும், ஷலு ரஹீமும் சேட்டைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

ஆனால் கேரளாவில் இருக்கும் இரண்டு பெரும் கட்சிகளுமே இப்படித்தான் என்கிற ரீதியாக திரைக்கதை அமைத்திருப்பது சரியாக இருக்கிறதா என்பது புரியவில்லை.

அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எண்பதுகளில் கதை நடப்பதை நம்பகத் தன்மையுடன் படம் பிடித்திருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள்  கேட்கும் விதத்திலும், பின்னணி இசை நேர்த்தியுடனும் ஒலிக்கிறது.

உண்மைச் சம்பவம் என்பதால் பெரிய கேள்விகள் எதுவும் நம்மால் கேட்க முடியவில்லை. ஆனாலும் அடிதடியில் இறங்கும் தமிழ் மாணவர்கள் அமைப்பு ரீதியாக தம் உரிமையைப் பெற்றுவிடுவார்கள் என்று நினைக்கும் நேரத்தில் அவர்கள் பின்வாங்குவது திரைக்கதைக்கு வலு சேர்க்கவில்லை.

ஒரு நம்பிக்கை இல்லாத முடிவுடன் படம் நிறைவு பெறுவது ரசிகர்களுக்கான நிறைவைத் தராமல் போகிறது.

ஆனாலும் ஒரு ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்தப் படம் அதைத் தாண்டியும் ரசிக்கவும் வைப்பது பாராட்டுக்குரியது.

ரெபல் – பொறுத்தது போதும்… பொங்கி எழு ..!

– வேணுஜி