உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 4 ஆதிக்க ஜாதி குண்டர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் இளம்பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இன்று காலமானார்.
கறவை மாடுகளுக்கு தீவனம் அறுத்துக் கொண்டு வர மனிஷா என்ற அந்த இளம்பெண் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி வயலுக்கு போனார்.
வயல் வெளியில் அதே ஊரைச் சேர்ந்த 4 ஆதிக்க ஜாதி குண்டர்கள் அந்தப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அத்துடன் நில்லாமல் கொலை செய்துவிடும் நோக்கில் அந்தப் பெண் அணிந்திருந்த துப்பட்டா துணியை அவள் கழுத்திலேயே போட்டு இறுக்கியுள்ளார்கள்.
அதனால் அந்தப் பெண்ணின் கழுத்து எலும்பு நொறுங்கி, தண்டுவடம் பாதிக்கப்பட்டது. அவளால் கை கால்களை இயக்க முடியவில்லை.
அந்தப் பரிதாப சூழ்நிலையில் அவளை அப்படியே விட்டுவிட்டு குண்டர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் அலிகாரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார்.
ஆனால், அவள் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.. சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்ட அந்தப்பெண்ணுக்கு வென்டிலேட்டர் பொருத்தினார்கள். அதன் உதவியால் அவள் சுவாசித்து வந்தாள்.
10 நாட்களுக்கு மேல் காத்திருந்த அவளது தந்தை தனது மகளை டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரினார்.
அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது. அந்தப் பெண்ணின் சகோதரரையும் தனது தங்கையுடன் டெல்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர
அவள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால்தான் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில் மனிஷா என்ற அந்த இளம் பெண் இன்று- செவ்வாய்க்கிழமை அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உரிய நடவடிக்கை உபி அரசால் எடுக்கப்படுமா இல்லை இதுவும் கடந்து போகும் என்று கண் துடைப்பு நடக்குமா?
குரூரமாக கொலையுண்ட மனிஷாவுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே நம் கோரிக்கையும்.