காலங்கள் தோறும் நாம் அறிந்து வைத்திருக்கின்ற ராமாயணம்தான் கதைக்களம்.
ஆனால், அது இலக்கியம் தொடங்கி தெருக்கூத்தாக… நாடகமாக… சினிமாவாக… அதிலும் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு மாறுதல்களை அடைந்து வந்திருக்கும் பாதையில் இப்போது 2டி அனிமேஷனில் வந்திருக்கிறது.
தசரதனின் மகனாக ராமன் பிறந்தது முதல்… விசுவாமித்திரர் அறிவுரையின்படி தாடகையைக் கொன்றது, மிதிலையில் சுயம்வரம் வென்று சீதாவை கைபிடித்தது, கைகேயியின் திட்டப்படி காட்டுக்குச் சென்றது, அங்கு சீதையை ராவணன் கவர்ந்து சென்றது, சீதியைத் தேடிப்போன இடத்தில் சுக்ரீவனின் நட்பு கிடைத்தது, அதன் மூலம் பெற்ற அனுமனின் அறிமுகம் சீதையை இலங்கையில் கண்டுபிடிக்க உதவியது… வானரப் படையின் உதவியுடன் ராமர் பாலத்தை அமைத்து இலங்கைக்கு சென்று போரிட்டு ராவணனை வென்று சீதாவை மீட்டது வரை நாம் அறிந்த எல்லாக் காட்சிகளோடு நாம் அறியாத சில காட்சிகளையும் சுவாரசியத்துக்காக சில சம்பவங்களையும் சேர்த்து வழங்கி இருக்கிறார்கள்.
எல்லாமே அனிமேஷனில் அமைந்த கதையானதால் நடிகர், நடிகையரின் திறமைகள் என்பதைத் தாண்டி இதில் குரல் கொடுத்தவர்கள்தான் நாயக நாயகியர் ஆகியிருக்கிறார்கள்.
ராமன் பாத்திரத்துக்கு குரல் கொடுத்திருக்கும் செந்தில் குமார், சீதாவுக்கு குரல் கொடுத்திருக்கும் டி.மகேஷ்வரி, ராவணனுக்கு குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார், லக்ஷ்மனனுக்கு குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன், ஹனுமானுக்கு குரல் கொடுத்த லோகேஷ் மற்றும் ராமாயண கதையை விவரிக்கும் ரவூரி ஹரிதா என அனைவரும் பங்களிப்பும் குறிப்பிடும்படி அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு காலத்துக்கும் நமது அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப இராமாயணம் பல கேள்விகளை முன்வைக்கும். இதிலும் கூட ஒரு கல் பாலத்தைக் கட்டுவதற்கு ராமன் அத்தனை சிரமப்பட… ஆனால் இலங்கை வேந்தனான ராவணன் சர்வ சாதாரணமாக விமானத்தில் வந்து சீதையைக் கவருவது மற்றும் போரில் வான்வழி வந்து சண்டையிடுவது என்று தொழில்நுட்பத்தில் ரொம்பவே முன்னேறி இருந்திருக்கிறார் என்பது புரிகிறது.
சாதாரணமாக ஆரம்பிக்கும் தொடக்கம், போகப் போக சூடு பிடித்து கடைசியில் ராமன் – ராவணன் போரிடும் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ராமாயணத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் குறிப்பாக குழந்தைகளிடம் இதைக் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சி வெற்றி அடைந்திருப்பதாகவே கருதலாம்.
அதிலும் இறுதிப் போரில் சீரியஸான கட்டத்தில் வானரப் படைகள் செய்யும் சேட்டைகள் நிச்சயம் குழந்தைகளை கவரும். அதிலும் கும்பகர்ணன் வரும் காட்சிகள் பெரியவர்களையே சிரிக்க வைக்கிறது.
அனிமேஷன் ஒரு காமிக்ஸ் படிக்கும் அனுபவத்தை தந்தாலும் அதனுடன் சேர்ந்திருக்கும் ஒலியமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன..
ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா – நெக்ஸ்ட் ஜென் டிராமா..!
– வேணுஜி