பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த டிவி நடிகை அனிகா, கேரளாவைச் சேர்ந்த ரவீந்திரன், அனூப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைதான டிவி நடிகை அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளின் போது போதைப் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார் கூறியிருந்தார். நடிகர், நடிகைகள் இளம் நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர் அதைப் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து போதைப்பொருள் பயன்பாடு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ் நடிகை ராகினி திவேதியின் நண்பரான ஆர்டிஓ அலுவலக இன்ஸ்பெக்டர் ரவி ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து போதைப் பொருள் பயன்பாடு குறித்த விசாரணைக்காக சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜராகும்படி, பிரபல நடிகை ராகினி திவேதிக்கு கோர்ட் உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவர் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே நடிகை ராகிணி திவேதி சார்பில், அவரது வக்கீல் போலீசாரை சந்தித்து பேசி விசாரணைக்கு அவர் ஆஜராக முடியாத காரணம் குறித்து விளக்கம் அளித்தார்.
அதாவது சொந்த பிரச்சினை, உடல் நலக்குறைவு காரணமாக வருகிற 7-ந் தேதி நடிகை ராகிணி திவேதி விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் வழங்கும்படி போலீசாரிடம் வக்கீல் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள நடிகை ராகினி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று திடீரென சோதனை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து நடிகை ராகினி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில், அறியான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடிகை ராகினி திவேதி நடித்துள்ளார் என்பதும் இவர் மூலம் தமிழ் திரையுலகில் உள்ள சிலரும் இந்த போதை விவகாரத்தில் விரைவில் கைதாகக் கூடும் என் றும் எதிர்பார்க்கப்படுகிறது.