August 6, 2025
  • August 6, 2025
Breaking News
August 5, 2025

ராகு கேது திரைப்பட விமர்சனம்

By 0 109 Views

சோதிட, புராணப் பிரியர்கள் எளிதாகத் தொடர்புபடுத்திக் கொள்ளும் படம் இது. 

நவ கிரகங்களில் பிற கிரகங்களுக்கு எதிர்த் திசையில் சுற்றி வரும் சாயா கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும், கேதுவும் எப்படி உருவாகின என்று சொல்லும் கதையை மேடை நாடகங்களில் புகழ்பெற்ற டி .பாலசுந்தரம் நடித்து இயக்கி இருக்கிறார்.

கதைப்படி தேவர்களுக்கும், அசுரர்களுக்குமான தொடர் மோதலில் தேவர்கள் பக்கம் நிறைய இழப்புகள் ஏற்பட, இறவா வரம் கிடைக்க வேண்டி நாரதரின் யோசனைப்படி பாற்கடலில் துயிலும் மகா விஷ்ணுவை சந்திக்கிறார்கள்.

அப்போது அவர், பல்வேறு மூலிகைகளை பாற்கடலில் கலந்து விட்டு, மலையை மத்தாகவும், பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைந்தால் அமுதம் உருவாகும் என்றும், அதை அருந்துபவர்களுக்கு மரணமிலாப் பெருவாழ்வு கிடைக்கும் என்று கூற, ஒரு பக்கம் தேவர்களும், மறு பக்கம் அசுரர்களுமாக நின்று பாற்கடலைக் கடைய அமுதம் கிடைக்கிறது.

அதில் தங்கள் பங்கைக் அசுரர்கள் கேட்க, மோகினி உருவமெடுக்கும் மகா விஷ்ணுவின் தந்திரத்தால் தேவர்கள் மட்டுமே அதை அருந்துகிறார்கள்.

ஆனால், அசுர இளவரசனான சுபர்பானு, மகா விஷ்ணுவின் தந்திரத்தை மிஞ்சும் விதமாக தேவர் வேடத்தில் சென்று அமுதத்தை அருந்துகிறார்.

இதை அறிந்த மகா விஷ்ணுவின் கோபம் சுபர்பானுவை என்ன செய்தது, அதில் ராகு, கேது எவ்வாறு உருவாகிறார்கள் என்று சொல்லும் கதை.

போலீஸ், தாதா அல்லது அப்பா வேடங்களில் மட்டுமே நாம் பார்த்துப் பழக்கப்பட்ட  சமுத்திரக்கனியை சிவன் வேடத்தில் பார்க்க வித்தியாசமாக இருக்கிறது.

அதேபோல் மீசை எடுத்த விக்னேஷ் மகாவிஷ்ணுவாக வருவதும், கஸ்தூரி துர்கா தேவியாக வருவதும். அவர்களுக்கு கூட இது வித்தியாசமான அனுபவத்தை தந்திருக்கும்.

இவர்களுடன் சாதனா சங்கர் லட்சுமியாகவும், பாலசுந்தரம் சுபர்பானு மற்றும் ராகு கேதுவாகவும், ரவிக்குமார் நாரதராகவும், கிரிஷ் வெங்கட்  இந்திரனாகவும் , கௌஷிகா கோபிகிருஷ்ணன் பார்வதியாகவும், அர்ச்சனா காந்தன் மோகினியாகவும், சுபர்பானுவின்  ஜோடியாக சந்தியா ஶ்ரீயும் நடித்துள்ளனர்.

தலை வேறு உடல் வேறு ஆக மாறிப்போகும் சாகா வரம் பெற்ற சுபர் பானுவை அவரது இஷ்ட தெய்வமான துர்கா தேவி தன் கழுத்தில் இருக்கும் பாம்பால் தலையும் உடலும் கொடுத்து ராகு கேதுவாக மாற்றுகிறார் என்ற விஷயம்தான் இந்த படத்தின் ஹைலைட்டான காட்சி. 

பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் இந்த முக்கியமான காட்சியை கொஞ்சம் செலவு செய்து கிராபிக்ஸ் வல்லுநர்களைக் கொண்டு வடிவமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ள கலைமாமணி கே.பி.அறிவானந்தம் கவனிக்க வைக்கிறார். தொழில்நுட்பத்தில் சற்றே குறைபாடு இருந்தாலும் அவற்றையெல்லாம் மறக்கச் செய்வது இவரது அழகான தமிழ் தான். 

ஒளிப்பதிவாளர் மோகன் பிரசாந்த்துக்கு பெரிய வேலை இல்லை. எனவே எடிட்டர் பி. லெனினுக்கும் அப்படியே.

பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் சதா சுதர்சனமும், பின்னணி இசை அமைத்திருக்கும் பரணிதரன் பங்கிலும் குறைவில்லை.

ஒரு மேடை நாடகம் பார்த்த அனுபவத்தை தந்திருக்கும் இந்தப்படம் அடுத்த தலைமுறைக்கும் போய் சேர வேண்டும் என்று நினைத்திருந்தால் அதை இன்னும் கொஞ்சம் தொழில்நுட்ப தரத்தில் தந்திருக்க வேண்டும். 

அப்படி தந்திருந்தால் மகாவதார் நரசிம்மா இன்று உலக அளவில் வெற்றி கொடி நாட்டியது போல் இந்தப் படமும் வெற்றி பெற்றிருக்கும்.

– வேணுஜி