May 18, 2024
  • May 18, 2024
Breaking News
August 8, 2023

பிரியமுடன் ப்ரியா திரைப்பட விமர்சனம்

By 0 232 Views

அன்புக்காக ஏங்கும் மனிதனுக்கு ஒற்றை  ஆளாய் அன்பு காட்டுவது கூட எத்தனை ஆபத்து என்று உணர்த்தி இருக்கும் படம்.

ஒரு எஃப் எம் ஒரு ரேடியோ நிலையத்தை சுற்றிய அமைக்கப்பட்டிருக்கும் கதை. அதில் புகழ்பெற்ற ஆர்.ஜே.வாக இருக்கும் லீஷா, தன்னுடைய கடைசி நிகழ்ச்சியை நிகழ்த்தவிருக்கிறார். அதற்குப்பின் அவர் திருமணம் ஆகி செட்டில் ஆகப் போகிறார் என்பது ஒரு வசனத்தின் மூலம் உணர்த்தப்படுகிறது.

அவரது ரசிகர்கள் அந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு மூலையில் ஏங்கிக் கிடக்க லீஷா வசிக்கும் அவரது அக்காவின் வீட்டுக்குள் கொள்ளையன் போன்ற ஒரு நபர் புகுந்து அக்காவைக் கட்டிப் போடுகிறார். அவர்தான் நாயகன் அசோக்.

அவரது தேவை வேறொன்றுமில்லை – லீஷாவின் ரசிகராக… அல்ல… வெறியராக இருக்கும் அவர் இந்த வானொலி மூலமே லீஷாவின் அன்பு கிடைக்கப்பெற்று, அந்தக் குரலுக்காகவே தவமிருந்து வருபவர்.

லீஷாவின் இந்தக் கடைசி நிகழ்ச்சியை தன்னுடைய ரசிக வெறிக்கு ஈடு கொடுக்கும் நிகழ்ச்சியாக நடத்த நினைக்கிறார் அசோக். அதற்காகத்தான் இந்த மிரட்டல் ஏற்பாடு. ஏற்கனவே லீஷா திட்டமிட்டு இருப்பதற்கு பதிலாக, தான் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்றும் அப்படி நடக்கவில்லை என்றால் அக்காவைக் கொன்று விடப் போவதாகவும் மிரட்டுகிறார்.

சிறிய வயதில் இருந்து லீஷாவின் அக்காதான் அவரை வளர்த்து முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறார். கணவனை இழந்த நிலையில் இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவருக்கு இது பேரிடியாக இருக்க… வீட்டுக்குள் இருக்கும் அந்தக் குழந்தைகள் அசோக் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ள கண்களாலேயே குழந்தைகளுக்குக் கட்டளையிடுகிறார்.

அப்படியும் ஒரு குழந்தையை அசோக் சிறை பிடிக்க, வாய் பேச முடியாத செவித்திறன் இல்லாத இன்னொரு குழந்தை மட்டும் அந்த வீட்டுக்குள்ளேயே அசோக் கண்ணில் படாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறது.

லீஷா மூலம் தகவல் அறிந்து வந்த போலீசையும் அசோக் போட்டுத் தள்ளிவிட, எப்படித்தான் இந்த படம் முடிய போகிறதோ என்கிற பதைபதைப்புடன் நாம்.

முரட்டு வேடம் அசோக்குக்கு அற்புதமாகப் பொருந்தி வந்திருக்கிறது. ஆனாலும் அவர் ஆபத்தாக ஒன்றும் செய்து விட மாட்டார் என்று நினைத்தால் இரண்டு போலீஸ்காரர்களைப் போட்டு தள்ளுவதும் ஒரு கட்டத்தில் ஷீலாவின் அக்காவையே கொல்ல முடிவெடுத்து செயல்படுவதையும் பார்க்கும்போது பக் என்று இருக்கிறது.

ஒரு ஆர்.ஜே எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார் லீஷா. குரலும் பேசும் பாங்கும் பலரைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்று சொன்னால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும். 

லீஷா மீது அசோக்கிற்கு இருப்பது காதலா என்று இயக்குனருக்கே கொஞ்சம் குழப்பம் இருப்பதால் அதை தீர்த்துக் கொள்வதற்காக இருவருக்குமான டூயட் சாங் ஒன்றைப் போட்டு திருப்திப்பட்டுக் கொள்கிறார்.

லீஷாவின் அக்காவை அசோக் நாற்காலியில் கட்டிப் போட்டாலும் அந்த ஒரே இடத்தில் இயங்கும் கதையில் ரசிகர்களைக் கட்டிப் போட என்ன செய்யலாம் என்று யோசித்த இயக்குனர், கட்டிப் போட்டிருக்கும் அக்காவை பல கோணங்களிலும் படு கவர்ச்சியாகக் காட்டி இருக்கிறார்.

அம்மா கட்டிப் போடப்பட்டிருக்க, தன்னால் பேசவும் இயலாத நிலையில் அசோக்கின் கண்களில் மாட்டிக் கொள்ளாமல், அதே நேரத்தில் அம்மாவையும், தன் தங்கையையும் காப்பாற்றப் போராடும் அந்தக் கொழு கொழு குழந்தை படும்பாடு நம்மைத் தவிக்க வைக்கிறது. சென்டிமென்ட் பிரியர்களுக்கு இந்த எபிசோட் ரொம்பவே பிடிக்கும்.

எஃப்எம் முதலாளி தலைவாசல் விஜய் பட ஆரம்பத்திலிருந்து டென்ஷனோடே இருக்கிறார். ஆனால் கடைசியில் நிலைமையைப் புரிந்து கொண்டு இந்தப் பிரச்சனையை முடிக்க அவரும் தன் பங்கைச் செய்கிறார்.

அதேபோல் லீஷாவின் இன்னொரு ரசிகனாக வந்து ஆரம்பத்தில் கடுப்பேற்றும் வைகாசி பொறந்தாச்சு ரவி, பின்னால் முக்கிய பங்காற்றுகிறார்.

ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றிப் படம் எடுத்ததால் அலுத்துப்போன ஒளிப்பதிவாளர் ஷா, ஒரு கார் சேஸிங் காட்சி கிடைத்ததும் சுறுசுறுப்பாகி அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவாவுக்கு இது நூறாவது படமாம். அதைப் பெருமைப்படுத்த இயக்குனர் ஏ.ஜே. சுஜித், ஸ்ரீகாந்த் தேவாவுக்காகவே ஒரு பாடலை இசைக்க வைத்து, படமாக்கி படத்தின் ஆரம்பத்தில் இணைத்திருக்கிறார். ஆனால் ஸ்ரீகாந்த் தேவாவோ இதுவரை 99 படங்களில் எதைச் செய்தாரோ அதை மட்டுமே இந்த நூறாவது படத்திலும் செய்திருக்கிறார். வேறொன்றும் கவனிக்கும்படி செய்ததாகத் தெரியவில்லை. 

அவர் இசையில் ஜீவன் மயில் எழுதியிருக்கும் இரண்டு பாடல்கள் கவனத்தைக் கவர்கின்றன.

ஒரு சென்டிமெண்ட் ‘டச்’ சோடு முடியும் இந்த பிரியமுடன் ப்ரியாவைக் கொண்டாட முடியாவிட்டாலும், ரசிகனை ஏமாற்றாத நேர்மையான முயற்சி கொண்ட படம்.

கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..!