May 5, 2024
  • May 5, 2024
Breaking News
October 7, 2022

பிஸ்தா திரைப்பட விமர்சனம்

By 0 532 Views

புதிதான கதைக்களத்தையும் ஹீரோவுக்கு ஒரு புதிய கேரக்டரையும் படைப்பதற்கு எவ்வளவு பாடுபட வேண்டி இருக்கிறது என்பதற்கு உதாரணம் இந்தப் படம்.

மனதில் ஒருவனை நினைத்துக் கொண்டு வேறு ஒருவருக்கு தாலி கட்ட நேரும் பெண்களை மற்றும் கல்யாணத்தை எந்த காரணத்துக்காக நிறுத்த வேண்டும் என்றாலும் மணப்பெண்ணைக் கல்யாணத்தன்று தூக்கிக் கொண்டு போகும் வேலை நாயகனுக்கு. இப்படி விருப்பமில்லாத கல்யாணங்களை தடுத்து நிறுத்துவதை ஒரு வேலையாகச் செய்து வருகிறார்.

இந்த காரணத்தாலேயே அவர் மீது அவர் இருக்கும் ஊரில் வெறுப்பு ஏற்பட்டு ‘ கல்யாணத்தை நிறுத்துபவர் ‘ என்ற அவப்பெயர் ஏற்படுகிறது. கல்யாணங்களை நிறுத்தியவர் என்ற காரணமே அவருக்கு எதிராக வர, அவருக்கு யாரும் பெண் கொடுக்க மறுக்க அவரது திருமணம் நடக்காமலேயே போகிறது.

இதற்கிடையில் அவருக்கு ஒரு காதலும் வர, அந்த காதலியும் அவரை தவறாக புரிந்து கொண்டதனால் அந்த திருமணமும் கைகூடாமல் போக கடைசியில் அவர் என்னதான் செய்தார் என்பது கிளைமாக்ஸ்.

மெட்ரோ சிரிஷ் என்று நாம் அறிந்து வைத்திருக்கும் சிரிஷ்தான் படத்தின் ஹீரோ. அவரது அப்பாவித்தனமான முகம் அனைவரையும் கவர்ந்தாலும் செய்யும் வேலை பல குடும்பங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவதால் ஒரு வில்லன் போலவே பார்க்கப் படுகிறார். 

தன்னை தவறாக புரிந்து கொண்ட காதலியை சரிகட்டும் காட்சிகளில் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது. கடைசியில் அவர் எடுக்கும் முடிவு சமூகநோக்கில் அமைந்திருப்பதைப் பாராட்டலாம்

சிரிஷின் காதலியாக வருகிற மிருதுளா முரளியை விட அவரது தோழியாக நடித்திருக்கும் அருந்ததிநாயர் அழகாக இருக்கிறார். 

மிருதுளா முரளியை துரத்துவதை விட்டுவிட்டு இந்த அருந்ததி நாயரை சிரிஷ் காதலித்து இருக்கலாமே என்று காட்சிக்கு காட்சி நமக்கு தோன்றி கொண்டே இருக்கிறது. அதற்கு ஒரு நியாயமும் கடைசியில் இருக்கிறது.

சதீஷ், யோகிபாபு, செந்தில், நமோ நாராயணன், லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோர் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள். நம்மை சிரிக்க வைப்பதற்கு பதிலாக சாமிநாதன் அவரே படத்தில் சிரித்துக்  கொண்டிருக்கிறார்.

குடும்பங்களை தியேட்டருக்கு கொண்டு வரும் இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்து இருக்கலாம்.

தரண்குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் நிறைவாக இருக்கிறது.

எம்.விஜய்யின் ஒளிப்பதிவில் கும்பகோணம் புதிதாக தோற்றமளிக்கிறது.

கிளைமாக்சில் ‘அட..! ‘ போட வைக்கும் ஒரு செய்தியைச் சொல்லி இருப்பதற்கு இயக்குநர் ரமேஷ்பாரதியைப் பாராட்டலாம். அதற்கு முந்தைய ஒரு அரை மணி நேர காட்சிகளும் நம்மை மறந்து சிரிக்க வைக்கின்றன.

பிஸ்தா – நல்ல மனம் வாழ்க..!