March 28, 2024
  • March 28, 2024
Breaking News
December 30, 2018

பிரான்மலை படத்தின் திரை விமர்சனம்

By 0 1272 Views

பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஊரறிந்த கதையே போதுமானது. ஆனால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு உயிராக நிற்பது வாழ்க்கைக் கதைகளும், நிறைவான திரைக்கதையும்தான். அப்படி இந்த வருடக் கடைசியில் வந்திருக்கும் சின்னப் படம் பிரான்மலை.

காதல்தான் படத்தின் அடிநாதம் என்றாலும், சமூகத்தில் உறைந்து கிடக்கும் ஆணவக்கொலை என்னும் அட்டூழியத்தைத் தொட்டு அந்தக் காதலை காவியமாக்க முனைந்திருக்கிறார் இயக்குநர் அகரம் காமுரா.

பிரான்மலை ஊரில் பெரிய மனிதராக இருக்கும் வேல ராமமூர்த்தியின் மகன் வர்மன்தான் கதையின் நாயகன். ஆள் பலம், பணபலம், அதிகாரம், செல்வாக்கு அவை அனைத்தும் இருக்கும் வேல ராமமூர்த்திக்கு வெட்டியாய் இருக்கும் மகன் மீது கவலை. அதனால், அவரை கரூரில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால், மகன் வர்மனோ அங்கே செல்லாமல்  கோயமுத்தூர் சென்று பிளாக் பாண்டியின் நட்பில் காலத்தைக் கழிக்கிறார்.

அங்கே தன் ஊரில் சந்தித்த நாயகி நேகாவை மீண்டும் சந்தித்து அவள் மீது காதல் கொள்கிறார். ஏற்கனவே ஊரில் தன்னிடம் வம்பு செய்த மணிமாறனைத் தட்டிக் கேட்டதால் வர்மன் மீது நாயகிக்கும் ஒரு ஈர்ப்பு இருக்க, அவரும் ஒரு கட்டத்தில் வர்மனைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் நேகா தங்கியிருக்கும் விடுதியில் நடக்கும் பாலியல் துன்புறுத்தலை நேகாவின் மூலம் அறியும் வர்மன், போலீஸிடம் போட்டுக் கொடுத்து விடுதி நிர்வாகியை ஜெயிலுக்கு அனுப்புகிறார்.

இதனால், நேகா ஆதரவில்லாமல் போக, வேறு வழியில்லாமல் அவர் வர்மன் திருமணம் செய்ய நேர்கிறது. ஏற்கனவே அவரது காதல் தெரிந்த வேல ராமமூர்த்தியும், அவரது உறவினர்களும் கடுப்பில் இருக்க, இந்தத் திருமணச்செய்தி அவர்களை மேலும் கோபத்துக்குள்ளாக்குகிறது. இன்னொரு பக்கம் வர்மனும், நேகாவும் ஜெயிலுக்கு அனுப்பிய விடுதி நிர்வாகியும் வெளியே வர, நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு என்ற நிலையில் இருவரும் என்ன ஆனார்கள் என்பது பதைபதைப்பான கிளைமாக்ஸில்.

ஒரு புதுமுகம் என்ன செய்ய முடியுமோ, அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் வர்மன். குழந்தைகளுடன் குமாளம் போடுவதிலும், அப்பாவைக் கண்டால் பம்முவதிலும்… குறிப்பாக கிளைமாக்ஸில் நடிப்பிலும் நன்றாகச் செய்திருக்கும் இவருக்கு காதல், ஆக்‌ஷன் எல்லாமே நன்றாக வர, முன்னணி இயக்குநர்களின் கையில் இவர் கிடைத்தால் இன்னும் மிளிர்வார். 

நேகாவும் இது முதல் படம்தான், கேரக்டரைசேஷனால் கவரும் இவருக்கு நடிக்க வாய்ப்பு குறைவென்றாலும் கிளைமாக்ஸில் கண்கலங்க வைக்கிறார். 

வேல ராமமூர்த்திக்கு இதைவிட்டால் வேறு கேரக்டரே இல்லையா எனும் அளவில் கந்து வட்டிக் கொடுமைக்காரரராகவும், கோபக்காரருமாகவே வருகிறார். அவருக்கு இந்த வேடம் நண்றாக வருகிறது என்றாலும் நடிக்கத் தெரிந்த இவர் பாதைமாறிக்கொள்வது நலம். அப்படிப்பட்ட கல்நெஞ்சக்காரரே கடைசியில் கரைவது நெகிழ்ச்சி.

அவரது உறவினர்களாக வரும் நடிக, நடிகையரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். அதிலும் நாயகனின் சித்தி, கிளமாக்ஸில் வரும் கிழவி மனதில் பதிகிறார்கள்.

 முன்னணி ஒளிப்பதிவாளரான எஸ்.மூர்த்தியின் ஒளிப்பதிவும், பாரதி விஷ்கரின் இசையும் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன. 

பிளாக்பாண்டியும், கஞ்சா கருப்புவும் இருந்தும் காமெடி எடுபடாமல் போனது ஒரு குறை. எந்த விளம்பரமும், குறிப்பாக இப்படி ஒருபடம் எடுக்கப்பட்டதோ வெளியே வந்ததோ தெரியாமல் அமுங்கிப் போனதுதான் படத்தின் பெரும்குறை. ஆனால், தியேட்டருக்குள் சென்று படத்தைப் பார்ப்பவர்கள் நிச்சயம் பாராட்டவே செய்வார்கள். 

பிரான்மலை – ஏழைகளின் ‘சேது..!’