April 19, 2024
  • April 19, 2024
Breaking News
May 22, 2023

பிச்சைக்காரன்2 திரைப்பட விமர்சனம்

By 0 195 Views

இப்படி ஆனால் எப்படி ஆகும் என்பதுதான் ஒரு சயின்ஸ் பிக்ஷனுக்கான இலக்கணம். அந்த வகையில் சாத்தியமே இல்லாத மூளை மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் ஆகி இருக்கிறார் விஜய் ஆண்டனி.

அப்படி ஒரு கோடீஸ்வரனுக்கு பிச்சைக்காரன் மூளையை மாற்றப்போய் நடக்கும் விளைவுகள்தான் கதை. அதற்காக அப்படியே சயின்ஸ் பக்கம் போய் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். சென்டிமென்ட்தான் படத்தின் உயிர்நாடி.

எதற்கு இந்த விபரீத சிகிச்சை என்கிறீர்களா..? எல்லாம் பணத்துக்காகத்தான். கோடீஸ்வரன் வசமிருக்கும் லட்சம் கோடி சொத்துக்களை அவரது (உயிர் ?) நண்பர்கள்.ஆசைப்பட்டு மூளையைக் கசக்கி இந்த மூளை மாற்று வேலையை மேற்கொள்ள, பிச்சைக்காரன் மூளை எப்படி வேலை செய்கிறது..? இருக்கிற சொத்தை எல்லாம் ஏழைகளுக்கு அளிக்க ஆசைப்படுகிறது. முடிந்ததா என்பது மீதி.

கோடீஸ்வரனாகவும், பிச்சைக்காரனாகவும் விஜய் ஆண்டனியே இரு வேடங்களில் வருகிறார். என்ன, பிச்சைக்காரருக்கு மூக்கு கொஞ்சம் நீளமாக இருக்கிறது. இந்த அளவுக்குத்தான் விஜய் ஆண்டனியின் இரட்டை வேட நடிப்பிலும் நாம் காணும் வித்தியாசம்.

மற்றபடி ஆக்ஷன் போர்ஷன்களிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் நிறையவே தேறி இருக்கிறார் அவர். குறிப்பாக கிளைமாக்ஸ் கோர்ட் சீனில் கண்ணீர் மல்கி இளகிய மனம் கொண்டவர்களையும் இளக்கி விடுகிறார்.

மிரட்டல் வில்லன் தேவ்கில் மற்றும் ஹரீஷ் பெரேடி, ஜான் விஜய், மருத்துவர் கிட்டி, அண்ணன் – தங்கையாக நடித்திருக்கும்  குழந்தை நட்சத்திரங்கள், முதல்வர் ராதாரவி, போலீஸ் அதிகாரி மன்சூர் அலிகான் என அனைவரும் தங்கள் வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனியின் இசை கொஞ்சம்.ஓங்கியே ஒலித்திருக்கிறது. ஓம் நாராயண் ஒளிப்பதிவில் காட்சிகள் ஆங்கிலப்படம் போல் மின்னுகின்றன.