நடிகர் விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது.
‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும்.
இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, “எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். ‘பிச்சைக்காரன்’ படத்துக்காக இயக்குநர் சசி அவர்களுக்குத்தான் நான் முதலில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
காரணம், என்றென்றும் மறக்க முடியாத வெற்றிப்படமாக எங்கள் நிறுவனத்துக்கு அமைந்த படம் ‘பிச்சைக்காரன்’. சசி அந்தப் படத்துக்காக மிகச் சிறப்பாகப் பணியாற்றி மகத்தான வெற்றியை ஈட்டித் தந்ததுதான், இப்போது மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் இரண்டாம் பாகத்தைத் தொடர காரணமாக அமைந்திருக்கிறது.
விமர்சன ரீதியில் பெரும் பாராட்டைப் பெற்றதுடன் தேசிய விருதையும் வென்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி, பிச்சைக்காரன் 2 படத்தில் இணைந்திருப்பது எங்கள் நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.
தேசிய விருது பெற்ற ‘பாரம் ‘ மட்டுமின்றி, அவர் உருவாக்கிய ‘கங்கூபாய்’ மற்றும் ‘பெர்ஸி’ ஆகிய படங்களும் வித்தியாசமான உருவாக்கத்திற்காக வெகுவாக பாரட்டப்பட்ட படங்களாகும். விஜய் ஆன்டனி நடித்த படங்களிலேயே மிக அதிக பொருட் செலவில் தயாராகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கதைக் களம் இதுபோன்ற பொருட் செலவு மூலம், படத்தின் மதிப்பைக் கூட்டுவதாக அமைந்திருக்கிறது” என்று கூறினார் பாத்திமா விஜய் ஆன்டனி.
விஜய் ஆன்டனியைப் பொறுத்தவரையில் இந்தப் படத்துக்காக இப்போதே தயாராகத் தொடங்கி விட்டார். முதற்கட்டமாக பத்து முதல் பதினைந்து கிலோவரை உடல் எடையைக் குறைக்கும் முனைப்புடன் கடும் உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
கதாநாயகி வேடத்தில் நடிக்க முன்னணி நாயகிகள் சிலருடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வரும், கலை இயக்குநராக ஆறுமுக ஸ்வாமியும், சண்டைப் பயிற்சியாளராக மகேஷ் மாத்யூவும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் பணியாற்ற ஒப்பந்தமாகியிருக்கின்றனர்.