April 29, 2024
  • April 29, 2024
Breaking News
April 27, 2022

பயணிகள் கவனிக்கவும் திரைப்பட விமர்சனம்

By 0 635 Views

செல்போன் கண்டுபிடிக்கப்படும் வரை ஆஃப்லைனில் அடுத்தவர் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருந்த நாம், செல்போன் வந்த பிறகு ஆன்லைனிலும் அடுத்தவர் வாழ்க்கைக்குள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் செல்போனில் படம்பிடித்து அதன் உண்மைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் கமெண்டுகளும் மீம்ஸ்களும் போட்டு அதை அடுத்தவருக்கு அனுப்பிக் கொண்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் வாழ்வில் எத்தகைய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது என்று உரத்துச் சொல்லும் படம்.

சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவனாக நச்சென்று பொருந்தியிருக்கிறார் நடிகர் விதார்த். தான் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அதற்குரிய நியாயம் சேர்த்து நடித்துக் கொண்டிருக்கும் அவர், இந்தப் படத்தில் சிறப்புத் திறன் கொண்டவராக நடித்திருக்கிறார்.  காது கேளாத வாய் பேச இயலாத அந்தப் பாத்திரத்தை அற்புதமாக நடித்துக் கடந்திருக்கிறார் விதார்த்.

அவர் பேசுவது நமக்கு புரியாமல் புரிய வேண்டும் என்கிற அளவுகோலில் இம்மியளவும் பிசகாமல் வார்த்து எடுத்து அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் விதார்த் கிளைமாக்ஸ் காட்சியில் தன் வாழ்வை தன்னையறியாமல் சிதைத்தவரை மன்னிக்கும் இடத்தில் மலைக்க வைத்திருக்கிறார்.

அவருக்கு இந்த வருடத்தின் உயரிய விருதுகள் கிடைக்கப்பெறும் என்று நிச்சயமாக நம்பலாம்- அப்படி கிடைக்கவில்லை என்றால் அது விருது கமிட்டியின் தவறே தவிர அவரது தவறு அல்ல. ஹீரோயிஸம் என்பது துளியும் இல்லாமல் நடித்திருக்கும் விதார்த் ரொம்பவே ‘ யதார்த்..!’

அவரது மனைவியாக வரும் லட்சுமி பிரியாவுக்கு சிறிய வேடம்தான் என்றாலும் கிடைத்த இடத்தில் எல்லாம் தன் இயல்பான நடிப்பினால் ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக மனம் புழுங்கி கண்ணீர்விடும் கணவனைத் தேற்றும் இடத்தில் இப்படி ஒரு மனைவி அமைந்தால் எந்த பிரச்சனையையும் ஒரு மனிதன் சமாளிக்க முடியும் என்று தோன்றுகிறது.

விதார்த்தின் குழந்தைகளாக நடித்திருக்கும் இருவரும் அற்புதமான தேர்வில் வருகிறார்கள். அப்பாவைத் தவறாக புரிந்து கொண்டு பின்னர் உண்மை தெரிந்ததும் கண்கலங்கும் பதின்பருவ மகனாக நடித்திருக்கும் சிறுவன் மனதில் நிறைகிறார்.

விதார்த்துக்கு நிகராக இன்னொரு நாயகனாக வருகிறார் கருணாகரன். துபாய் ரிட்டன் ஆக வரும் அவர் தன் சிறு வயது தோழியை ஒருதலையாக காதலித்து அவளது அப்பாவிடம் பெண் கேட்கப் போகும் இடத்தில் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறார். 

அவர் இயல்பாக செய்யும் ஒரு தவறு விதார்த்  வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதே கதையாக இருக்க அந்த உண்மை தெரியும் நேரத்திலிருந்து குற்ற உணர்ச்சியிலும், தான் செய்த பாவம் தன்னை திரும்பி வந்து தாக்குமோ என்ற அச்சத்திலுமாக நகைச்சுவை தாண்டி உருக்கமாகவும் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அடையாளம் தெரிகிறார் கருணாகரன்.

அவரது காதல் மனைவியாக வரும் மாசம் சங்கரும் அழகாகவும் அளவாகவும் நடித்து பாத்திரத்தில் நிரைகிறார். முதலிரவில் கூட தன்னை தீண்டாமல் ஒரு ஆசை வார்த்தை கூட பேசாமல் தனித்திருக்கும் கணவனிடம் மனம் நொந்து கொள்ளாமல் தனக்குள் மாசூம தவிக்கும் தவிப்பு ‘ ஆஸம்..!’

மலையாள சினிமாவில் இருந்து வாங்கிய ஒரு மெல்லிய இழையைப் பிடித்து இன்றைய சமூகத்திற்கு ஒரு செய்தியையும் சொல்லி அலுப்பில்லாமல் அதே நேரத்தில் அழகாகவும் திரைக்கதை அமைத்து இந்த படத்தை ரசிக்கும்படி தந்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல்.

அழகியல் கருதி அங்கங்கே காட்சிகள் மெதுவாக நகர்வதைக் குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். அதேநேரம் கல்யாணம் ஆகி பல நாட்கள் ஆகியும் சுண்டு விரல் கூட மனைவி மேல் படாமல் இருக்கும் கருணாகரன் கடைசியில் பிரச்சனை தீர்ந்து மனைவியுடன் முதலிரவைக் கொண்டாடினார் என்று முடித்திருந்தால் இன்னும் ரசிக்கும்படி இருந்திருக்கும்.

கருணாகரனின் தாய், தங்கை, நண்பர்களாக வரும் முகங்களும் இயல்பாக நடித்து பெயர் வாங்கிக் கொள்கிறார்கள். வித்தியாசமான தண்டனை கொடுக்கும் இன்ஸ்பெக்டர் பிரேமின் பாத்திரமும் பிரேம் பிசகாமல் இருக்கிறது.

ஒளிப்பதிவு சென்னையில் பல கோணங்களில் காட்டி ரசிக்க வைத்திருக்கிறது. மெட்ரோ ரயில் வந்த பிறகு அதை அதிகமாக பயன்படுத்திக் கொண்ட படம் இதுவாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட மெட்ரோ ரயிலும் இதில் ஒரு பாத்திரமாக ஆகியிருக்கிறது.

படத்தின் தன்மைக்கேற்ப இந்த படத்தில் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி… அழகியல் கலந்தே ஒலித்திருக்கிறது.

ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும் இந்த படம் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் பார்த்து ஆஹா சொல்ல வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பயணிகள் கவனிக்கவும் – ரசித்து பயணிக்கவும்..!