April 29, 2024
  • April 29, 2024
Breaking News
November 10, 2022

பரோல் திரைப்பட விமர்சனம்

By 0 362 Views

சினிமாவில் காட்டப்படும் வடசென்னை கதைகளை பார்த்தால் சென்னையில் வாழ்பவர்களுக்கே அடி வயிற்றில் ஒரு பந்து உருளும் என்றால் மற்ற மாவட்டத்துக்காரர்கள் வடசென்னையை எப்படித்தான் எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

வெற்றிமாறன் தொடங்கி மற்ற மாறன்கள் வரை வடசென்னையை வகை வகையாகப் பிரித்து தமிழ் சினிமாவில் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவற்றில் எல்லாம் ‘ கான்செப்ட் ‘ அளவில் பாசிட்டிவ் அப்ரோச் படமாக இதைக் கொள்ளலாம்.

வடசென்னை என்றாலே கொள்ளை, கொலை, வஞ்சகம், சூழ்ச்சி என்று காட்டப்படும் நிலையில் இந்தப் பட ஆரம்பமும் பதின் பருவத்து நாயகன் ஜெயிலுக்கு உள்ளேயே வைத்து தன் வயதை ஒத்த 3 பதின் பருவ சிறார்களைக் கொல்வதில் இருந்து படம் தொடங்குகிறது.

அந்த நாயகன் இளைஞனாகி வெளியே வந்தாலும் தொடர்ந்து அசைன்மென்ட் என்ற அளவில் கொலைகளாக செய்து உள்ளே போய் வந்து கொண்டிருக்கிறார். கரிகாலன் என்ற அந்த வேடத்தை நடிகர் லிங்கா ஏற்றிருக்கிறார்.

அவரது தம்பி கோவலனாக வரும் ஆர்.எஸ். கார்த்திக்கும், அவருக்கும் ஒத்துப் போவதே இல்லை. தந்தை இல்லாமல் தாயின் பராமரிப்பில் வளரும் இருவருக்கும் தங்கள் தாய் தன்னைவிட இன்னொருவன் மேலேயே அதிக அக்கறை கொண்டிருக்கிறாள் என்ற எண்ணத்தில் ஒருவர் மேல் ஒருவர் பகையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை ஒன்று சேர்க்க முயலும் தாய் ஒரு கட்டத்தில் இறந்து போக, அந்த நேரம் லிங்கா ஜெயிலில் இருக்க, சூழ்நிலை கொடுக்கும் அழுத்தத்தில் அவரை பரோலில் எடுக்க முயலும் ஆர்.எஸ்.கார்த்திக்கின் முயற்சி என்ன ஆனது என்பதுதான் கதை.

ஆர்.எஸ் கார்த்திக், லிங்கா இருவரின் நடிப்பும் சிறப்பு. ஒருவரிடம் ஒருவர் காட்டும் ஈகோவில் தனித்து தெரிகிறார்கள். ஆனால் பார்வைக்கு கார்த்திக் அண்ணன் போலவும் லிங்கா தம்பி போலவும் தெரிகிறார்கள். மாற்றி யோசித்து விட்டார்களோ..?

அம்மாவாக நடித்துள்ள ஜானகி சுரேஷுக்கு சிறிய வேடம் தான் என்றாலும் படத்தை முழுவதும் தாங்கிச் செல்லும் பாத்திரம். பல காட்சிகளில் பிணமாகவே இருந்தாலும் அதிலும் நடிப்பை காட்டக்கூடிய வாய்ப்பும் அதைத் தேர்ந்து செய்திருக்கும் திறமையும் வியக்க வைக்கிறது.

‘சிஸ்டர் ‘களாக வரும் இருநாயகிகளுக்கும் முக்கியத்துவம் இருப்பதோடு இருவரும் வட சென்னைக்கு உரிய வீரியத்துடன்  நடித்துள்ளார்கள்.

வக்கீலாக வரும் வினோதினி வழக்கம்போல தன் நடிப்பில் அலப்பறை முத்திரை பதிக்கிறார்.

ராஜ்குமார் அமலின் பின்னணி இசை படத்தின்  தன்மையை புரிந்து மிகச் சரியாக அமைக்கப்பட்டு இருக்கிறது. மகேஷ் திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு சென்னையின் இயல்பை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. 

கொலைக் குற்றவாளியை பரோலில் எடுப்பதன் பின்னணியில் இருக்கும் சிக்கல்களை அங்குலம் அங்குலமாக அலசி இருக்கிறது  திரைக்கதை. படத்தின் பாதி பகுதி இதில்தான் கடக்கிறது.

படத்தை நான் லீனியராக சொல்லாமல் அடுத்தடுத்த நகர்வுகளுடன் சொல்லி இருந்தால் இன்னும் குழப்பம் இல்லாமல் ரசிக்க முடிந்திருக்கும்.

இந்த வன்முறைக் கதையை நன் முறையில் முதித்திருப்பதும், கதையை விஜய் சேதுபதி வாய்சில் தந்திருப்பதும் நேர்மறை அம்சங்கள்.

இயக்குனர் துவாரக் ராஜா இந்தப்படத்தின் மூலம் நம்பிக்கை வைக்கக் கூடிய இயக்குநராக உருவெடுத்துள்ளார்.

பரோல் – பாசிட்டிவ் அப்ரோச்..!