May 6, 2024
  • May 6, 2024
Breaking News
July 12, 2022

படைப்பாளன் திரைப்பட விமர்சனம்

By 0 557 Views

இன்றைக்கு சினிமாத் துறையில் இருக்கும் பெரும் பிரச்சினையே கதைத் திருட்டுதான். ஒரு தாயைப் போல ஒரு கருவை உருவாக்கி அதைப் பல காலம் மனத்தில் தாங்கி அது திருடு போய் விடும்போது அந்தப் படைப்பாளனுக்கு எந்த விதமான வலியைத் தரும் என்பதுதான் கதையின் லைன்.

ஆனால், அதை ஒரு டாக்குமெண்டரி போல சொல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் ஹாரராகத் தந்திருக்கிறார் இயக்குனர் தியான் பிரபு.

இசிஆரில் ஆள் அரவம் இல்லாத இடங்களில் கட்டப்பட்டிருக்கும் விடுதிகளும், பங்களாக்களும் அவற்றில் யார் வசிக்கிறார்கள்? யார் வந்து போகிறார்கள் என்று தெரியாத நிலையில் இருக்கும் அதன் சுற்றுப்புறமும் இரவில் காட்டப்படுகிறது. ரோந்து வரும் போலீசே அஞ்சும் அளவில் இருக்கும் அந்தப் பகுதியில் அனாதையாக நிற்கும் கார் ஒன்றின் உள்ளே கொடூரமாகத் தாக்கப்பட்டு இறந்தவர்களின் பிணங்கள் கிடக்க… அங்கே ஆரம்பிக்கிறது படம்.

தொடர்ந்து சினிமாத்துறையில் பயணிக்கும் கதையில் கதைத் திருட்டு பற்றிய காரசாரமான தொலைக்காட்சி விவாதமும் அதை தொடர்ந்து இயக்குனராக ஆசைப்படும் நாயகன், தயாரிப்பாளர் மனோ பாலாவிடம் கதை சொல்லும் காட்சிகளும் வருகின்றன. அவர் சொல்லும் ஹாரர் கதையில் மனோபாலாவின் வேர்த்து விறுவிறுத்து வெளிறிப் போன முகம் உண்மையிலேயே படு திரில்லிங்காக இருக்கிறது.

இந்தப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கும் தியான் பிரபுவே, நாயகனாகவும் நடித்திருக்கிறார். மனோ பாலாவிடம் அவர் கதை சொல்லும் காட்சிகள் அவ்வளவு விறுவிறுப்பு. முதல் படத்திலேயே ஒரு கதையை எழுதி இயக்கி நடிப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல அந்த ஆபத்தான பகுதியை பக்குவமாக கடந்து இருக்கிறார் தியான் பிரபு.

அவருடன் அஸ்மிதா, நிலோஃபர், பாடகர் வேல்முருகன், விக்கி, ரமேஷ், மனோ பாலா என கேமியோ பாத்திரங்களில் வந்து கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். 

மெயின் வில்லனாக நடித்திருக்கும் வளவனும் மிரட்டி இருக்கிறார். சாம வேத தான தண்டம் என்கிற அளவில் அவர் தியான் பிரபுவின் கதையை திருடி வைத்துக் கொண்டு அதை சரிக் கட்ட எத்தனையோ விதங்களில் முயன்று எதுவும் நடவாமல் போகவே தியான் பிரபுவை தீர்த்து கட்ட முடிவெடுப்பது அதிர்ச்சி. அவரது கையாளாக நடித்திருக்கும் பாடகர் வேல்முருகனும் கூட வில்லன்தான்.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடித்திருக்கும் ஜாக்குவார் தங்கம், தருண் கோபி, திருச்சி வேலுச்சாமி ஆகியோரின் பேச்சு சற்றே நீளமாக இருந்தாலும் அதுதான் படத்தின் லைன் என்பதால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் பேசுவது புரியாத அளவுக்கு ஒலிப்பதிவு வால்யூம் ஏன் பிசிறு அடிக்கிறது என்பது தெரியவில்லை.

அதேபோல் இது போன்ற கதைத் திருட்டுகள் நாள்தோறும் கோலிவுட்டில் நடந்து கொண்டிருந்தாலும் அதை எதிர்க்கும் எழுத்தாளர்களை கொலை செய்யும் அளவுக்கு நிலைமை போகவில்லை என்று தோன்றுகிறது.

இப்படி சிறு குறைகளை நேர் செய்திருந்தால் இன்னும் படத்தை ரசிக்க முடிந்திருக்கும். ஆனால் படத்தின் படைப்பு நேர்த்தி அற்புதமாக இருக்கிறது.

அந்த நேர்த்திக்கு மிக முக்கியமான காரணம் வேல்முருகனின் ஒளிப்பதிவுதான். ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கு உண்டான லைட்டிங்குகளையும் கேமரா கோணங்களையும் வைத்து நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறார் அவர். அதிலும் இரவு நேர லைட்டிங் சூப்பர்ப்.

அந்த ஒளிப்பதிவுக்கு ஏற்ற எஸ்பி அகமத்தின் எடிட்டிங், பாலமுரளியின் இசையும் கூட படத்தின் பெரும் பலமான விஷயங்கள்.

முன்பாதியில் தியான் பிரபு சொல்லும் பேய் கதையில் நிலோபர் வரும் காட்சிகளின் நீளம் சற்று அதிகம்தான். அதையும் கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

‘படைப்பாளன்’ – படைப்பில் சிறந்தவன்..!