பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதைகள் எப்போதுமே வெகுஜன ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு அம்மன், சந்திரமுகி, காஞ்சனா வரிசை படங்கள், பாகுபலி என்று பல படங்களின் வெற்றியை சாட்சியாக சொல்ல முடியும்.
அந்த வரிசையில் இடம் பெறவென்று எண்ணி களமிறங்கி இருக்கிறது இந்தப் படம்.
ராஜா, ராணிகள் ஆண்டு கொண்டிருந்த இந்தியாவின் ஒரு பகுதி. அதில் மல்லிகா ஷெராவத் ஒரு பெரிய சமஸ்தானத்தைக் கட்டி ஆண்டு கொண்டிருக்கிறார் அப்போது அங்கு வரும் ஜோசியர் ஒரு பாம்பால் மல்லிகாவின் உயிருக்கு ஆபத்து என்று கணித்துச் சொல்ல, அதை நம்பாமல் அவரை சிறையில் அடைக்கும் மல்லிகா தன் ராஜ்ஜியத்தில் இருக்கும் பாம்புகளை எல்லாம் கொல்ல உத்தரவிடுகிறார்.
அப்படியும் தப்பிப் பிழைத்த ஒரு ராட்சத பாம்பு மல்லிகாவைக் கொல்ல சோதிடத்தை முழுமையாக நம்பும் மன்னர் அந்த சோதிடரின் ஆலோசனைப்படி தன் மகளுக்கும் ஆபத்து இருப்பதைத் தெரிந்து கொண்டு பாம்புகள் நடமாட்டம் இல்லாத வெளிநாட்டுக்கு பயணப்படுகிறார்.
ஆபத்தான காலகட்டம் கடந்ததும் இந்தியா வரும் இளவரசிக்கு என்ன நேர்ந்தது என்பது ஒரு பக்கம் இருக்க, முன்பு மல்லிகா வாழ்ந்த அரண்மனைப் பக்கம் யாரும் போகாமல் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அந்த அரண்மனைக்குள் மல்லிகாவின் ஆவி உலவுவதாகவும் அவரைத் தீண்டிய பாம்பும் அங்கேயே இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அரண்மனைக்குள் போகும் வயதான தளபதி அந்தப் பாம்பையும் மல்லிகா ஷெராவத்தையும் தன் கண்களால் காண்பது கட்டுக்கதையை உண்மையாக்குகிறது.
(ஒட்டுமொத்த மேஜிக்கான படத்தில் அரண்மனைக்குள் தெரியும் மல்லிகா ஷெராவத்துக்கும், மெகா பாம்புக்கும் மட்டும் ஒரு லாஜிக் கண்டுபிடித்து வைத்திருப்பது ஆச்சரியம்தான்.)
இந்த எல்லாக் கதைகளையும் முடிவுக்கு கொண்டு வர களம் இறங்குகிறார் நாயகன் ஜீவன். அல்ல… நாயகர்கள் ஜீவன் + ஜீவன்.
அப்பா – மகன் என்று ஜீவனுக்கு இரட்டை வேடம். அப்பா வேடத்துக்கு சற்றே முதிர்ச்சியைக் காட்டியும், மகன் வேடத்திற்கு இளமையுடனும் வித்தியாசம் காட்ட முயற்சித்து இருக்கிறார் ஜீவன். (அந்த ஒட்டு தாடிதான் அந்தக் கேரக்டரின் ஜீவனை சற்றே குறைக்கிறது)
மல்லிகா ஷெராவத் மமதையில் திரியும்… மல்லிகா தெனாவட்டாகத் தெரிகிறார் . தன் பதவிக்கு மிஞ்சிய சக்தி இல்லை என்று நம்பும் அவரை பாம்பு சிவலோக பதவி அடைய வைப்பது பரிதாபம்.
இளவரசியாக வருகிற ரித்திகா சென்னின் அழகும், வனப்பும் ரசிக்க வைக்கிறது.
இந்த பாம்பாட்டத்தின் பின்னணியில் நடக்கும் அத்தனைக் குற்றங்களுக்கும் காரணமாகிறார் காவல் அதிகாரியாக வரும் (இயக்குனர்) வடிவுடையான்.
ஒரு பக்க மூக்கை உறிஞ்சிக் கொண்டு பெண்களை சித்திரவதை செய்யும் இவரைப் பார்த்தாலே பெண்கள் மட்டுமல்ல குழந்தைகளும் பயப்படுவார்கள்.
அவருக்குத் தப்பாத மகனாக வந்து பயமுறுத்துகிறார் மெயின் வில்லன்.
இவர்களுடன் சுமன், ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, சரவண சக்தி, சலீல் அங்கோலா, பருத்தி வீரன் சரவணன் என ஏராளமான நட்சத்திரப் படையே பாம்பு பிடிக்க களம் இறங்கி இருக்கிறது.
சிஜி காட்சிகளால் பாம்பு மற்றும் அரண்மனையின் பிரம்மாண்டம் நம் கண்களை அகல விரிய வைத்தாலும் பாம்பின் அகல நீளங்களுக்கு ஒரு அளவில்லாமல் இருக்கிறது.
சிஜி காட்சிகளுக்கு இத்தனை செலவழித்திருக்கும் தயாரிப்பாளர் படத்தில் பாத்திரங்களுக்கு ஒட்டும் மீசை தாடியில் மட்டும் மிச்சம் பிடித்தாரோ என்னமோ, எல்லார் மீசை, தாடிகளும் ஒரு டைப்பாக இருக்கிறது.
இருக்கும் இசை கருவிகளை எல்லாம் அடித்து நொறுக்கி பின்னணி இசையில் அதகளப்படுத்தி இருக்கிறார் அம்ரிஷ்.
இனியன் ஜெ.ஹாரிஸின் ஒளிப்பதிவில் டெரரே அதிகமாக இருக்கிறது.
பாம்பாட்டம் – பான் இந்திய விஷம்..!