April 24, 2024
  • April 24, 2024
Breaking News
August 18, 2018

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

By 0 1691 Views

வழக்கமாக மலையாள படைப்பாளிகள் எடுக்கும் படங்கள் நமக்குப் பிடித்தவையாக இருக்கும். மலையாள இயக்குநர்களுக்கென்று ஒரு கதை சொல்லலும் இருக்கும்.

ஆனால், தமிழில் இது ‘பிளாக் ஹியூமர்’ பட சீசன் என்பதாலோ என்னவோ கேரளாவிலிருந்து வந்து தமிழ்ப்படமெடுத்திருக்கும் இரட்டை இயக்குநர்கள் நிஷாந்த் ரவீந்திரனும், ஜதின் ஷங்கர் ராஜும் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் பட வரிசையிலேயே ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

‘ஓடு ராஜா ஓடு’ என்பது ஒவ்வொரு விஷயத்துக்காக ஓடிக்கொண்டிருக்கும் ஐந்து ‘செட்’ பாத்திரங்களைப் பற்றிய கதை.

அவர்களில் குரு சோமசுந்தரம், லஷ்மிப்ரியா ஒரு ‘செட்’- மனைவிக்காக செட் டாப் பாக்ஸ் வாங்கச்செல்லும் குருசோமசுந்தரம் ஒரு அசம்பாவிதத்தில் சிக்கிக் கொள்கிறார். போதை மருந்து விற்கும் மொத்த வியாபாரியும், சில்லறை வியாபாரியும் இன்னொரு செட், சிறையிலிருந்து வெளிவந்தும் இன்னொரு பிளான் ப்போட்டுப் பெரிய பணமடிக்க நினைக்கும் திருடன், அவரது நண்பன் இன்னொரு செட், அப்பாவிடம் சத்தியம் செய்ததற்காக இனி தாதாயிஸம் கிடையாது என்று நினைக்கும் அண்ணன், அப்படி இருக்க வேண்டியதில்லை என்று கட்டப்பஞ்சாயத்தில் சம்பாதிக்கும் தம்பி இவர்கள் ஒரு செட், தெருவோர சிறுவன், சிறுமி கடைசி செட்…

இத்தனை ‘செட்’ மனிதர்களின் வாழ்க்கையை சீரியலாக எடுத்தால் அது மெகா சீரியலாகும் சாத்தியம் இருக்கிறது. ஆனால், அத்தனைப் பேரையும் முடிச்சுப் போட்டு ஜாலியாக ஒரு கதை பின்னியிருக்கும் இயக்குநர்களைப் பாராட்டலாம்.

கதையின் தன்மையைப் புரிந்து வைத்திருப்பதுடன் நடிப்புத் திறமையும் இருப்பதால் நாசர், குரு சோமசுந்தரம், லஷ்மிப்ரியா, ஆனந்த சாமி, ஆஷிகா, இயக்குநர் அருண்மொழி என்று எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கதைக்குள்ளும் பெண்களுக்கான இடஒதுக்கீடு கணிசமாகக் கொடுத்திருக்கும் இயக்குநர்களைப் பாராட்டலாம். அதிலும் பெண் சுதந்திரமும் கொடிகட்டிப் பறக்கிறது.

ஆனந்தசாமியின் காதலி ஆஷிகாவையே அவருடைய நண்பனும் இன்னொரு பக்கம் காதலித்துக் கொண்டிருக்க, அவளும் இருவருக்கும் ஈடு கொடுத்து படுக்கையைப் பகிர்ந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ஆஷிகாவுக்காக நண்பர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் போது அவளே குறுக்கிட்டு “நீங்க ரெண்டுபேருமே எனக்கு வேணும். புரிஞ்சுக்கங்க..!” என்கிறாள். “அடேங்கப்பா..!” காட்சி அது.

நாசரின் மனைவியாக வரும் சோனாவின் ‘இச்சை’ இன்னும் ஒருபடி மேலே போகிறது. இப்படி ஒவ்வொரு எபிசோடிலும் நமக்கு ‘ஷாக்’ கொடுக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

ஆனால், ‘நறுக்’கென்று சொல்லிவிட்டுப் போக வேண்டிய விஷயங்களை பின்னணி இசை கூட அவ்வளவாக இல்லாமல் நீண்ட காட்சிகளில் சொல்லிக் கொண்டிருப்பாதல் ஒருவித அலுப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆனாலும், பாராட்டப்பட வேண்டிய முயற்சி..!

ஓடு ராஜா ஓடு – டைட்டிலில் மட்டுமே..!