April 20, 2024
  • April 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • உங்க ஆடைகளைக் கொடுங்க உதவலாம் – நிக்கி கல்ராணி அழைப்பு
May 23, 2021

உங்க ஆடைகளைக் கொடுங்க உதவலாம் – நிக்கி கல்ராணி அழைப்பு

By 0 478 Views

அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த மோசமான உயிர்க்கொல்லி பெருந்தொற்று மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளது. வாழ்வில் எது முக்கியம் என்ற நிதர்சனத்தை நமக்கு இந்த நெருக்கடி காலம் உணர்த்தியுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய காலத்தில் நாம் உண்ண உணவும், உறைவிடமும் கிடைக்கப் பெற்றிருப்பதே பெரும் பாக்கியம். நமக்கு அடிப்படை வசதிகள் எல்லாம் கிடைக்கிறது என்றால் நாம் அதற்காக நன்றியுடன் இருக்க வேண்டும். 

வாழ்க்கை நிலையற்றது. இந்த நிலையற்ற வாழ்வில் நாம் நமக்குக் கிடைத்த வளங்களுக்கு நன்றியுடையவர்களாகவும் தேவையுள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

நான் எப்போதுமே எளிமையாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் குறைவானதே நிறைவு. எனது இந்தக் கொள்கை எனது ஆடைகளுக்கும் பொருந்தும். இருப்பினும், பலரைப் போல் காலப்போக்கில் எனது தேவைகளை மிஞ்சி எனது உடைமைகள் சேர்ந்திருப்பதை உணர்ந்தேன்.

அதனால் எனது தேவையைத் தாண்டி இருப்பவற்றை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த விரும்புகிறேன். 

என்னைப் போல், எத்தனை பேர் உங்கள் வீட்டில் உங்களின் தேவையைத் தாண்டியும் பொருட்களை சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? உங்களின் அலமாரியில் எத்தனை பேர் பலவருடங்களாக அணியாத துணிகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். இப்படி உபயோகிக்காமல் தேவைக்கு மிஞ்சியிருக்கும் நம் உடைமைகளை ஒரு நல்ல காரியத்திற்கு உதவ உபயோகிப்பதே சிறப்பான வழி எனக் கருதுகிறேன்.  

சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக த்ரிஃப்ட் ஷாப்பிங் (THRIFT shopping ) பிரபலமாகியுள்ளது.

அப்படியென்றால் என்னவென்று கேட்கிறீர்களா? த்ரிஃப்ட் ஸ்டோர் என்றால் மக்கள் தாங்கள் முன்பு நேசித்த, தற்போது உபயோகிக்காத துணிகள், கைப்பைகள், காலணிகள், புத்தகங்கள் ஆகியவற்றை தானமாகக் கொடுக்கும் இடம். அப்படிப் பெறப்பட்ட பொருட்களை சமூக வலைதளத்தில் ஒரு பக்கத்தை உருவாக்கி அதில் பதிவு செய்யப்படும். அந்தப் பொருட்கள் அனைத்தும் மிகமிகக் குறைந்த விலையில் விற்க பட்டியலிடப்படும். எளிதாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் முன்பு நேசித்து இப்போது உபயோகிக்காமல் சேர்த்து வைத்திருக்கும் பொருட்களை விற்பனை செய்யும் தளம் இது. 

பயன்பாட்டைக் குறையுங்கள், மீண்டும் அதையே பயன்படுத்துங்கள், மறுசுழற்சி செய்யுங்கள் என்ற தாரக மந்திரத்தை மையமாகக் கொண்டதே இந்த முயற்சி.

எனவே, பலகட்ட திட்டமிடுதலுக்குப் பின்னர் நானும் எனது குழுவினரும் “Take 2 – Thrift to Uplift” என்ற முயற்சியை முன்னெடுத்துள்ளோம். இங்கு தானமாக பெறப்படும் அனைத்துப் பொருட்களும் விற்கப்பட்டு, அவ்வருவாய் தேவையுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும். 

மேலும் தகவல்களுக்கு @take2_thrifttouplift இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடருங்கள். 

பிறருக்குக் கொடுப்பது எப்போதுமே பிறரிடமிருந்து பெறுவதைவிட மகிழ்ச்சி தரும். கொடுப்பதும் பகிர்வதும் நற்பண்புகள். இவை நன்றியுணர்வையும், மகிழ்ச்சியையும் நம்முள் கடத்தும். அதுவும், இதுபோன்ற நெருக்கடி காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்தால் சிறு துளி பெரு வெள்ளமாகும். இந்த முயற்சியில் என்னுடன் நீங்கள் அனைவரும் கரம்கோர்த்து இதை வெற்றியடையச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். 

நீங்கள் முன்பு நேசித்த இப்போது உபயோகிக்காத நல்ல தரத்தில் உள்ள ஆடைகள், அணிகலன்கள், புத்தகங்கள், காலணிகள், கைப்பைகளை இங்கே கொடுக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி.