April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நெடுநல்வாடை படத்தைவிட பெரிய ஊதியம் உண்டா – வைரமுத்து
March 21, 2019

நெடுநல்வாடை படத்தைவிட பெரிய ஊதியம் உண்டா – வைரமுத்து

By 0 874 Views

சென்றவாரம் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை நேற்று நெடுநல்வாடை படக்குழு நடத்தியது.

விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் இளங்கோ, நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி,படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியீட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் செல்வகண்ணன் பேசும்போது,

“என் வாழ்வின் லட்சியமே கவிஞர் வைரமுத்து அவர்களோடு ஒரு போட்டோ எடுக்கவேண்டும் என்பதுதான். ஒருநாள் அது சாத்தியமாகியது. பின் அவர் வீட்டில் அவருக்கான அழைப்பிதழை சரிசெய்யும் வேலை செய்தேன். அப்போது ஒருநாள் அவர் என்னை அழைத்துச் சொன்னார். “உன் எழுத்தில் ஒரு நேர்த்தி இருக்கிறது. நீ சினிமாவில் ஜெயிப்பாய்” என்று வாழ்த்தினார். என்னை சினிமாவில் முதலில் வாழ்த்தியது கவிஞர் தான்.

இன்று என் முதல் படத்திலே அவரோடு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த பெரும்பேறு. இந்தப்படத்தில் இடம்பெற்ற கருவாத்தேவா பாடல் தான் இந்தப்படத்தைக் காப்பாற்றியது. அந்த வகையில் இந்தப்படத்தை காப்பாற்றியது வைரமுத்துதான்..!” என்றார்

கவிப்பேரரசு வைரமுத்து பேசியதிலிருந்து,

“தம்பி செல்வகண்ணன் எனக்கு ஊதியம் தரவில்லை என்றார். “தம்பி நீ எனக்கு இந்தப்படத்தை விட பெரிய  ஊதியம் தரமுடியுமா? ஒரு இயக்குநர் மேடையில் கவிஞனின் வரிகளுக்கு  கண்ணீர் சிந்தி இருக்கிறான் என்றால் அதைவிட எனக்குப் பெரிய ஊதியம் ஏது? இந்தப்படத்தில் ஒரு நல்ல நடிகன் கிடைத்திருக்கிறான். நல்ல இசை அமைப்பாளர் கிடைத்திருக்கிறார்.

Anjali Nair Ilango

Anjali Nair Ilango

அதைவிட இந்த நெடுநல்வாடை படம் மூலமாக 50 தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். தம்பி செல்வகண்ணனுக்கு நான் இலக்கியம் சார்பாக நன்றி சொல்கிறேன். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற நிலையில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ஒரு இலக்கியத்தின் தலைப்பை இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு இளைஞன் வைத்திருக்கிறான் என்றால் தமிழின் பெருமையைப் பாருங்கள். நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள்.

பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் தூக்கத்தை கெடுக்கிறது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா? இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்த தான் கலை.

அந்தக்கலையால் பண்படாத பைத்தியங்கள்தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன? நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது.

வாழைப்பழம் ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள். அதுபோல் திரைப்படப் பாடல் பாமரனின் கவிதை என்பேன். இந்தப்படத்தில் பங்காற்றிய அனைவரையும் தனித்தனியாக வாழ்த்துகிறேன்..!” (என்று அனைவரின் பெயரையும் வாசித்து விடை பெற்றார் கவிப்பேரரசு…)