November 26, 2022
  • November 26, 2022
Breaking News
September 29, 2022

நானே வருவேன் திரைப்பட விமர்சனம்

By 0 300 Views

தனுஷை ஒரு நடிகராக அவரது அண்ணன் செல்வராகவன்தான் இனம் கண்டார். ஆனால் அதற்குப்பின் தனுஷ் ஒரு பெரிய நடிகராக வளர்ந்த போது அவருக்கான கதைகளை செல்வராகவன் படைக்கத் தொடங்கினார். அந்த பரிணாம வளர்ச்சியில் இப்போது வந்திருக்கும் படம்தான் ‘நானே வருவேன் …’

அந்த இணையற்ற அண்ணன் தம்பியும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் இந்தப் படமும் ஒரு வித்தியாசமான அண்ணன் தம்பி கதையை உள்ளடக்கியதுதான். 

இரட்டையர்களாகப் பிறந்து விட்ட பிரபுவும் கதிரும் முரண்பட்ட குணாதிசயங்களை கொண்டவர்களாக இருக்க அதில் கதிர் கொஞ்சம் குரூர புத்தி உள்ளவராக இருக்கிறார். தன் தவறுகளை காட்டிக் கொடுக்கும் தம்பி மீதும் அதற்காக தண்டிக்கும் அப்பா மீதும் கடும் கோபத்தில் இருக்கும் கதிர் ஒரு கட்டத்தில் அப்பாவைக் கொன்றுவிட்டு தம்பியை தண்டிக்கிறார்.

இதில் வெறுப்படைந்த அம்மா, கதிரை தனியே விட்டுவிட்டு பிரபுவுடன் தொலைதூரம் சென்று விட அதற்கு பின் கதிர் என்ன ஆனார் என்பதற்கான அடையாளமே இல்லை. 

பிரபு வளர்ந்த நிலையில் தனுஷ் அந்த பாத்திரத்தில் வருகிறார். இந்துஜாவை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தனுஷின் மகளுக்கு ஒரு அமானுஷ்ய சக்தியுடன் தொடர்பு ஏற்பட்டு அது அவளை ஆக்கிரமிக்கிறது. அந்த சக்தி சொன்னதைக் கேட்டால் மட்டுமே மகள் உயிருடன் கிடைப்பாள் என்ற நிலையில் அதற்கு தனுஷ் ஒத்துக் கொண்டாரா என்பதுதான் மீதிக்கதை.

குழந்தைகளை இரட்டையர்களாக காண்பித்து விட்டதால் வளர்ந்ததும் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

பிரபுவாக அமைதியான பாந்தமான முகத்துடன் வரும் அவர் இன்னொரு வேடமான கதிர் பாத்திரத்தில் அதகளம் புரிந்திருக்கிறார். மிருகங்களை வேட்டையாடப் போகிறேன் என்று சொல்லிவிட்டு போய் மனிதர்களை வேட்டையாடும் அவரது பாத்திரம் அதிர வைக்கிறது.

சைக்கோத்தனம் ஏறும்போது ஒரு வித அசட்டையான சிரிப்புடன் அவர் நடந்து கொள்ளும் நடிப்பு அலாதியானது. சிறிய வயதில் மூர்கமாக இருந்தாலும் வளர்ந்ததும் தனக்கென்று ஒரு குடும்பமும் குழந்தைகளும் வேண்டும் என்று அவர் நினைப்பதும் அதை இழக்க முடியாமல் பரிதவிப்பதும் அந்த பாத்திரத்தின் மீது நமக்கு பதிவையே ஏற்படுத்துகிறது.

அதன் இன்னொரு திசையில் வரும் பிரபுவின் பாத்திரமும் அவரது நடிப்பில் அதிசயிக்க வைக்கிறது. தன் மகளைக் காப்பாற்ற கொலை கூட செய்யத் துணியும் காட்சி அபாரம்.

தனுஷின் நடிப்புக்கு அடுத்து இன்னொருவரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் தனுஷின் மகளாக வரும் சிறுமியின் நடிப்புதான். ஒரு அமானுஷ்ய சக்தி தன்னைத் தாக்கி வரும் வேளையில் அதை வெளியில் சொல்லவும் முடியாமல் அதைத் தாங்கவும் முடியாமல் பரிதவிக்கும் அந்த சிறுமியின் நடிப்பு அற்புதம். அந்தக் கண்களில்தான் எவ்வளவு வலி, ஏக்கம்..?

இந்த வருடத்தின் குழந்தைகளுக்கான விருது எத்தனை உண்டோ அத்தனையையும் இந்த சிறுமிக்காக ரிசர்வ் செய்து வைத்துவிடலாம்.

தனுஷின் சிறுவயது பாத்திரங்களில் வரும் அந்த ரெட்டையர்களும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அதிலும் கதிராக நடித்திருக்கும் சிறுவனின் கண்கள் ஒரு காந்தம் போல் ஈர்க்கிறது.

ஒரே காட்சியில் வந்து வீட்டு மறையும் செல்வராகவன் பாத்திரம் தரும் விளைவுதான் படத்தின் போக்கையே நிர்ணயிக்கிறது.

கதிரின் மகன்களாக வரும் ரெட்டை சிறுவர்களும் கூட பாத்திரங்களின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இத்தனை திறமை மிக்க சிறுவர் சிறுமிகளை எங்கிருந்துதான் பிடித்தார்களோ..?

இந்துஜாவுக்கு சிறிய கேரக்டர்தான். மகளை நினைத்து வருத்தப்படும் காட்சிகளை அவரது நடிப்பு நியாயம் செய்கிறது

கனமான உடலுடன் வரும் மருத்துவர் பிரபுவும் தனுஷின் நண்பர் யோகி பாபுவும் ஏற்றிருக்கும் கேரக்டர்கள் அவ்வளவு கனமாக இல்லாதவை என்றாலும் கதையை சரியாக நகர்த்துவதில் அவர்கள் பங்கு பெரிதாக இருக்கிறது.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் இருளும் ஒளியும் சேர்ந்து நம்மை ரொம்பவே பயமுறுத்தி இருக்கிறது. அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கும் என்கிற கதையாக, கதை நடக்கும் காட்டுப் பகுதி அற்புதமான வனமாக கேமராவில் விரிகிறது.

படத்தை நம் மூளைக்குள்ளும் இதயத்துக்குள்ளும் கொண்டு சென்று சேர்க்கும் இன்னொரு அரிய சக்தி யுவன் சங்கர் ராஜாவின் அற்புதமான இசை.. பாடல்களிலும் சரி பின்னணி இசைகளும் சரி பிரமாதப்படுத்தி இருக்கிறார் இளவல் ராஜா.

ஆரா சூரா பாடலும், தனுஷ் தனி ஆவர்த்தனமாக ஆடும் பாடலும் தியேட்டரை அதிர வைக்கிறது.

எப்படியும் கிளைமாக்ஸில் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றி விடுவார் பிரபுவாக வரும் தனுஷ் என்று நமக்குத் தெரிந்து போனாலும் அதே போல் கதிரை கொன்று பிரபு கரை ஏறினாலும்… அதற்குப் பின்னும் கதை இருக்கிறது என்கிற அக்கு வைத்த முடிகிற படத்தின் இரண்டாம் பாதியை விரைவில் எதிர்பார்க்கலாம்.

சிறுவயதில் கதிர் அன்புக்கு ஏங்கியே அத்தனை குரூரங்களையும் செய்தார் என்று திரைக்கதையில் விளக்கி இருந்தால் இரண்டாம் பாதிக் கதைக்கு இன்னும் அழுத்தம் கிடைத்திருக்கும்.

அதேபோல் கதிராக வரும் தனுஷின் மனைவியும் குழந்தைகளும் அவரைப் பற்றிய உண்மை தெரிந்த ஒரு கணத்திலேயே அவர் மீது அச்சம் கொள்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. அத்தனை வருடம் வாழ்ந்த அவர்கள் தனுஷ் உடன் அந்த பிரச்சனை குறித்து விவாதித்து இருக்க முடியும்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி விறுவிறுப்பு  கொள்கிற படத்தின் ட்ரீட்மெண்ட் இந்த விடுமுறைக்கு ஏற்ற ட்ரீட்டாக அமையும்.

அண்ணன் தம்பி, அப்பா மகள் சென்டிமென்ட் குடும்பத்தை ஏற்கவல்ல உந்து சக்தி.

தரமான படங்களை தயாரிக்க வல்லவர் என்று எஸ். தாணு இன்னொரு முறை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்..

நானே வருவேன் – லாஜிக் கடந்த மேஜிக்..!