எம்ஜிஆர் நடித்து ‘ நாளை நமதே’ என்றொரு படம் வந்தது. ஆனால் கற்பனைக் கதையான அதற்கு வைக்கப்பட்ட தலைப்பை விட இந்தத் தலைப்பு மிகச் சரியாக இந்த கதையில் பொருந்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம்தான் கதையின் களம். ஒரு கட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது அது ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்பட்டதில் ஒரு கொலை விழுந்து கலவரம் வெடிக்க… மீண்டும் அது பொதுத் தொகுதியாக அறிவிக்கப் படுகிறது. அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினரே 15 வருடங்களாக ஆட்சி செலுத்தி வருகிறார்கள்.
அதனால் கிராமத்துக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் வர இப்போது அது மீண்டும் ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.
எனவே ஆதிக்க சாதியினர் ரப்பர் ஸ்டாம்ப் ஆக ஒரு தாழ்த்தப்பட்டவரைத் தயார் செய்து அவருக்குத்தான் எல்லோரும் ஓட்டு போட வேண்டும் என்கிற அளவில் ஆதிக்க சாதியை சேர்ந்தவரை ஏஜெண்டாக மாற்றி போட்டியின்றி அவரை தேர்ந்தெடுக்க ஊர் கட்டுப்பாட்டையே விதிக்கிறார்கள்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தாழ்த்தப்பட்ட பிரிவினை சேர்ந்த மதுமிதா அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட மனுச் செய்கிறார்.
அதற்கு எதிர்ப்பு நிச்சயம் கிளம்பும் என்று யூகித்து தனக்குரிய போலீஸ் காவலையும் பெற்றுக் கொள்கிறார். அதனால் மதுமிதா மீது கை வைத்தால் அது பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதால் ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆதிக்க சாதியினர் நிறுத்தும் பெருமாள் என்கிற நபருக்கு ஓட்டு போட முடிவாகிறது.
அதே நேரத்தில் மதுமிதா மீது பல்வேறு விதமான நெருக்கடிகளை அதிக சாதியினர் கொடுத்து வருகிறார்கள். போதாக்குறைக்கு சொந்த சாதியினர் மட்டுமில்லாமல் குடும்பத்தினரே மதுமிதாவை தேர்தலில் வாபஸ் வாங்க சொல்லி அழுத்தம் கொடுக்க மதுமிதா வாபஸ் வாங்கினாரா அல்லது தேர்தலில் போட்டியிட்டாரா இதன் முடிவுகள் என்ன ஆனது என்பதை தற்காலிக அரசியல் களச் சூழலில் சொல்லி பரபரப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் வெண்பா கதிரேசன்.
படம் முழுவதும் மதுமிதாவின் ஆளுமையிலேயே போகிறது. அத்தனை சிறிய வயதில் குடும்பத்தினர் உட்பட ஊரே எதிர்த்து நின்ற போதும் கொஞ்சமும் அயர்வின்றி தான் எடுத்த கொள்கையில் இருந்து பின்வாங்காத நெஞ்சுரத்துடன் அமைதியாகப் போராடும் மதுமிதாவின் நடிப்புக்கு பல விருதுகள் வரிசைக் கட்டும்.
தன்னை சாணி தோய்த்த செருப்பால் மிதித்த ஆதிக்க சாதிப் பெண்ணையும் கூட அவர் உயிருக்குப் போராடும் நிலையில் CPR செய்து அவர் உயிரை காப்பாற்றுவது மதுமிதாவின் நல்ல மனிதம்.
இன்றைய சினிமா ட்ரெண்ட் சாதி அரசியல் பேசுவதுதான் என்று இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சாதியினரை திருப்திப்படுத்துவதற்காக அவர்களின் நிலையை ரொம்பவும் நாடகத்தனமாகவும் தேவையில்லாத உணர்வு திணிப்புகளுடனும் சொல்லும் வழக்கமான ‘ கிளிஷே’ க்களைத் தாண்டி உள்ளது உள்ளபடி எடுத்திருக்கும் இயக்குனரைப் பாராட்டியாக வேண்டும்.
மதுமிதாவின் நடிப்பு மட்டுமல்லாது வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்து மக்களாக நடித்தவர்கள் என அனைவருமே அத்தனை இயல்புடன் நடித்திருப்பது இயக்குனரின் திறமையால் மட்டுமே எனலாம்.
அந்த கிராமத்துக்கு நாம் நேரில் சென்று பார்க்கும் உணர்வை தந்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன்.
இசையமைப்பாளர் வி.ஜி.ஹரிகிருஷ்ணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் துருத்தலாக இல்லாமல் இருப்பது படத்தின் இயல்பு தன்மையை இன்னும் கூட்டி இருக்கிறது.
இதுபோன்ற படங்களில் பேசப்படும் உரையாடல்கள் மிகவும் முக்கியமாக கவனிக்கப்படும். இதிலும் கூட வெண்பா கதிரேசன் எழுதியிருக்கும் வசனங்கள் பல இடங்களில் கவனத்தைப் பெற்று கைதட்ட வைக்கின்றன.
கண்டிப்பாக தோற்று விடுவோம் என்று தெரிந்தாலும் கூட மதுமிதா ஓர் இடத்தில், எதிர்ப்பே இல்லாமல் ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்படுவதை மாற்றி தேர்தல் என்ற ஒன்று நடப்பதற்காக மட்டுமேதான் மனுச் செய்ததாக கூறுவது ஜனநாயகத்தின் மாண்பை காப்பாற்றுவதாக இருக்கிறது.
இன்னும் கூட தென் மாவட்டங்களில் சாதிப் பிரச்சனைகளால் ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறி இருக்கும் சூழலில் தேர்தலின் அவசியத்தை விளக்கும் இந்தப் படத்தை விருதுகள் கொடுத்து பாராட்ட வேண்டியது அரசு மற்றும் விமர்சகர்களின் முக்கிய கடமையாகும்.
நாளை நமதே – சாதி வெறியர்களுக்கு சாட்டையடி..!
– வேணுஜி