April 23, 2024
  • April 23, 2024
Breaking News
August 31, 2020

மம்மீ சேவ் மி திரைப்பட விமர்சனம்

By 0 1138 Views

ஆவிக் கதைகளுக்கு என்றுமே ஒரே ஃபார்முலாதான். ஒரு வீடு… அந்த வீட்டில் தங்கியிருக்கும் ஒரு ஆவி, அந்த வீட்டுக்கு வருபவர்களை எப்படி பாடாய்படுத்துகிறது கடைசியில் அது என்ன ஆனது..? இதுதான் அந்த மாற்றமுடியாத லைன்.

ஆனால் அதை எப்படிச் சொல்கிறார்கள் என்பதில்தான் படத்துக்குப்படம் வித்தியாசப் படுகிறார்கள்.

அந்த வகையில் இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்கலாம்.

தாங்கள் புதிதாக குடியேறிய வீட்டுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்து வருகிறார் கணவனை இழந்த பிரியங்கா. அவரது மகள் தனிமையில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறாள் என்பது பிரியங்காவின் பெருத்த கவலையாக இருக்கிறது.

பிரியங்காவின் சிறு வயது மகளான யுவினாவை சோதனை செய்து பார்க்கும் மருத்துவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது அதன் முடிவில் ஒரு ஆவியுடன் அவள் நட்பு கொண்டிருக்கிறாள் என்பது தெரியவரும் போது அதைச் சொல்வதற்கு அவர் உயிருடன் இல்லை.

தொடர்ந்து தேவாலய பாதிரியார் மதுசூதன ராவ் உதவியுடன் எப்படி அந்த ஆவியிடம் இருந்து மகள் யுவினாவை பிரியங்கா மீட்கிறார் என்பது மீதிக் கதை.

கடலுக்குள் இருந்து தொடங்கும் முதல் ஷாட் கமலின் தசாவதாரம் படத்தை நினைவு படுத்தினாலும் அது சென்று சேர்ந்த இடம் தனித் தீவில் இருக்கும் ஒரு பங்களாவாக இருப்பது அழகியலும் ஆச்சரியமும் கலந்த கலவையாக நம்மை ஈர்க்கிறது.

ஆனால் அழகு என்றாலே ஆபத்துதானே..? அந்தவகையில் பிரியங்கா தன் மகள் யுவினா, தன் தங்கை மற்றும் அம்மாவுடன் இறந்துபோன தன் கணவனின் பூர்வீக வீடான அந்த பங்களாவுக்கு வந்து சேர்கிறார். அங்குதான் மொத்தக் கதையும் நடக்கிறது.

வெகுகாலம் கழித்து பிரியங்காவைப் பார்க்கிறோம். கொஞ்சம் முதிர்ச்சி – முகம் முழுதும் அதிர்ச்சி என்று படம் முழுவதும் வந்து போகிறார். போதாக்குறைக்கு அவர் கர்ப்பவதியாகவும் இருப்பதால் துடிப்பு குறைவாகவும் நடிப்பு நிறைவாகவும் இருக்கிறது.

அந்தக் குறையை ஈடுகட்டவே அவரது தங்கையாக வரும் ஐஸ்வர்யா ஷிந்தகிக்கு ஒரு பாத்திரத்தை வைத்து இருக்கிறார் இயக்குனர் என்பது புரிகிறது. சிறுமி யுவினா அணியும் ஆடைகளை விடவும் மிகச்சறிய ஆடைகளை அணிந்து வரும் அந்தப் பெண் ராம் கோபால் வர்மா பட பாணியில் கிளாமருக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

சிறுமி யுவினா நம் மனத்தில் இடம் பிடிக்கிறாள். ஒரு பொம்மை இடம் அவள் நட்புக் கொண்டு “என் பெயர் கிரியா. உன் பெயர்் என்ன..? ” என்று கேட்கும்்போது  எங்கே பொம்மை பதில் சொல்லி விடுமோ என்று நமக்கு பயமாக இருக்கிறது.

பிரியங்காவின் அம்மாவும் ஒரு துணைப்பாத்திரமாக பயணப்பட்டு இருக்கிறார். முதல் பாதி படத்தில் அவருக்கு வேலையே இல்லை என்றாலும் இரண்டாவது பாதியில் அங்கங்கே வந்து பயந்தும் பயமுறுத்தியும் படத்தில் இடம் பிடிக்கிறார்.

படத்தில் ஹீரோ கிடையாது. ஆவியும் பெண் என்பதால் ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட்தான் இது. ஆனால் படத்தின் ஒளிப்பதிவாளர் வேணு ஒரு ஹீரோவாக செயல்பட்டு படத்தை இமை கொட்டாமல் பார்க்க வைத்திருக்கிறார்.

படத்தின் முதல் ஷாட்டுக்கே அவருக்குக் கொடுத்த சம்பளம் சரியாகப் போயிருக்கும். மற்றபடி ஒளிப்பதிவில் எத்தனை கோணங்கள் உண்டோ அத்தனை கோணத்திலும் பயணப்பட்டு நம்மை அலுப்பு தட்டாமல் வைத்திருக்க பெரும் முயற்சி எடுத்திருக்கிறார் அவர்.

முதல் காட்சியில் மனநல மருத்துவர் பின்னால் ஆவி நின்று கொண்டிருப்பதை நமக்கு அறிமுகப்படுத்தும் காட்சியில் ஏற்படும் முதல் திடுக் படம் நெடுக நம்மை திடுக்கிட வைத்து இடைவேளையில் மயிர்க்கூச்செறிய வைக்கிறது. அப்படி பயமுறுத்துவதில் அஜினேஷ் லோக்நாத்தின் இசைக்கும் பெரிய பங்குண்டு.

இப்படி நமக்கு உதறல் ஏற்படுத்த பல காட்சிகள் இருந்தாலும் க்ளைமேக்ஸுக்கு முந்தியதாக வரும் காட்சியில் ஒவ்வொரு பாத்திர வடிவிலும் ஆவி பயணப்பட ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்த்து இது ஆவியோ என்று சந்தேகம் கொள்ளும் காட்சி ஹைலைட்டாக அமைந்திருக்கிறது.

படத்தில் வரும் நான்கு பாத்திரங்களும் ஒருவரை ஒருவர் பார்த்து இது ஆவியா நிஜமா என்று பேய் முழி முழிப்பது சுவாரசியமான கட்டம். ஆனால் நால்வரும் இயல்பான பாத்திரங்கள்தான் என்று அறிந்து கொள்ள அவர்கள் நால்வருக்கும் மத்தியில் குதிக்கும் ஆவி நமக்கு உணர்த்துகிறது.

கிளைமாக்ஸில் யுவினாவை கவர்ந்து செல்லும் ஆவியிடம் இருந்து அவளை காக்க நினைக்கும் பிரியங்கா தாய்மைப் பாசத்தை போட்டுத் தாக்கி ஆவியை வழிக்குக் கொண்டு வருவது சென்டிமென்ட்டான விஷயம். போதாக்குறைக்கு யுவினாவும் ஆவி யுடனான தன் நட்பை பயன்படுத்தி ஆவியை வழிக்குக் கொண்டு வருகிறார்.

முதல் பாதியில் படத்தில் தெரியும் நீளத்தை நிறைய குறைத்திருக்க முடியும். அதே போல் ஆங்கிலப் படம் போல் இருக்க வேண்டும் என்பதற்காக நம் பண்பாடு தாண்டி அத்தனை பெரிய வீட்டில் ஆளுக்கு ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது இயல்பாக இல்லை.

நால்வரும் பெண்ணாக இருக்க சின்னஞ்சிறு குழந்தையை தனியாக அத்தனை பெரிய வீட்டில் தூங்க விடுவது நம்பகமாக இல்லை.

வீட்டில் துவைக்கும் துணியைக் கூட வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் போய் காய வைத்து கொண்டு வருகிறார்கள் என்பதும் காயப் போட்ட துணியை இரவில் போய் எடுத்து வருகிறார்கள் என்பது உன் கூட நம்மை பயமுறுத்துவதற்காக மட்டுமே வைத்திருப்பதால் லாஜிக் துளியும் இல்லை.

இப்படியான லாஜிக் குறைபாடுகளை ரசிகர்கள் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் என்று இயக்குனர் லோஹித் நம்பியிருக்கலாம்.

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். இப்போது பெண் சார்ந்த கதைகளை படமாக்கி ஓடிடி தளங்களும் பெண்களைக் கவர முயன்று வருகின்றன…

அப்படி இந்தப் படத்தில் பெண்ணும் உண்டு பேயும் உண்டு. பெண்ணுக்காக பேய் இரங்குவதும் உண்டு. ஆக பெண்களை முற்றிலும் கவரும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. கூடவே குழந்தை சென்டிமென்ட்டும் இருப்பதால் குழந்தைகளையும் கவரும்.

மம்மீ சேவ் மி – பேயை வைத்து பெண்களுக்காக அடித்த ஹாரர் கும்மி..!