April 20, 2024
  • April 20, 2024
Breaking News
January 23, 2022

முதல் நீ முடிவும் நீ திரைப்பட விமர்சனம்

By 0 393 Views

எந்த ஒரு மனிதனும் முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அதேபோல் எந்த மனிதனின் முதல் காதலும் வெற்றி அடைந்ததாக பெரும்பாலும் காவியத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி பதிவுகள் அரிதாகவே இருக்கின்றன.

அந்தக் காரணங்களாலேயே முதல் காதல் மனதிலிருந்து அழிக்க முடியாததாக மாறி விடுகிறது. ஆனால் அந்த முதல் காதலே முடிவான காதலாகவும் இருக்க முடியுமா என்ற ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார் நடிகராக அறிமுகமாகி இசையமைப்பாளராக புகழ் பெற்று இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கும் தர்புகா சிவா.
 
‘ராஜ தந்திரம்’ படத்தில் காமெடி நடிகராக அறிமுகமான சிவாவுக்கு ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் இசைத்த மறுவார்த்தை பேசாதே பாடல் மாபெரும் ஹிட்டாக அமைந்தது. அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இவர் இசையமைப்பார் என்று நினைத்த நேரத்தில் இயக்குனராக இந்த படத்தின் மூலம் களம் இறங்கி இருக்கிறார்.
 
கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் நாம் அடிக்கடி பார்த்து இருக்கும் பள்ளிப் பருவக் காதல் கதைதான் இதிலும் களமாக ஆகியிருக்கிறது. வழக்கமாக இதுபோன்ற பள்ளிப்பருவ காதல்கள் எல்லாமே ஃப்ளாஷ்பேக் என்று சொல்லக்கூடிய பின்னோக்கிய கதை அமைப்பை கொண்டதாகத்தான் இருக்கும். அதை மாற்றி ஸ்டெயிட் நரேஷன் என்று சொல்லக்கூடிய நேரடி கதை சொல்லலால் இதில் படத்தை நகர்த்தியிருக்கிறார் தர்புகா சிவா.
 
முன்பாதியில் தொண்ணூறுகளின் இறுதியில் நடைபெறுவதாக அமைக்கப்பட்ட கதை இரண்டாம் பாதியில் தற்காலத்திற்கு வந்து முடிவு பெறுகிறது. படத்தில் இயக்குனர் சொல்ல வந்திருக்கும் விஷயம் உங்களுக்கு எது வேண்டுமோ அதை அடைய உறுதியும், சகிப்புத்தன்மையும் வேண்டும் என்பதுதான்.
 
12 ஆம் வகுப்புக்கு வரும் மாணவர்கள் வெளியிலிருந்து தங்கள் பள்ளிக்கு வந்திருக்கும் புதிய சேர்க்கைப் பெண்களில் தங்களுக்கான இணையைத் தேடுவதுடன் படம் தொடங்குகிறது. இந்தத் தொடக்க காட்சி படத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. காரணம் மற்ற மாணவர்கள் அனைவருமே வெளியிலிருந்து வரும் மாணவிகளில் இருந்து தங்களுக்கு ஒரு ஜோடியை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, ஆனால் படத்தின் முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கும் கிஷன் தாஸ் மட்டும் இதுவரை பள்ளிக் காலம் தொட்டுப் பழகி வந்த தோழியே (மீதா ரகுநாத்) இறுதிவரையிலும் தொடர வேண்டும் என்று விரும்புகிறான். அது நடந்ததா என்பதுதான் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதை.
 
கிஷன் தாஸின் தோற்றமும் பழகும் பாங்கும் அவரைப் பார்க்கும் பெண்களை எல்லாம் கவர்ந்து விடுவது ஆச்சரியமில்லை என்று ஆக்குகிறது. அந்த ஒரு விஷயமே புதிதாக பள்ளிக்கு வரும் மாணவி ஹரிணிக்கு அவர் மீதான ஒருதலைக் காதலை ஏற்படுத்தி கிஷன் விரும்பும் உண்மையான காதலி மீதாவைத் தள்ளி வைக்கிறது.
 
கிஷனை விட ஒரு படி மேலே சென்று ரசிக்க வைக்கிறார் சைனீஸ் என்ற பாத்திரத்தில் வரும் காமெடியன் ஹரிஷ் கே. எதையும் அசால்டாக அணுகும் ஹரிஷ், தோற்றத்திலும் நடிப்பிலும் ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரியை நினைவு படுத்துகிறார். தான் விரும்பும் கேத்தரின் என்ற மாணவியை அடைந்தே தீரவேண்டும் என்று அமிலத்தினால் கையில் ‘சி’ என்று அவளது இனிஷியலைப் பொரித்துக் கொண்டும் அவள் அவரை நிராகரிக்கிறார். கொஞ்சமும் சலிக்காமல் அதை ‘ஜி’ என்று மாற்றி காயத்ரியை காதலிக்கப் போய் அதுவும் முடியாமல் அதற்குப்பின் கௌரியாலும் நிராகரிக்கப்படுவது அதகள காமெடி.
 
கிஷனைக் காதலிக்கும் மீதாவை அடுத்த வீட்டுப் பெண்ணுக்கும் இன்னும் இணக்கமான சொல் இருந்தால் வர்ணிக்கலாம். தோழிக்கேற்ற சரியான தேர்வு. எதிர்பாராமல அவர் கொடுக்கும் கன்னத்து முத்தமும், கடைசியில் கொடுக்கும் லிப் லாக்கும் கிஷனுக்கும் கூட வாழ்வில் மறக்க முடியாதவையாக இருக்கும். 
 
கிஷன் விரும்பும் கிட்டாரை அவரது பிறந்த நாளில் மீதா பரிசளிக்க, அதை முதலில் ஹரிஷ் மீட்டி விட, மீதா பொங்குவதையும், அந்த கிட்டாரில் இளைய நிலாவை மிகுந்த சிரமப்பட்டு கிஷன் இசைத்து ரெகார்ட் செய்ய, ஹரிஷ் அதில் தன் பாடலைப் பாடி பதிவு செய்வதும் நினைத்து ரசிக்கத் தக்கவை. குஷ்பு வரும் காமெடிக் காட்சியும் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. 
 
சுஜித் சாரங், ஸ்ரீஜித் சாரங் இருவரும் முறையே ஒளிப்பதிவையும் எடிட்டிங்கையும் அற்புதமாக கையாண்டிருக்கிறார்கள். அதுவும் ஒளிப்பதிவாளர் சுஜித் பிளாஷ்பேக்கையும், தற்காலக் காட்சிகளையும் நிறம் மட்டுமல்லாமல் பிரேமிலேயே வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பது சிறப்பு.
 
தன் தனித்தன்மையான இசையால் நம்மை வசீகரித்து கட்டிப் போடுகிறார் இயக்குனருமான தர்புகா சிவா. இசையில் அவரது சிக்னேச்சர் நன்றாகவே தெரிகிறது. நடிக்கும் ஆசையும் அவரை விட்டுப் போய்விடவில்லை என்பதாக இடைவேளைக்கு முன் ஒரு காட்சியிலும் இடைவெளிக்கு பின் ஒரு காட்சியிலும் வந்திருக்கிறார். ஆனால் இயல்பாக கண்முன்னே நடக்கும் கதையாக நகரும் படத்தில் அவரது ஃபேன்டஸி கேரக்டர் மட்டும் துருத்தலாக இருக்கிறது.
 
அதைப்போல் கிஷன் செய்யாத தவறுக்கு ஏன் அவர் மீதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதும் புரியவில்லை. மன்னிப்பு கேட்டு இருந்தால் எல்லா விஷயங்களும் சரியாக மாறி இருக்கும் என்பதை ஏற்பதற்கு இல்லை. மீதாவின் தவறான புரிந்து கொள்ளல் மட்டுமே பிரிவுக்குக் காரணம். அதை கடைசி வரை மீதா மட்டுமல்ல, இயக்குனரும் புரிந்து கொள்ளவே இல்லை.
 
இருப்பினும் ரசிக்க, சிரிக்க – ரசித்துச் சிரிக்க ஒரு நல்ல படத்தைத் தந்திருப்பதன் மூலம் தர்புகா சிவா தன்னை இயக்குநராகவும் நிரூபித்து விட்டார். இன்னும் அடுத்து என்னென்ன செய்வாரோ..?
 
தியேட்டரில் வெளியாகி இருந்தால் இளசுகளால் கொண்டாடப் பட்டு இருக்கும்.
 
முதல் நீ முடிவும் நீ – எல்லோரும் கடந்த இனிய பயணம்..!
 
– வேணுஜி