October 10, 2024
  • October 10, 2024
Breaking News
January 25, 2024

முடக்கறுத்தான் திரைப்பட விமர்சனம்

By 0 176 Views

கொரோனா காலகட்டத்தில் இயற்கை வைத்தியத்தின் மூலம் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றிய சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் இது.

சோகங்களில் கொடுமையானது புத்திர சோகம் என்பார்கள். பெற்ற குழந்தைகள் இறந்து போவதை விட கொடுமையான விஷயம் அவர்கள் காணாமல் போவது தான்.

அப்படி குழந்தைகளை கடத்தும் ஒரு கும்பலை பற்றிய கதை இது.

அன்றாடம் சாலையில் பயணிக்கும் போது ஒவ்வொரு சிக்னலிலும் கையில் வாடிய குழந்தையுடன் ஒரு பெண் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அவள் யார் அந்தக் குழந்தை யார்? அந்த குழந்தை ஏன் மயக்க நிலையில் இருக்கிறது..? அதற்கு ஏதாவது உணவு கொடுக்கப்பட்டதா என்று நாம் பலமுறை பதறி இருக்கிறோம்.

ஆனால் அந்த சிக்னல் கடந்ததும் அதை நாம் மறந்து விடுகிறோம். அப்படி மறக்காமல் அதன் பின்னணி என்ன, எப்படி இது நிகழ்கிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து அப்படி ஒரு கும்பலைப் பிடித்து குழந்தைகளை மீட்கும் வேடத்தில் வருகிறார் வீரபாபு.

வீரபாபு ஒரு சித்த மருத்துவர் என்பதைப் போலவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது தெரிந்த விஷயம் தான்.

ரஜினியைப் போலவே அவர் அறிமுகமாகும் காட்சி இருக்கிறது. ஒரு பெண் குழந்தையை சுடுகாட்டில் நரபலி கொடுப்பதற்காக தயார் செய்து கொண்டிருக்க அதை பார்க்கும் தமிழ்மணி வீரபாபுவுக்கு போன் செய்கிறார்.  

ஒரு சில நிமிடங்களில் அந்த குழந்தை கொல்லப்பட இருக்க இவரோ கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஜீப்பில் அனாயசமாக வந்து இறங்கி சில நொடிகளில்  அந்தக் குழந்தையைக் காப்பாற்றுகிறார்.

இதே காட்சியில் ரஜினிகாந்த் நடித்திருந்தால் அதை நம்மால் நம்ப முடியும். அவரது இமேஜ் அப்படி ஆனால் முதல் படத்திலேயே அந்த இமேஜை எட்டிப் பிடிக்க வீரபாபு முயன்று இருப்பதுதான் அதிகபட்ச ஆசையாக இருக்கிறது.

ஆனால் சண்டைக் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். 

அவர் படத்திலும் இயற்கை மருத்துவராக வருவதால் ஏதாவது அங்கங்கே மருத்துவ டிப்ஸ் கொடுப்பார் என்று பார்த்தால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை.

ஒரு காட்சியில் பிரண்டைத் துவையல் செய்வது எப்படி என்ற ஆரம்பிக்கிறார். ஆனால் அதை முடிக்கவில்லை. அதேபோல் பூனை காய்ஞ்சான் செடியை வைத்து குடிகாரர்களுக்கு ஏதோ மருத்துவ குறிப்பு சொல்ல போகிறார் என்று பார்த்தால் அதை குடிகாரர்களின் உடம்பில் தடவி அரிப்பெடுக்க வைத்தால் அவர்கள் அலர்ஜி என்று நினைத்துக் குடியை விட்டு விடுவார்கள் என்கிறார்.

சிரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தும் இந்த காட்சியை தவிர்த்து சீரியஸ் ஆக ஏதாவது மருத்துவ குறிப்பை சொல்லி இருந்தால் அது பயனுள்ளதாக இருந்திருக்கும்.

நாயகியாக நடித்திருக்கும் மஹானா சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். வில்லனாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயனுக்கு சண்டை தாண்டியும் வலுவான கேரக்டர் கொடுத்திருக்கலாம்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியால் படத்துக்கு பெரிய பழம் ஒன்றும் இல்லை.

மயில்சாமி அவரது வழக்கபடியே குடிகாரர் ஆக வருகிறார். சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் ஆகியோரது கூட்டணி முன்பாதியை விட பெண் பாதையில் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.

அருள் செல்வனின் ஒளிப்பதிவு ஓகே. சிற்பியின் இசையில் பாடல்கள் சுமார். அதில் விட்டதை பின்னணி இசையில் பிடித்திருக்கிறார்.

பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குனர்கள் யாரும் தொடாத விஷயத்தைத் தொட்டு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பதற்காக வீரபாபுவைக் கண்டிப்பாக பாராட்டலாம்.

ஆனால் சினிமாவுக்கு செய் நேர்த்தி அவசியம் என்பதை அடுத்த படத்திலாவது அவர் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் பயணித்தால் வெற்றி பெறலாம்.

முடக்கறுத்தான் – பிள்ளை காத்தான்..!