April 27, 2024
  • April 27, 2024
Breaking News
December 26, 2023

மூன்றாம் மனிதன் திரைப்பட விமர்சனம்

By 0 124 Views

உலகில் உள்ள எல்லா உறவுகளிலும் கணவன் மனைவி உறவுதான் மிகப் பெரியது. அது சரியாக அமையாவிட்டால் இரண்டுபேர் இணைந்த வாழ்வில் மூன்றாம் மனிதன் நுழைந்து விடுவான் என்ற உண்மையைச் சொல்லும் படம்.

அதை ஒரு மர்டர் த்ரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்தேவ்.

பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல்வனாக ஒரு மாணவன் வர, அதைக் கண்ணுறும் காவல் அதிகாரி கே பாக்யராஜ் தன் நினைவுகளை பின்னோக்கி சுழற்ற திரையில் இந்தக் கதை விரிகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் ரிஷிகாந்த் கொல்லப்பட்டுக் கிடக்க , அதை புலன் விசாரணை செய்ய வருகிறார் பாக்யராஜ். அதில் துலங்குகிறது சில உண்மைகள்.

இயக்குனர் ராம்தேவே ஒரு குடிகாரர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். குடிகாரனுடன் மனம் ஒத்துப்போக முடியாத மனைவி பிரணா ஒரு மகனுக்குத் தாயாக இருப்பதால்  வீட்டுவேலை செய்து அவனைப் படிக்க வைக்கிறார்.

அவர் பணி செய்யும் வீட்டில் ரிஷிகாந்தும், சோனியா அகர்வாலும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் ரிஷிகாந்துக்கும் , சோனியாவுக்கும் ஈகோ பிரச்சினையில் மன ஒற்றுமை இல்லாமல் போக, சோனியா நண்பரின் உதவியை நாடுகிறார். சோனியாவின் மீது ஒரு கண் வைக்கும் அவரோ பாலியல் வன்முறைக்கு சோனியாவை உள்ளாக்குகிறார்.

கே.பாக்யராஜ் தொடர்ந்து மேற்கொள்ளும் விசாரணையில் இன்ஸ்பெக்டர் ரிஷிகாந்தைக் கொன்றது யார் என்று தெரியும்போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

அந்த அதிர்ச்சியான கிளைமாக்சில் நெகிழ்ச்சியான தன் தீர்ப்பால் நிறைவு செய்கிறார் கே.பாக்யராஜ்.

கே பாக்யராஜ் தன் அனுபவ நடிப்பால் தன் பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார். தாங்களே கொலையாளி என்று இரண்டு பதின்வயது வயது சிறுவர்கள் ஒத்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் மேல் அன்பு காட்டி அவர்கள் கொலையாளி இல்லை என்று கண்டுபிடிக்கும் காட்சியில் அவரது மனசாட்சி நெகிழ வைக்கிறது.

சோனியா அகர்வாலுக்கு சிறிய வேடம்தான் என்றாலும் அந்த வேடத்துக்கு அவர் பொருத்தமாக இருக்கிறார்.

கொலையான இன்ஸ்பெக்டர் ரிஷிகாந்த் நடிப்பதற்கு நன்றாகவே முயற்சித்து இருக்கிறார்.

குடிகாரராக வரும் இயக்குனர் ராம்தேவ் தனக்கென்று சில காட்சிகளை எழுதிக் கொண்டிருப்பது தெரிகிறது.

பெரும்பாலான கதை பிரணாவின் மீதே நகர்கிறது. வீட்டு பணிப்பெண் வேடத்திலும் பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கும் அன்னையாகவும் அவர் பாத்திரம் உயர்வாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அந்த பதின் வயது சிறுவர்கள் மனதை கனக்க வைக்கிறார்கள். அவர்களின் அந்த இழிவான நிலைக்கு அவர்களது பெற்றோரே காரணமாக இருப்பதும், அந்த நிலை இன்னொருவருக்கு வரக்கூடாது என்று அவர்கள் நினைப்பதும் படத்தின் நேர்மறையான பகுதிகள்.

கணவனுக்கு மனைவியோ மனைவிக்கு கணவனோ சரியாக அமையாவிட்டால் அவர்கள் வழி தவறிப் போகலாம் என்பது போன்ற சில நியாயப்படுத்துதல்கள் இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

அப்படி பிரணாவுக்கு நேர, ஒரு கட்டத்தில் அவர் அதிலிருந்து விலகி மனசாட்சியுடன் நடந்து கொள்ள நினைப்பது நல்ல வழிகாட்டல்.

மணிவண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் பட்ஜெட்டுக்கு பாதகம் இல்லாமல் உதவி இருக்கிறது. 

வேணு சங்கர் தேவ்ஜியின் இசையில் பாடல்களையும் இயக்குனர் ராம்தேவே எழுதி இருக்கிறார். அவை கேட்கும் விதத்தில் இருக்கின்றன.

அம்ரீஷின் பின்னணி இசை கச்சிதம்.

முன் பாதி படத்தை விட பின் பாதி படம் வேகமாக நகர்கிறது. நீள நீளமான காட்சிகளை குறைத்து இருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

மூன்றாவது மனிதன் – கொலைப் பின்னணியில் குடும்பங்களுக்கான செய்தி..!