கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10ம் தேதி நடக்கிறது. அங்கு பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் கர்நாடக மாநில பாஜக தொண்டர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதிலிருந்து…
“கர்நாடகாவுக்கு ஓரிரு நாட்களில் வந்து அம்மாநில மக்களின் ஆசீர்வாதத்தை பெறுவேன். தேர்தல் பிரசாரம் செய்த பாஜக தலைவர்கள் அங்குள்ள மக்களிடம் மிகுந்த பாசத்தை பெற்றதாக தெரிவித்தனர். இது பாஜக மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது.
பாஜக மீது கர்நாடக மக்கள் அபார நம்பிக்கை வைத்துள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உங்களின் முயற்சி, பாஜக சாதனை இடங்களில் வெற்றிபெற வைக்கும்.
கர்நாடகாவில் நிலையான மற்றும் பெரும்பான்மை ஆட்சி அமைக்க வாக்குகளை கேளுங்கள். ஸ்திரமின்மை பிரச்சினைகளை மக்களுக்கு புரிய வையுங்கள்.
கர்நாடகாவில் முழு பெரும்பான்மையுடன் பாஜகவின் நிலையான ஆட்சி அமைக்க மக்கள் தயாராக உள்ளனர். மக்களுக்கு சேவை செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வளர்ச்சியின் வேகமும், அளவும் அதிகரிக்கிறது.
இரட்டை இயந்திரம் அரசாங்கம் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கிறது. மற்ற கட்சிகளின் கவனம் ஆட்சியை பிடிப்பதில் உள்ளது.
ஆனால் பாஜக அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி அடைய செய்வதில் கவனம் செலுத்துகிறது. இந்தியாவை முன்னேற்ற வேண்டுமென்றால் இலவசங்கள் வழங்கும் கலாசாரத்தை அகற்ற வேண்டும்..!”