வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.
ஆனால் இந்த படம் இன்று (அக்டோபர் 11) வெளியாக இருந்த நிலையில் எதிர்பாராத சில காரணங்களால் இன்று ரிலீஸாகவில்லை.. அதற்கான காரணங்கள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் இந்த படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்.
“இந்த ‘மிக மிக அவசரம்’ படத்தை அதில் சொல்லப்பட்டுள்ள சமூக கருத்துக்காகவே, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் இருந்து விலை கொடுத்து வாங்கினேன்.. இந்த படத்தை இன்று (அக்டோபர் 11) ரிலீஸ் செய்வது என கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதியே, அதாவது காப்பான் படம் வெளியான அன்றே தீர்மானித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் அதை இறுதி செய்து படத்திற்கான புரமோஷன் பணிகளில் இறங்கினேன்.. கிட்டத்தட்ட 85 லட்சம் ரூபாய் செலவு செய்து இதற்கான புரமோஷன் வேலைகள் பத்திரிக்கை விளம்பரங்கள் என பார்த்து பார்த்துப் பார்த்து செய்த நிலையில் இந்த படத்திற்கு தமிழகம் முழுக்க வெறும் 17 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஒரு நல்ல படத்திற்கு இவ்வளவு குறைந்த தியேட்டர்கள் கிடைத்தால் எப்படி அதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்..? தயாரிப்பாளருக்கும் படத்தை வெளியிட்டவருக்கும் அதில் என்ன வருமானம் கிடைத்துவிடும்..? இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நான் முடிவு செய்தபோது இந்த தேதியில் வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆகும் அறிகுறியே இல்லை..
அதுமட்டுமல்ல இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்த பின்னரே நான் விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படத்தை வெளியிடும் உரிமையை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கினேன் அவர்கள் கூட அடுத்த அக்-11ல் சங்கத்தமிழன் படத்தை ரிலீஸ் செய்யுமாறு என்னிடம் கேட்டார்கள்.. ஆனால் அந்த படத்தை தீபாவளிக்கு பிறகு ஒரு நல்ல தேதியில் வெளியிட வேண்டும் அப்போதுதான் அதற்கான உரிய வரவேற்பும் அங்கீகாரமும் கிடைக்கும் என்று அவர்களிடம் கூறினேன் அதுமட்டுமல்ல, அக்-11ல் ‘மிக மிக அவசரம்’ படத்தை வெளியிடுவதன் மூலம் அதே தேதியில் சங்கத்தமிழன் படத்தை வெளியிடுவதற்கு பதிலாக வேறு சில சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகட்டும் என்கிற ஒரு நல்ல எண்ணத்தில் தான் சங்கத்தமிழன் ரிலீசை கூட தள்ளி வைத்தேன்.
ஆனால் அதுவே தற்போது எனக்கு எதிராக திரும்பி விட்டது.. மிகச்சில நாட்களுக்கு முன்பு தான், இன்று ரிலீசாகி இருக்கும் சில படங்களின் ரிலீஸ் தேதியே முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.. அதன்பிறகு மிக மிக அவசரம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் நிலைமையே தலைகீழாக மாறிப்போனது.. கடந்த வாரம் வெளியான அசுரன், இந்தி படமான வார், அதற்கு முன்பு வெளியான நம்ம வீட்டு பிள்ளை ஆகியவை நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதால் புதன்கிழமை வரை பார்த்துவிட்டுத்தான் இந்த வார ரிலீஸ் படங்களுக்கு எவ்வளவு தியேட்டர்கள் கொடுக்க முடியும் என தீர்மானிப்பார்கள் என எனக்கு சொல்லப்பட்டது.
அதன்பிறகு வியாழக்கிழமை எனது படத்திற்கு வெறும் 17 தியேட்டர்கள் மட்டுமே கொடுப்பதாக சொல்லப்பட்டதை கேட்டு அதிர்ந்து போனேன். இத்தனைக்கும் இந்த படத்தை தமிழகத்தில் உள்ள முக்கியமான 9 விநியோகஸ்தர்களிடம் ரிலீஸ் செய்யும் பொறுப்பை பிரித்துக்கொடுத்து இருந்தேன். ஆனால் மிக மிக அவசரம் படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் அளவிற்கு அந்தப்படத்திற்கு நட்சத்திர அந்தஸ்து இல்லை காரணம் சொல்லப்பட்டது..
அதேசமயம்\ இதே தேதியில் வெளியாகும் இன்னும் ஒருசில படங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து இல்லை என்றாலும் அந்த படத்தை வெளியிடும் நிறுவனங்களின் செல்வாக்கு காரணமாக அந்த அடிப்படையில் அந்த படங்களுக்கு அதிகமாக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருபபதும் என்ன அதிர்ச்சியடையச் செய்தது. நல்ல எண்ணிக்கையிலான தியேட்டர்களில் குறைந்த பட்சம் ஒவ்வொரு காட்சியாவது கொடுக்குமாறு தான் நான் கோரிக்கை வைக்கிறேன்.. ஆனால் சென்னை செங்கல்பட்டு ஏரியாக்களில் வெறும் ஐந்து தியேட்டர்கள் மட்டுமே இந்தப்படத்துக்கு ஒதுக்கப்பட்டன.. அதிலும் சென்னையில் ஒதுக்கப்பட்ட இரண்டு தியேட்டர்கள் மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளன. அவையும் பிரதமர் வருகை காரணமாக இரண்டு நாட்களுக்கு படங்கள் ஓடாது என்று பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு நல்ல படத்தை வெளியிட எனக்கு விருப்பமில்லை.. அதற்காக அடுத்த வாரம், அதாவது தீபாவளிக்கு முதல் வாரம் தியேட்டர்கள் எளிதாக கிடைக்கும் என்பதற்காக அந்த தேதியில் (அக்-18) இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முட்டாள்தனத்தையும் நான் செய்ய மாட்டேன்.. காரணம் அது எவ்வளவுதான் நல்ல படமாக இருந்தாலும் தீபாவளிக்கு முன்னரே தியேட்டரைவிட்டு நீக்கப்படும்.. அதுமட்டுமல்ல தீபாவளிக்கு முந்தைய வாரம் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அவ்வளவாக வராது என்பது ஊரறிந்த உண்மை
சிறிய படங்கள் என்றாலும் நல்ல படங்களை வெளியிட்டு அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்து லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவன தயாரிப்புகள், வெளியீடுகள் என்றாலே நம்பிக்கையாக தியேட்டருக்கு வரலாம் என்கிற எண்ணத்தை ரசிகர்களிடம் விதைத்து எனது நிறுவனத்திற்கு ஒரு தனி பெருமையை ஏற்படுத்தலாம் என்பதற்காகவே எனக்கு எவ்வளவு பொருளாதார நட்டம் வந்தாலும் மீண்டும் மீண்டும் சிறிய படங்களை வெளியிடுவதில் ரிஸ்க் எடுத்து ஆர்வம் காட்டி வருகிறேன்.
சின்ன படங்களை வாங்கி அதை வெளியிடுவதை விட்டுவிட்டு பெரிய படங்களை தயாரிப்பதிலும் அல்லது வாங்கி வெளியிடுவதில் ஆர்வம் காட்டினால் ஏராளமாக பணம் சம்பாதித்து விட்டு செல்ல முடியும்.. ஆனால் சினிமாவை நேசிக்கும் எனக்கு அது நியாயமான முடிவாக தோன்றவில்லை.. இப்போது இந்த பிரச்சனையில் இருக்கும் என்னை பலரும் அழைத்து ஏன் சிறிய படங்களை வாங்குகிறீர்கள்.. சங்கத்தமிழன் போன்ற படங்களை வாங்கி லாபம் சம்பாதித்து விட்டு போகலாமே என்றுதான் அறிவுரை கூறுகிறார்கள்..
அவர்கள் சொல்வது போல நானே சங்கத் தமிழன் படத்தை இந்த தேதியில் செய்ய நினைத்து இருந்தால் இந்நேரம் எவ்வளவோ லாபம் பார்த்திருக்க முடியும். அது மட்டுமல்ல அந்த முடிவு, இதே தேதியில் வெளியாகியிருக்கும் சில படங்களில் வயிற்றில் அடித்தது போன்று அமைந்துவிடும் என்பதால் அந்த முடிவை நான் எடுக்காமல் பெருந்தன்மையாக இருந்தேன்.. ஆனால் அதுதான் நான் செய்த முட்டாள்தனமோ என்று நினைக்கும்படியாகத்தான் இப்போது நடைபெறும் நிகழ்வுகளை நான் பார்க்கிறேன்..
இதில் என் படத்தை வெளியிடுவதாக சொல்லி தற்போது இயலவில்லை என்று கைவிரித்து விட்ட விநியோகஸ்தர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை.. காரணம் தியேட்டர்காரர்கள் மிக மிக அவசரம் போன்ற படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.. அவர்களுக்கு அந்த படத்தின் மீது நம்பிக்கை இல்லை.. இத்தனைக்கும் நான் தியேட்டர்காரர்களிடம் எந்தவிதமான முன்பணமும் கூட கேட்கவில்லை.. மாறாக அவர்களுக்கு அதிக கமிஷன் தருவதாகக் கூட கூறினேன். அது மட்டுமல்ல இந்த மிக மிக அவசரம் ரிலீஸ் செய்யப்படும் தியேட்டர்களில் முதல்நாள் காலை காட்சி டிக்கெட்டுகள் அனைத்தையும் நானே பெற்றுக்கொள்வதாகவும் அதையும் ஒரு புரமோஷன் செலவாக நினைத்துக்கொள்வதாக கூட நான் வாக்களித்து இருந்தேன்.. ஆனாலும்கூட அவர்களுக்கு இந்தப்படத்தை வெளியிடுவதில் பெரிய ஆர்வம் இல்லை.
தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுகள் எதுவுமே தியேட்டர்காரர்களின் முடிவை மாற்றிவிட முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதே சமயம் இதே வினியோகஸ்தர்கள் மூலமாக இதே தியேட்டர்கள் நான் ரிலீஸ் செய்யப்போகும் சங்கத்தமிழன் படத்தை வாங்க இப்போதிருந்தே ஆர்வம் காட்டுகின்றனர்.. காரணம் அது பெரிய படம்.. இந்த படத்தை கூட ரிலீஸ் செய்வதற்கு இன்னும் தேதி குறிக்காத நிலையில், சேலத்தில் ரெட் கார்டு போட்டு விட்டார்கள் என்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் அந்த பட நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாக ஆரம்பித்துவிட்டன..
இப்போது சொல்கிறேன்.. சங்கத்தமிழன் படத்திற்கு இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை.. அப்படியே இருந்தாலும் அது என்னுடைய நிறுவனத்தினாலோ இல்லை, அந்த படத்தை தயாரித்த விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலமோ படத்தின் ரிலீஸுக்கு முன்பே பேசி சுமூகமாக முடிக்கப்பட்டு விடும். இதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பேசுவதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி எந்த சிக்கலும் இல்லாமல் முடித்துக்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும்.. கடைசி நேரத்தில் இதுபோன்ற சிக்கல்களை தேவையில்லாமல் உருவாக்கக் கூடாது..
மிக மிக அவசரம் படத்தை போல இன்னும் சிறந்த கதையம்சம் கொண்ட கிட்டத்தட்ட எட்டு சிறிய பட்ஜெட் படங்களை நான் ரிலீஸ் செய்வதற்காக விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். அவையெல்லாம் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக தான்.. ஆனால் இப்போது மிக மிக அவசரம் படத்திற்கு ஏற்பட்ட இதே நிலைதான் அந்தப் படங்களுக்கும் ஏற்படும் என்பது நன்றாகவே தெரிகிறது.. வேறுவழியின்றி அந்த படங்களை எல்லாம் வாங்கியவர்களிடமே திருப்பி கொடுக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு என்னை கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். இனி சின்ன பட்ஜெட் படங்களையே தயவுசெய்து எடுக்காதீர்கள் என்று சொல்லும் அளவுக்கு சூழல் உருவாகிவிட்டது.
தற்போது மிக மிக அவசரம் படத்திற்கு கிட்டத்தட்ட செலவு செய்த 85 லட்சம் ரூபாய் வீணாய் போனாலும் சரி, இந்த படத்தை தீபாவளிக்கு பிறகு கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் தடங்கள் இல்லாமல் விதமாக ஒரு நல்ல தேதியில் ரிலீஸ் செய்தே தீருவேன். மேலும் இப்படி சிறிய பட்ஜெட் படங்கள் நல்லபடியாக ரிலீஸ் செய்வதற்கு அரசாங்க தரப்பிலிருந்து உதவி செய்வதாக பத்திரிக்கையாளர்கள் சிலர் எனக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர். அதன்மூலம் அரசாங்கத்தின் உதவியையும் நான் நாடுவதற்கு முயற்சி எடுக்க போகிறேன்.
சினிமாவை வெறும் வியாபாரமாக பார்த்து பணம் மட்டுமே சம்பாதிக்கும் குறிக்கோளோடு இதில் நுழைந்தவன் அல்ல நான்.. நல்ல படங்களை வெளியிட்டு எனது நிறுவனத்திற்கு ஒரு நல்ல பெயரை பெறவேண்டும், அதன் பிறகு லாபம் என்பது இரண்டாம் பட்சம் என்கிற எண்ணத்தோடு இந்தத் துறைக்கு வந்தவன் நான்.. தொடர்ந்து அதற்காக இன்னும் போராடத்தான் போகிறேன்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன்.