ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சம்பத் நகரில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதிலிருந்து :
திராவிட இயக்கத்தின் சொல்லின் செல்வராக திகழ்ந்தவர் ஈ.வி.கே. சம்பத். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்ததற்கான சூழல் உங்களுக்கு நன்றாக தெரியும். இங்கு ஈவிகேஎஸ். இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அன்று புதுச்சேரியில் அடிபட்டு கிடந்த கருணாநிதியை பெரியார் அரவணைத்தார். இன்று ஈ.வி.கே. சம்பத் மகனுக்காக கருணாநிதியின் மகன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.
மறைந்த திருமகன் ஈ.வெ.ரா தொகுதி வளர்ச்சி, மக்கள் பிரச்சினைக்கு பேரவையில் குரல் கொடுத்தார். மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் மகளிர் இலவச பேருந்து திட்டம் நடைமுறையில் உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக்காக காலை சிற்றுண்டி திட்டம் நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது.
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். உறுதி அளித்த வாக்குறுதிகளை இந்தாண்டுக்குள் நிறைவேற்றி காட்டுவோம்..!