வாங்கிய கடனுக்காக சொத்தை இழப்பது ஒரு வகை. ஆனால், வாங்காத கடனுக்காக சொத்தை இழக்க நேர்ந்தால்..?
அப்படித்தான் ஆகி விட்டது நாயகன் விதார்த்துதுக்கு. நாடு முழுதும் நடக்கும் இதுபோன்ற மோசடியை திரைக்கதையாக்கி ஒரு அபாய சங்கை ஊதியிருக்கிறார் இயக்குனர் வி.கஜேந்திரன்.
நாயகனாக நடித்திருக்கும் விதார்த், ஒரு ஹீரோவுக்குரிய எத்தகைய ஏற்பாட்டையும் செய்து கொள்ளாமல் முழுக்க ஒரு விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார். நடை உடை உடல் மொழியிலிருந்து ஒரு குடியானவனை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் விதார்தின் திறன் வியக்க வைக்கிறது.
அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரக்ஷனாவுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா தேர்ந்தெடுக்கக்கூடிய நாயகிக்கு ஒப்பான முகம். ஆனால் உடல் மொழியில் ஒரு கிராமத்துப் பெண்ணாக வாழ மிகவும் சிரமப்பட்டு இருப்பது புரிகிறது.
அதை மெருகேற்றவும் பாரதிராஜா கையில் கிடைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.
பணத்தைக் கடன் கொடுத்து விட்டதால் வில்லன் என்றெல்லாம் ஆகாமல் அதே நேரத்தில் ஒரு விவசாயி வேதனைப்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தையும் காட்டி இருக்கும் அருள்தாஸ் நல்ல மனிதனுக்கு இலக்கணமாக இருக்கிறார்.
இயல்பான நகைச்சுவையில் ஏறி அடிக்கும் மாறன் இதிலும் அப்படியே. ஆனால் அவரது பாத்திரத்தின் முடிவு கனமாக இருக்கிறது. “ஊரையே சிரிக்க வச்சேன்… இப்ப ஊரே என்னை பார்த்து சிரிக்கிறது..!” என்று அவர் பேசும் வசனம் நெகிழ்ச்சி.
ரொம்ப காலம் கழித்து ‘தினந்தோறும் நாகராஜ்’ ஒரு அற்புதமான பாத்திரத்தில் இதில் நடித்திருக்கிறார். மணிவண்ணனை நினைவுபடுத்தும் நடிப்பில், அசாதாரணமான விஷயத்தை சாதாரணமானதாக ஆக்கிக் கொடுத்து உண்மை வெல்ல உதவுகிறார்.
விதார்த் வழக்குக்கு அவரையே வாதாட தயார் செய்வது மட்டுமில்லாமல் “உன்னோட பிரச்சினைக்கு உன்னை விட வேற யாரால வாதாடிட முடியும்..?” என்று நாகராஜ் கேட்பது அற்புதம்..!
வங்கி மேலாளராக வரும் சரவண சுப்பையாதான் சைலண்ட் வில்லன். அவரது தில்லுமுல்லுகளைக் கண்டுபிடித்து எச்சரிக்கும் மேலதிகாரியை கூட அமைதியாக மிரட்டி விட்டு வெளியேறுவது அசத்தல்.
இசையமைப்பாளர் என்.ஆர்.ரகு நந்தனுக்கு கிராமியப் படம் என்றால் கரும்பைக் கடிப்பது போல… பாடல்கள், பின்னணி இசை என்று எல்லா ஏரியாக்களிலும் மண்ணின் மணம் வீசச் செய்கிறார்.
நேரடி காட்சிகளைப் போல் கோணங்கள் அமைத்து இயல்பாகக் கதையை கடத்தி இருக்கும் ஒளிப்பதிவாளர் அருள் கே.சோமசுந்தரமும் பாராட்டுக்குரியவர்.
படத்தின் உயிர்நாடியான விஷயமே, தன் வழக்கில் தானே ஆஜராகி விதார்த் நீதிமன்றத்தில் வாதாடுவதுதான்.
எதிர்க்கட்சி வக்கீல் மடக்கும்போதெல்லாம் விதார்த் திணறும்போது எங்கே இவர் தோற்றுவிடுவாரோ என்கிற பயம் நம் மனதில் எழுகிறது.
ஆனாலும் நம்பிக்கை தவறாமல் அவருக்கு தைரியம் கொடுக்கும் ‘தினந்தோறும் நாகராஜ்’ போன்றவர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
வயலும் வயல் சார்ந்த இடமும்மான மருத நிலமே கதையின் மையப் புள்ளியாக ஆனால் அதையே தலைப்பாக வைத்திருக்கும் தரத்துக்கும் பாராட்டு.
கொஞ்சம் பட்ஜெட் மட்டும் கை கொடுத்து இருந்தால் இந்தப் படம் பெரு வெற்றிப் படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கும்.
ஆனாலும் கருத்தாழம், கதை சொல்லிய விதம், நேர்மறை முடிவு என்று எல்லா விதத்திலும் பாராட்டும்படியான படமாக அமைந்திருக்கிறது.
மருதம் – புயல் படங்களுக்கு மத்தியில் மாருதம்..!
– வேணுஜி