வாழும்போதுதான் சாதிகள் மனிதர்களைப் பிரிக்கிறது. இறந்த பிறகாவது சமரசம் உலாவுமிடத்துக்குப் போகலாம் என்றால் அதற்காவது முடிகிறதா என்பதுதான் கேள்வி.
அரசு, சட்டம், நீதி எல்லாமே மனிதர்களுக்குப் பொதுவானவை என்பது வெறும் ஏட்டளவில்தான் என்பதுடன், நீதி மன்ற உத்தரவு கூட வெறும் வெள்ளைக் காகிதம்தான் என்று புரிய வைத்திருக்கும் இந்தப்படத்தை அம்ஷன் குமார் இயக்கியிருக்கிறார்.
படத்தில் நாயகனாக வரும் ராஜீவ் ஆனந்த் அயர்ந்து உறங்கும் விடிகாலைப் பொழுதில் அவரது அப்பா இறந்த செய்தி வருகிறது. நகரத்திலிருந்து நான்கு மணிநேரத்தில் சென்று சேரும் தூரமுள்ள ஊர்தான் என்றாலும் இருநூறு வருடங்கள் பின் தங்கிய மனமுள்ள மனிதர்கள் வாழும் பூமியாக இருக்கிறது அவரது சொந்த மண்.
தலித்துகள் இறந்து விட்டால் அவர்களது பூத உடல்களைப் பொதுவழியில் கொண்டுசெல்லக்கூடாது என்று ஆர்ப்பரிக்கும் உயர்த்திக்கொண்ட சாதியினரை எதிர்த்து தன் அப்பாவின் உடலைக் கொண்டு சென்று அவரால் புதைக்க முடிந்ததா என்பதுதான் கதை.
நாயகனின் நண்பனின் அம்மா இறந்தபோது இப்படித்தான் பொதுவழியில் கொண்டுசெல்ல முடியாமல் சுற்றுப்பாதையான காட்டு வழியில் கொண்டு சென்று அடக்கம் செய்ய சட்டமே துணைபோனது தெரியவருகிறது.
அப்படி நடக்கக்கூடாது என்று இந்தமுறை நீதி மன்றத்தை நாடி பொதுவழியில் கொண்டுசெல்ல உத்தரவு வாங்கி வந்தும் உள்ளூர் காவல்துறையும் மற்ற ஏவல் துறைகளும் எப்படி தீண்டாமைக்குத் துணை போகின்றன என்பதைக் கண்ணீருடன் சொல்லி முடிக்கிறார்கள்.
இது வெறும் கற்பனைக் கதையல்ல… சில வருடங்களுக்கு முன் மயிலாடுதுறை அருகே நடந்த உண்மைச்சம்வத்தின் கலை வடிவம்தான் இது என்று நிணைக்கும்போது மனது வலிக்கிறது.
நீதி மன்ற உத்தரவை மீறி இறந்தவரின் உடலைக் கைப்பற்ற போலீஸ் முயற்சிக்க, உடலை பத்தடிக்கும் குறைவான குடிசை வீட்டுக்குள் கொண்டு சென்று தாழிட்டுக்கொண்ட உறவினர்கள் அப்படியும் போலீஸ் உள்ளே வந்து விடாமலிருக்க, தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு எரியத் தயாராக இருக்கும் இடம் உறைய வைக்கிறது.
அதேபோல தன் தந்தையைப் புதைத்த இடத்தைக் கூட அடையாளம் காண முடியாத நாயகனின் ஓலத்தோடு முடிகிற படம் நம் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.
படைப்பைப் பொறுத்த அளவில் நாயகன் ராஜீவ் ஆனந்தின் நிறமும், உடல் மொழியும் பாத்திரத்துடன் பொருந்தாமல் இருக்கிறது. அதேபோல் அவருக்கும், நாயகி ஷீலா ராஜ்குமாருக்கு என்ன உறவு என்பதை சொல்லாமலேயே கொண்டுபோய் ஏதோ ஓரிடத்தில் சொல்கிறார்கள். கவனிக்காமல் விட்டால் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.
அதேபோல் மக்களுக்குச் சென்று சேர வேண்டிய இதுபோன்ற நல்ல செய்திகளை அவர்களுக்குப் பிடித்தமான கலை வடிவத்தில் தருவதுதான் நியாயம் என்பதும் புரிகிறது.
பின்னணி இசை இல்லாத நகர மறுக்கும் காட்சிகள் அலுப்பாக இருப்பதைத் தவிர்த்திருக்க முடியும்.
இருந்தும், உண்மையை உரக்கச் சொன்ன துணிவுக்காகப் பாராட்டியும், ஊக்கப்படுத்தவும் வேண்டிய படம் இது.
மிருகங்கள் செல்லக் கூட மறுக்கப்படாத வழியில் மனிதர்கள் செல்லக் கூடாது என்பது என்ன நியாயம் என்று கேட்கப்படும் படத்தின் வசனமும், மனுசங்கடா என்று ஒலிக்கும் இன்குலாப்பின் பாடலும் நீதியின் நெற்றிப்பொட்டில் அறைகிறது.
மனுசங்கடா – ஆதிக்க மனம் கொண்டவர்களுக்கு நீதி மன்றமாவது…
– வேணுஜி