கேப்டனின் நரசிம்மா மட்டுமே பார்த்து வளர்ந்த இளைய வயதினருக்கு உண்மையான தசாவதார கதையான நரசிம்மரின் அவதார காரணத்தை காட்சி வடிவில் விளக்கி இருக்கும் படம்.
அதிலும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு பிடித்த வடிவில் 3டி அனிமேஷன் மூலம் வந்திருக்கும் இந்தப் படம் எந்த அவெஞ்சர்ஸ் படத்தை விடவும் கற்பனை வளம் மிகுந்தது.
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் இந்தக் கதைக்கு ‘ வராக அவதாரம்’ மற்றும் ‘நரசிம்மாவதாரம் ‘ என்று இரண்டு அவதாரங்கள் தேவைப்பட்டிருக்கின்றன.
இரணிய கசிபு மற்றும் அவரது தம்பி இருவரும் மகாவிஷ்ணுவை எதிரியாகக் கொண்டு தேவர்களுக்கும் அவருடைய பக்தர்களுக்கும் ஏகப்பட்ட துன்பங்களைக் கொடுத்து வருகிறார்கள்.
அவர்களின் தம்பி பூமியை எடுத்து நீருக்குள் ஒளித்து வைத்து விட, பூமியை மீட்க பன்றி வடிவமான வராக அவதாரம் எடுத்து …. வானுலகிலும், மண்ணுலகிலும் துரத்தி துரத்தி அடித்து துவம்சம் செய்து கொன்று, மகாவிஷ்ணு பூமியை மீட்கிறார்.
தம்பி கொல்லப்பட்டதை அறிந்த இரணிய கசிவு மகா கோபம் கொண்டு தன்னுடைய குல குருவின் அறிவுரைப்படி பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்து எதனாலும் அழிக்க முடியாத ஒரு வரத்தைப் பெறுகிறார்.
அப்படி பெற்று வந்து விட்டால் இரணிய கசிவுவை அழிக்க யாராலும் முடியாது என்பதால் புத்திசாலித்தனமாக செயல்படும் இந்திரன் அவர் தவம் இருக்கும் நேரத்தில் கர்ப்பவதியான அவரது மனைவி கயாதுவை கூட்டி வந்து விஷ்ணுவின் நாமங்களை கேட்க செய்கிறார்.
அதன் பலனாக கயாதுவின் வயிற்றில் வளரும் பிரகலாதன் விஷ்ணுவின் பக்தனாக வந்து பிறக்கிறான்.
பிரம்மனிடமிருந்து வரத்தை வாங்கி வரும் இரணிய கசிபு தன் மகன் விஷ்ணுவின் பக்தனாக வளர்வது கண்டு திடுக்கிட்டு அவனைக் கொல்ல ஆணையிட, அதன் விளைவு என்ன ஆயிற்று? இரணிய கசிபுவை மகாவிஷ்ணுவால் கொல்ல முடிந்ததா என்பது போன்ற கேள்விகளுக்கு பலனாக அமைகிறது நாம் ஏற்கனவே நன்கு அறிந்த இந்தக் கதை.
வராக அவதாரத்தை விட பல படிகள் தூக்கலாக இருக்கிறது நரசிம்மாவதாரம். கிளைமாக்ஸ் – இல் வைத்த கண் வாங்காமல் அந்த அவதாரத்தின் ஆட்டத்தைப் பார்க்கிறோம்.
ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வின் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம், குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் எல்லா வயதினரும் ரசித்துப் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சாம் சிஎஸ் – இன் அதிரடி பின்னணி இசை மற்றும் பாடல்கள் இந்த படத்திற்கு கூடுதல் பலம் கொடுத்திருக்கிறது.
நரசிம்மா அவதாரத்தின் முகக்குறிகளும் சரி, பிரகலாதனின் பக்தி பூர்வமான குழந்தை முகமும் சரி – அற்புதம்..! அனிமேஷன் செய்த டீமுக்கும் பாராட்டுக்கள்..!
திரையில் 3டி காட்சிகளுடன் விரியும் இந்த மஹாவதார் நரசிம்மா – அனிமேஷன் காவியம்..!
– வேணுஜி