April 28, 2024
  • April 28, 2024
Breaking News
July 24, 2022

மஹா வீர்யர் திரைப்பட விமர்சனம்

By 0 442 Views

தமிழில் விஜய் சேதுபதியைப் போல் மலையாளத்தில் நிவின் பாலி. நல்ல  கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் நல்ல கதைகளைத் திரைப்படமாகத் தயாரிப்பதிலும் இருவரும் முன்னிலை வகிக்கிறார்கள்.

அந்தவகையில் நிவின் பாலி தயாரிப்பில் வந்திருக்கும் மலையாளப்படம் மஹா வீர்யர். இதில் தலைப்பில் இருக்கும் மஹா வீர்யராக  நிவின்பாலியே நடித்திருக்கிறார். ஆனால் அவர்தான் கதாநாயகனா என்றால் இல்லை.

கேரளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான எம்.முகுந்தனின் கதையை வைத்து  எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், இருவேறு காலகட்டங்களை இணைக்கும் டைம் டிராவல் கதையாகவும், அதே நேரத்தில் சந்தர்ப்ப சாட்சியங்களை மட்டுமே வைத்து தீர்ப்பளிக்கப்படும் இன்றைய நீதி மன்ற முறைகளையும் சாடும் படமாகவும் அமைகிறது.

இந்த சிக்கலான கதையை அப்ரித் ஷைனி இயக்கி இருக்கிறார்.

காலங்களைக் கடந்து வாழும் சன்னியாசியான நிவின் பாலி ஒரு ஊருக்கு வர அவர் வந்த நேரம் அந்த ஊர் கோவிலின் சிலை ஒன்று திருடு போகிறது. திருடப்பட்ட சிலை அவருக்கு சற்று தூரத்தில் இருக்க, அவரையே திருடனாக நினைத்து நீதிமன்றக் கூண்டில் ஏற்றுகிறார்கள்.

அவருக்காக வழக்காட யாரும் இல்லாத நிலையில் தானே தன் வழக்குக்காக வாதாடுகிறார். அந்த வாதத்தில் தற்கால சட்ட புத்தகத்தில் இருக்கும் சட்டப் பிரிவுகளை வைத்தும் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை வைத்தும் அவர் வாதாட சரித்திர கால வழக்கு நீதிகள் இப்போது செல்லாது என்கிறார்கள். அப்படியானால் அடுத்து சரித்திர கால வழக்கு ஒன்று வருகிறது. இதை எப்படி நீங்கள் நடத்துவீர்கள் என்று கேட்கிறார். அது அப்படியே காட்சியாக விரிகிறது.

இன்றைய மக்களாட்சி யுகத்து நீதிமன்றக் கூண்டில், மன்னராட்சிக் காலத்தைச் சேர்ந்த அரசர் லாலைப் பற்றிய வழக்கு வந்து அரசரைக் கூண்டில் ஏற்றுகிறார்கள்.

அந்த வழக்கில் நீதி சொல்ல நீதிபதிக்கு இன்றைய நடைமுறைகள் எதுவுமே சாத்தியமாகாத நிலையில் நிவின் பாலி கடைசியில் தலையிட்டு அந்த வழக்கைத் தீர்த்து வைக்க உதவுகிறார்.

படத்தில் நிவின் பாலி கொஞ்ச நேரம்தான் வருகிறார். அதிலும் இரண்டாவது பாதியில் அவர் சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். ஆனாலும் அந்தக் காட்சிகளில் அவர் நடிப்பு அபாரம்.

நியாயமாக சொல்லப் போனால் மன்னராக வரும் லால்தான் படத்தின் ஹீரோ.  அவருடைய பிரச்சனையில் இருந்துதான் படமே தொடங்குகிறது பின்னர் இன்றைய காலகட்டத்திற்கு கதை நகர்ந்து, நீதிமன்றத்தில் வைத்து மீண்டும் அரசர் கதை அரங்கேறுகிறது.

லால் நடிப்பு பற்றி சொல்ல வேண்டியதில்லை என்றாலும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். அதிலும் கடைசியில் அவர் பிரச்சனை தீர்ந்த நேரத்தில் ஒரு பத்து நிமிடம் அவரே திரையை ஆக்கிரமிக்கிறார். அசுரத்தனமான நடிப்பு அவருடையது.

அமைச்சராக நடித்திருக்கும் ஆஷிப் அலி ஒரு ஆணழகனாகத் தெரிகிறார். அவரது மதியூகம் கடைசியில் தெரியவரும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

நீதிபதியாக நடித்திருக்கும் சித்திக்கின் நடிப்பும் சிறப்பானது. கிளைமாக்சில் வைத்து அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

படத்தில் சொல்லப்படும் துளசிச் செடியைக் போன்ற அழகு ஷான்வி ஸ்ரீவத்சவாவுக்கு. விருப்பமில்லாமல் அவரை அமைச்சர் மன்னரிடம் தூக்கிப் போய் ஒரு பணிக்கு நிர்பந்தப்படுத்தி அந்த வழக்கு இன்றைய நீதிமன்றத்திற்கு வர, இங்கே நீதிமன்றத்தில் வைத்து அவரை நிர்வாணப்படுத்தும் போது நமக்கே பதறுகிறது. அத்தனை பேருக்கு முன்னிலையில் எப்படித்தான் அரை நிர்வாணமாக நடிக்க அவர் ஒத்துக் கொண்டாரோ..?

உலகத்தில் 9 கதைகள்தான் இருக்கின்றன என்று சொல்வோர் கண்டிப்பாக இந்தப்படத்தை பார்க்க வேண்டும். இது பத்தாவது கதையாக இருக்கலாம். அத்தனை புதுமையான கதை இது.

மஹா வீர்யர் – வித்தியாசமான கதையிலும் மகா வீரியம்.