January 19, 2022
  • January 19, 2022
Breaking News
September 7, 2019

மகாமுனி திரைப்பட விமர்சனம்

By 0 902 Views

கடவுள், மிருகம் என்ற இரண்டு மனித நிலைகளையும் தனித்தனிப் பாத்திரங்களாக்கி இரண்டு நிலைகளும் இந்த சமூகத்தில் என்ன அனுபவத்துக்கு ஆட்படுகின்றன என்று ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார்.

மிருக நிலைக்கு ‘மகா’ என் கிற வன்மம் மிகுந்த பாத்திரத்தில் ஒரு வேடமும், முனி என்கிற ஆன்மிகப் பாத்திரத்தில் இன்னொரு வேடமுமாக ஆர்யாவுக்குக் கொடுத்து இந்த ‘மகா’, ‘முனி’ இரண்டின் வழியாகவும் மனித வாழ்வின் அகம், புறம் தேடும் தத்துவார்த்தமான படைப்பாக அதைத் தந்துமிருக்கிறார்.

“எங்களுக்குத் தத்துவமெல்லாம் வேணாம்ப்பா… புரியற மாதிரி ஒரு கதை சொல்லு…” என்பவர்களுக்கு பெற்றோரை சிறு வயதிலேயே இழக்கும் இரட்டைப் பிறவிகள் பிரிந்து வெவ்வேறு ஊர்களில் அடைக்கலமாகி வளர்கிறார்கள். வெவ்வெறு சூழல்களில் இருவரையும் கொல்ல முயற்சி நடக்க, இருவரும் அதிலிருந்து தப்பினார்களா, இல்லையா என்று இலகுவாகப் புரிந்துகொள்ளும் அளவில் எளிய கதையும் அதில் இருக்கிறது.

ஒரு இடைவெளி விட்டு ‘கம் பேக்’ ஆகியிருக்கும் ஆர்யாவுக்கு இதில் ‘டபுள் புரமோஷன்’ பெறும் அளவுக்கு அமைந்த இரட்டை வேடங்கள். வன்மத்தை ‘மகா’ பாத்திரத்தில் சொல்லும் அவரது கண்களே ‘முனி’யில் மென்மையாகித் தெரிவது அபார வித்தை.

ஒரு கீழ்த்தட்டு நடுத்தர வர்க்க மனிதனை ‘மகா’ பாத்திரத்தில் இட்டு பொருளாதார நிலைகளுக்காக ஒரு மனிதன் என்னென்ன நிலைகளுக்கு ஆளாக நேர்கிறது என்பதை சாந்தகுமாரின் பாத்திரப் படைப்பயுணர்ந்து ஆர்யா பக்குவமாக நடித்திருக்கிறார்.

கால் டாக்ஸி ஓட்டி வருமானம் போதாமல் கொலைகளுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டுத் தரும் அந்தக் கேரக்டருக்கு நேர்மாறாக, இயற்கை விவசாயம், ஆன்மிக சூழல், யோகா பயிற்சி, கல்வி போதனை என்று வாழும் ‘முனி’ பாத்திரமும் ரசிக்க வைக்கிறது. இரண்டிலும் வாழ்ந்திருக்கிறார் ஆர்யா.

அவருக்கு ஈடு கொடுத்து ‘மகா’வின் மனைவியாக நடித்திருக்கும் இந்துஜாவைச் சொல்லியே ஆக வேண்டும். அடித்தாலும், அணைத்தாலும், பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கணவனுடன் வாழ நேர்த்த ஒரு அபலைப்பெண்ணை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கும் இந்துஜாவின் இறுதி முடிவும் கலங்க வைக்கிறது.

அதேபோல் ‘முனி’யின் கதைக்குள் வரும் மஹிமா நம்பியாரின் பெண்ணியப் பாத்திரமும் அற்புத வார்ப்பு. அவரும் அதையுணர்ந்து நடிப்பில் நியாயம் செய்திருக்கிறார்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக ‘ரோகிணி’யிடம் ஆன்மிக ஆர்யா வளர்வதால் அவரும் அதே சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்பட்டு, அதன் காரணமாகவே அவருடன் பழகும் மஹிமாவுக்கு அவரது தந்தை வழிலியிருந்தே பிரச்சினை முளைக்க, அதை மஹிமா நேர்கொள்ளும் விதமும் நன்று.

நல்ல இயக்குநரின் படத்தில் நடிகர்களின் திறமைகளைத் தனித்தனியாகப் பட்டியல் போட வேண்டியதில்லை. அதன்படியே இதில் வரும் அரசியல்வாதி இளவரசு, மஹிமாவின் அப்பா ஜெயப்பிரகாஷ், காவல் அதிகாரியாக வரும் ‘சத்யா’ ஜி.எம். சுந்தர் மற்றும் தாதா அருள்தாஸ் அனைவருமே பாத்திரங்களில் துலங்கியிருக்கிறார்கள்.

அதிலும், நீண்ட இடைவெளிக்குப்பின் வந்திருக்கும் ‘சத்யா’ சுந்தர் அலட்டிக்கொள்ளாமல் நடித்துப் பெயரைத் தட்டிக்கொண்டு போகிறார். தன் காதல் மனைவியை அவர் அடைந்த கதை சொல்லும் காட்சி தியேட்டரில் அள்ளுகிறது.

ஒரு சீரியஸ் படம் காமெடி இல்லையே என்ற கவலை இல்லாமல் நகர்வது அபூர்வம். அது இந்தப்படத்தில் நடந்திருக்கிறது. அந்த அளவுக்குப் படத்தில் கரைந்து போகிறோம்.

கதை நகர்கிற வழியெல்லாம் சமூக, சாதிய, அரசியல் நடப்புகளை பல உணர்வுகளில் சொல்லிக்கொண்டே போகும் இயக்குநர் சாந்தகுமாரின் சாதுர்யம் ரசிக்க வைக்கிறது.

ஆனால், இத்தனை அருமையான படத்துக்குள் கடைசி கடைசியென்று பல கொலைகள் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதிரி என்றால் கொன்றுதான் தீர்க்க வேண்டுமா..?

தமன் இசை. தமனா என்று ஆச்சரியப்பட வைக்கும் பின்னணி இசை. இரு வேறு ஆர்யாக்களுக்கு இருவேறு தீம் இசை வைத்து இருவரும் இடம் மாறும் இடங்களில் இசையையும் மாற்றுவது இயக்குநரின் விருப்பமாக இருக்கலாம். அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு உலகத் தரம்.

இரு ஆர்யாக்களில் கடைசியாக ஒருவர் மட்டுமே மிஞ்சுகிறார். அவரிடம் இரண்டு ஆர்யாக்களின் அடையாளமும் இருக்க, அவரும் தன்னை ‘மகா முனி’ என்கிறார்.

பிறவிப்பெருங்கடல் நீந்துவதைப் போல் அந்த மகாமுனி ஆற்றைக் கடக்கும் டாப் ஆங்கிள் ஒற்றை ஷாட் எழுந்து நின்று கைத்தட்ட வைக்கிறது.

மகாமுனி – மனிதத்தை செதுக்கி இறைவனைக் காட்டிய முயற்சி..!

– வேணுஜி